சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரான நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட பலரும், முன்வந்துள்ள நிலையில், ஐதேக தலைமையிலான கூட்டணிக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜின் வாஸ் குணவர்த்தன, உதித் லொக்குபண்டார மற்றும் முன்னாள் அமைச்சர்களான டியூ குணசேகர, ஜோன் செனிவிரத்ன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஆகியோரும் இன்று காலை மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

இவர்கள் இன்று காலை மைத்திரிபால சிறிசேனவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர்.

இதனால், மகிந்த ராஜபக்சவின் கீழ் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பன வலுவிழந்து வருகின்றன.

அதேவேளை, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான, சஜின் வாஸ் குணவர்த்தன, கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் உள்ளிட்டோருக்கு, புதிய அரசாங்கத்தில் இடமளிக்கப்படுவதற்கு ஐதேக கூட்டணிக்குள் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

சரத் பொன்சேகாவும், ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னான்டோவும், இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன், இவர்களை இணைத்துக் கொண்டால் தாம் கூட்டணியில் இருந்து வெளியேறி, தனியாக செயற்பட நேரிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கருணா, சஜின், அருண விதானகே, உதித் லொக்குபண்டார ஆகியோரை அரசாங்கத்துடன் இணைக்கும் நடவடிக்கைக்கு இவர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டால் தாம் தமது பதவிகளை விட்டு விலகுவோம் என்றும், சரத் பொன்சேகாவும், ஹரீன் பெர்னான்டோவும் எச்சரித்துள்ளனர்.

இதனால், மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply