பிறந்து ஒரு மாதமேயான பெண் குழந்தையின் அதிர்ஷ்டத்தால் கேரளாவை சேர்ந்த தம்பதியருக்கு சுமார் 23 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கிடைத்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த அனில் ஜனார்த்தன் என்பவர் துபாயில் வேலை செய்தபடி, தனது மனைவியுடன் அங்கேயே வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் இந்த தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. நித்தேரா என மகளுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்த அனில், கேரள மக்களின் வழக்கப்படி, குழந்தை பிறந்த 28-ம் நாள் நித்தேராவின் கழுத்துக்கு ஒரு சிறிய தங்கச் சங்கிலியும், கைகளுக்கு தங்க வளையல்களும்  வாங்குவதற்காக 20வது துபாய் ஷாப்பிங் திருவிழா அரங்கில் உள்ள ஒரு நகைக் கடைக்குச் சென்றார்.

நகைகளை வாங்கிய பின்னர் அவரிடம் மூன்று அதிர்ஷ்ட சீட்டுகளை கடைக்காரர்கள் தந்தனர். அவை மூன்றிலும் தனது மகள் நித்தேராவின் பெயரை பூர்த்தி செய்து அங்குள்ள பெரிய பெட்டியில் போட்டுவிட்டு அனில் வீடு திரும்பினார்.

சில நாட்களுக்கு பின்னர் அவரது கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

எதிர்முனையில் இருந்து பேசியவர்கள் உங்களுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் திர்ஹம் பரிசு கிடைத்துள்ளது. நீங்கள் அந்த தொகைக்கு எங்களிடம் இருந்து தேவையான நகைகளை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

தனது நண்பர்களில் யாரோ கேலிக்காக போன் செய்து கலாய்க்கிறாங்க.., என்று அந்த அழைப்பை சீரியசாக எடுத்துக் கொள்ளாத அனில், இது தொடர்பாக தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார்.

அந்த நண்பர் மேற்கொண்டு விசாரித்ததில் நித்தேராவின் பெயர் கொண்ட அதிர்ஷ்ட சீட்டுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் திர்ஹம் பரிசு கிடைத்துள்ளது உண்மைதான் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அதிர்ஷ்டக்கார மகள் மற்றும் மனைவியுடன் அந்த நகைக் கடைக்கு சென்ற அனில், சுமார் 23 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளோடு வீடு திரும்பினார்.

Share.
Leave A Reply