மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னாள் அரசாங்கத்தில் பங்காளி கட்சிகளாக அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை இன்று மாலை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ள நிலையில் அமைச்சுப் பதவிகளோ, பிரதி அமைச்சுக்களோ இல்லாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கண்டியில் விடுத்த அழைப்பை ஏற்று நல்லெண்ண அடிப்படையில் அவருக்கு ஆதரவு வழங்க இவ்விரு கட்சிகளும் தீர்மானித்துள்ளன.

அதன்படி, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் பிரதி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார், சில்வெஸ்டர் எலன்டின் ஆகியோர் இன்று காலை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தமது நிபந்தனை அற்ற ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக உறுதி அளித்துள்ளதால் அவர்களின் திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும்  முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசனும் இந்த முடிவுவை எடுத்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக முன்னைய அரசாங்கத்தில் செயற்பட்ட போது டக்ளஸ் மற்றும் பிரபா ஆகியோர் அவருடன் சிறந்த உறவை பேணி வந்தனர்.

ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாழ். தேவி ரயில் போக்குவரத்து மற்றும் கொழும்பில் கூலி வீட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு மாடி வீடு போன்ற முக்கிய திட்டங்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வந்ததால் இவர்கள் மஹிந்த ராஜபக்ஷவிற்கே ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply