மைத்திரியின்வெற்றியைத் தீர்மானித்த 4 1.2 லட்சம்வாக்குகள் வட-கிழக்கில்பெற்றவை. வடக்கு கிழக்கு மைத்திரிவசம்: மட்டக்களப்பில் அதிகூடிய 81.62
நடந்து முடிந்த நாட்டின் 7ஆவது ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் பல செய்திகளை உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளது. நாட்டின் இனமத பேதங்கள் வேண்டாம் நீதியான சுதந்தி ரமான நல்லாட்சி வேண்டும் சிறுபான்மை யினரை ஒதுக்கக்கூடாது உண்மையான ஜனநாயகம் வேண்டும் போன்ற பல செய்தி களை உரத்துச்சொல்லியுள்ளது.
நிற்க இத்தேர்தலில் தமிழர்கள் குறிப்பாக சிறுபான்மைச்சமுகம் வாழும் வடக்கு கிழக்கு தேர்தல் முடிவுகள் மேலும்பல செய்திகளைச் சொல்லியுள்ளது. இம்முறை தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தமையே இச்செய்திக்குக்காரணமாகும்.
2005இல் மஹிந்த வெல்லவும் 2015இல் மஹிந்த தோற்கவும் காரணம் வடக்குகிழக்கு மாகாணமே அதிலும் தமிழ்மக்களே எனலாம்.
ஆம் 2005 இல் ரணிலுக்கு வாக்களிக்கவேண்டாமென விடுதலைப்புலிகள் கூறியமையினால் மஹிந்த வென்றார். 2015 இல் மைத்திரிக்கு வாக்களியுங்கள் என்று தமிழ்த்தரப்பு கூறியமையினால் மஹிந்த தோற்றார்.
சரி இனி வட-கிழக்கு தேர்தல் முடிவுகளை சற்று ஆய்வு செய்வோம்.
வடக்கில் யாழ்ப்பாணம் வன்னி ஆகிய இரு தேர்தல் மாவட்டங்களும் 14தேர்தல் தொகுதிகளும் கிழக்கில் திருமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களும் 10 தேர்தல் தொகுதிகளும் உள்ளன.
இத்தேர்தலில் 05 மாவட்டங்களையும் சேர்ந்த22 தேர்தல் தொகுதிகளிலும் உயிர்ப்பான வாக்களிப்பு இடம்பெற்றன. இப்பகுதிகளில்வாழும் சிறுபான்மைச்சமூகங்க ளான தமிழ், முஸ்லிம் மக்கள் கூடிய வீதத்தில் சுதந்திரமாக வாக்களித்தனர்.
இதன்படி வடக்கில் 3லட்சத்து 94ஆயிரத்து 991 வாக்குகள் மைத்திரிக்கும் 1லட்சத்து 8ஆயிரத்து 831 வாக்குகள் மஹிந்தவிற்கும் அளிக்கப்பட்டன.
கிழக்கில் 5லட்சத்து 83ஆயிரத்து 120 வாக்குகள் மைத்திரிக்கும் 2லட்சத்து 14ஆயிரத்து 769 வாக்குகள் மஹிந்தவிற்கும் அளிக்கப்பட்டன.
மொத்தமாக வடக்கு கிழக்கில் 9லட்சத்து 78 ஆயிரத்து 111 வாக்குகள் மைத்ரிக்கும் 3 லட்சத்து 23 ஆயிரத்து 600 வாக்குகள் மஹிந்தவிற்கும் அளிக்கப்பட்டன.
அதாவது வடக்கு கிழக்கில் மஹிந்தவைவிட 4லட்சத்து 54 ஆயிரத்து 511 வாக்குகளால் மைத்திரி முன்னணியில் நின்று தோற்கடித்துள்ளார்.
வெற்றியைத்தீர்மானித்த வாக்குகள்
முழு நாட்டிலே மைத்திரி பெற்ற வாக்குகள் 62லட்சத்து 17 ஆயிரத்து162 வாக்குகள் மஹிந்த பெற்ற வாக்குகள் 57லட்சத்து 68 ஆயிரத்து 90 வாக்குகள் அதாவது 4லட்சத்து 49 ஆயிரத்து 72 வாக்கு வித்தியாசத்தால் மைத்திரி வெற்றிபெற்றுள்ளார்.
