கோவை: கோவை பீளமேடு அண்ணாநகர் விகாஸ் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (30). தனியார் நிறுவன இன்ஜினியர். இவரது மனைவி ரம்யா (19). கடந்த ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது.

கடந்த 11ம் தேதி இரவு தங்கராஜ் தனது வீட்டில் இருந்து அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு டிபன் வாங்க பைக்கில் சென்றார். அப்போது அவரை வழிமறித்த சிலர், முகவரி கேட்டனர்.

அதற்கு அவர் பதில் சொன்னபோது திடீரென அரிவாளால் வெட்டினர். தலை, கை கால்களில் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.

அவரின் சுண்டு விரல் துண்டானது. தங்கராஜின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால், கும்பல் தப்பியோடியது. காயமடைந்த தங்கராஜ் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். தங்கராஜின் மனைவி ரம்யா (19) நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார் அவரை கண்காணித்தனர்.

அவருக்கும், கோவை வீரகேரளம் பகுதியை சேர்ந்த சமீர் (19) என்பவருக்கு கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. சமீருடன் சேர்ந்து கணவரை கொல்ல ரம்யா கூலிப்படையை ஏவியது விசாரணையில் தெரியவந்தது.

சமீரின் நண்பரான கூலிப்படையை சேர்ந்த ரமேஷ்குமார் (24), ரவிச்சந்திரன் (32), சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முனியப்பன் (18), சுகர்கேன் ரோட்டை சேர்ந்த நடராஜ் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ரம்யா போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘‘ நாங்கள் இருவரும் கல்லூரி படித்தபோதே காதலித்தோம். ஆனால் என் பெற்றோர் தங்கராஜை எனக்கு திருமணம் செய்து வைத்தனர்.

சமீருடன் அடிக்கடி செல்போனில் பேசினேன். இது தெரிந்து கணவர் கண்டித்ததால் இதுபற்றி சமீரிடம் தெரிவித்தேன். அப்போது சமீர் என் கணவரை கொலை செய்து விடலாம் என்றார். இதற்கு நான் சம்மதித்தேன் ’’ என்றார்.

சமீர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘‘ கூலிப்படைக்கு ஸீ5 லட்சம்பேசி, முதல் கட்டமாக ஸீ1.6 லட்சம் மற்றும் 1.5 பவுன் நகையை கொடுத்தேன்.

நானும் கூலிப்படையுடன் தங்கராஜை தேடி சென்றேன். தங்கராஜ் ஓட்டல் அருகே சென்றபோது கூலிப்படையினர் பேச்சு கொடுத்தனர். நான் அரிவாளால் வெட்டினேன். கூட்டம் சேர்ந்து விட்டதால் தப்பி விட்டோம். ஆனால் போலீசில் மாட்டி கொண்டோம், ’’ என்றார்.

Share.
Leave A Reply