இதில் விசேடம் என்னவென்றால் இந்த 449072 கூடிய வாக்குகளானது வடக்கு கிழக்கில் மஹிந்தவைவிட மைத்திரி கூடுதலாகப் பெற்ற 454511 வாக்குகளுக்கு அண்மித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன்காரணமாக மைத்திரியின் வெற்றியைத் தீர்மானித்த வாக்குகளாக வடகிழக்கு தமிழ் முஸ்லிம் வாக்குகள் திகழ்வதைக்காணலாம்.
இவ்வாக்குகள் நாட்டில் சிறுபான்மை மக்களை அரவணைத்துச்செல்லவேண்டும் என்ற செய்தியை சொல்கிறது.
மாவட்டரீதியில் யாழ்.முதலிடம் வட-கிழக்கில் மாவட்டரீதியில் பார்த்தால் யாழ்ப்பாண மாவட்டம்தான் அதிகூடிய வாக்குவித்தியாசத்தில் மைத்திரியை வெல்லவைத்தது.
அதாவது 1 இலட்சத்து 79ஆயிரத்து 120 வாக்குகளால் மஹிந்தவைவிட மைத்திரி கூடுதலாகப் பெற்றுள்ளார்.இதுவே வட-கிழக்கில் அதிகூடிய வாக்கு வித்தியாசமாகும்.
இரண்டாவதாக மட்டு.மாவட்டம் 1லட்சத்து 67ஆயிரத்து 791 மேலதிக வாக்குகளால் மைத்ரியை வெல்லவைத்தது. மூன்றாவதாக அம்பாறை மாவட்டம் 1லட்சத்து 12ஆயிரத்து 333 மேலதிக வாக்குகளால் மைத்திரியை வெல்லவைத்தது.
அடுத்து வன்னி மாவட்டம் 1லட்சத்து 7ஆயிரத்து 40 மேலதிக வாக்குகளாலும் திருமலை மாவட்டத்தில் 88ஆயிரத்து 227 மேலதிக வாக்குகளாலும் மைத்திரி மஹிந்தவை வென்றார்.
மைத்திரிக்கான வாக்களிப்புவீதம்
மட்டக்களப்பில் அதிகம்
மாவட்டரீதியில் மட்டு.மாவட்டத்தில்தான் அதிகூடிய 81.62 வீத வாக்குகள் மைத்ரிக்கு அளிக்கப்பட்டன.அங்கு 2லட்சத்து 9ஆயிரத்து 422 வாக்குகள் மைத்திரிக்கு அளிக்கப்பட்டன. மஹிந்தவிற்கு 4,1631வாக்குகள் அளிக்கப்பட்டன.
மைத்திரிக்கு மட்டு.மாவட்டத்திற்கு அடுத்தபடியாக வன்னி மாவட்டத்தில் 78.47வீத வாக்குகளும் அடுத்தபடியாக யாழ்.மாவட்டத்தில் 74.42 வீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
மாவட்டரீதியில் மட்டு.மாவட்டத்தில்தான் மைத்ரிக்கு அதிகூடிய வாக்களிப்பு வீதம் 81.62 இருந்தது. குறைந்த வாக்களிப்பு வீதம் அம்பாறைமாவட்டத்தில் 65.22 வீதம்.இது அம்பாறைத் தொகுதியின் விளைவாக ஏற்பட்டது எனக்கூறமுடியும்.
தொகுதி ரீதியில் மைத்திரி அலை
வட-கிழக்கிலுள்ள 24 தொகுதிகள் ரீதியில் பார்க்குமிடத்து கிழக்கில் மட்டக்களப்பு பொத்துவில், மூதூர், கல்குடா ஆகிய தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் கூடுதலான வாக்குகளால் மைத்திரி வெற்றியீட்டியுள்ளார். வடக்கில் முல்லைத்தீவில் 57,506 மேலதிக வாக்குகளால் மைத்திரி வெற்றியீட்டியுள்ளார்.
கிழக்கில் மட்டக்களப்புத் தொகுதியில் 76,306 மேலதிக வாக்குகளாலும் பொத்துவில் தொகுதியில் 59,122 மேலதிக வாக்குகளாலும் மூதூர் தொகுதியில் 50,400 மேலதிக வாக்குகளாலும் கல்குடா தொகுதியில் 50,005 மேலதிக வாக்குகளாலும் மைத்ரி வெற்றிவாகை சூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனைத் தொகுதியில் அதிகூடிய 89.81வாக்குகளும் முல்லைத்தீவுத் தொகுதியில் அடுத்தகட்ட 87.64 வீத வாக்குகளும் மன்னார்த்தொகுதியில் 85.13 வீத வாக்குகளும் மைத்ரிக்கு கூடுதலாக அளிக்கப்பட்டன.
மைத்திரிக்கு கல்முனைத் தொகுதியில் 90 வீத வாக்குகள்
அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனைத் தொகுதியிலுள்ள பதிவு செய்யப்பட்ட 71,254 வாக்காளர்களில் 50,903 வாக்காளர்கள் வாக்களித்தனர். 432 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. செல்லுபடியான வாக்குகள் 50,561 ஆகும்.
இந்த 50,561 வாக்காளர்களில் 45411 வாக்காளர்கள் மைத்திரிக்கு அதாவது 89.81 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டன.மஹிந்தவிற்கு ஆக 4683 வாக்குகளே அதாவது 9.26 வீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
கல்முனைத்தொகுதியில் தமிழ் முஸ்லிம் வாக்காளர்களே உள்ளனர். பெரும்பான்மையாக முஸ்லிம்கள் உள்ளபோதிலும் தமிழ் வாக்காளர்கள் சுமார் 23ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜ.தே.க. மற்றும் த.தே.
கூட்டமைப்பின் பிரசாரம் காரணமாக மைத்திரிக்கு 95வீதமான தமிழ்வாக்குகள் அளிக்கப்பட்டன என கருதஇடமுண்டு. அதன்படி கல்முனைத் தொகுதியில் மைத்ரி அமோக வெற்றியீட்டியதற்கு தமிழ் பேசும் இரு சமூகங்களும் பாரிய பங்களிப்பைச்செய்துள்ளன.
சேருவில, அம்பாறை தொகுதிகள் மஹிந்த வசம்
வட-கிழக்கிலுள்ள 24 தொகுதிகளில் திருமலை மாவட்டத்திலுள்ள சேருவில தொகுதியிலும் திகாமடுல்ல மாவட்டத்தில் அம்பாறை தொகுதியிலும் மஹிந்தவிற்கு கூடுதலான வாக்குகள் அளிக்கப்பட்டன.
அங்கு மஹிந்தவிற்கு முறையே 26716வாக்குகளும் 76409 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. அங்கு மைத்திரிக்கு முறையே 24833வாக்குகளும் 47658 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
தபால்வாக்குகளிலும் மைத்திரி முதலிடம்.
தபால்மூல வாக்குகளிலும்; 12மாவட்டங்களில் மைத்திரியும் 10மாவட்டங்களில் மஹிந்தவும் பெற்றுள்ளனர்.மொத்தமாக 265596வாக்குகளை மைத்திரியும் 253656 வாக்குகளை மஹிந்தவும் பெற்றுள்ளனர்.
வட-கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் தபால்மூல வாக்குகளில் மைத்திரி முதலிடம் பெற்றுள்ளார்.
வட-கிழக்கில் தபால்மூல வாக்களிப்பை ஆய்வு செய்தால் மைத்திரிக்கு யாழ்ப்பாணத்தில் 10,888 வாக்குகளும் வன்னியில் 4,750வாக்குகளும்மட்டக்களப்பில் 6,816 வாக்குகளும் திகாமடுல்லவில் 11,917 வாக்குகளும் திருமலையில் 8,323 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
மஹிந்தவிற்கு யாழ்ப்பாணத்தில் 4,607வாக்குகளும் வன்னியில் 2,940 வாக்குகளும் மட்டக்களப்பில் 1,606 வாக்குக ளும் திகாமடுல்லவில் 9,713 வாக்குகளும் திருமலையில் 6,207 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதிலும் மட்டு.மாவட்ட அரச ஊழியர்களே மைத்திரிக்கு கூடுதலான வாக்குவீதத்தை அளித்துள்ளனர்.
வட-கிழக்கிற்கு அப்பால் மலையகம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தமிழ்பேசும் சமூகத்தினரும் கணிசமான ஆதரவை மைத்தி ரிக்கு வழங்கியுள்ளனர் என்பதும் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல.
மொத்தத்தில் தமிழ்பேசும் வாக்காளர்களின் அதிகப்படியான வாக்குகளால் தெரிவான புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோடு அவர்களது தேவைகள் அபிலாசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய ஆவன செய்யவேண்டுமென மக்கள் எதிர் பார்க்கின்றனர்.
வி.ரி.சகாதேவராஜா.