ஆரவாரம் எதுவுமில்லாத வகையில் அமைதி யான முறையில் ஆட்சி மாற்றம் நடந்தேறியிருக்கின்றது. ஜனாதி பதி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, இந் தத் தேர்தலின் போது என்ன நடக்கும், தேர்தலின் பின்னர் என்ன நடக்கும் என்று மிகுந்த அச்ச உணர்வே மக்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது.
அந்த உணர்வு வெளியில் தெரியத்தக்க வகையில் வெளிப்பட்டிருக்கவில்லை. போதிலும், மக்கள் மனங்களில் பெரும் சுமையாக, ஒரு முள்ளாக அந்த உணர்வு உறுத்திக் கொண்டிருந்தது.
தேர்தலுக்கான பரப்புரை காலத்தில் இடம்பெற்ற, தேர்தல் பிரசாரம் செய்யப்பட்ட முறைகள், அதற்காக அரச சொத்துக்களும், வளங்களும், அரச ஊழியர்களும் பயன்படுத்தப்பட்டமை என்பன மட்டுமல்லாமல், வடபகுதியில் மக்கள் மத்தியில் வெளிப்படையாகவே வெளி ப்படுத்தப்பட்டிருந்த அச்சுறுத்தல்கள் என்பனவும் நாட்டின் தென்பகுதி யில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த வன்முறைகளும் இந்த அச்ச உணர்வை மக் கள் மனங்களில் அதிகரிக்கச் செய்திருந் தது.
ஆனால், எதிர்பார்த்த வகையில் அசம்பாவிதங்கள் வன்முறைகளின்றி தேர் தல் நடைபெற்று அதன் ஊடாக ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருப்பதன் ஊடாக இலங்கை ஆசியாவின் அதிசயமாக மாறியிருக்கின்றது என்றே கூற வேண்டும்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடனும், நிறைவேற்று அதிகார வல்லமையுடனும் யுத்தத்தை வெற்றிகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, யுத்தத்தின் பின்னர் இந்த நாட்டை ஆசியாவின் அதிசயமாக்கப் போவதாகசூளுரைத்திருந்தார்.
ஆனால் இரண்டு பருவ காலம் அவர் ஜனாதிபதியாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்திருந்த போதிலும், நாட்டை ஆசியாவின் அதிசயமாக்க அவரால் முடியவில்லை.
ஆனால், திரைமறைவில் அமைதியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக் ஷவின் சாம்ராஜ்ஜியத்தில் இருந்த மைத்திரிபால சிறிசேனவை அங்கிருந்து இரகசியமாகப் பிரித்தெடுத்து, மஹிந்தவுக்கு எதிராகப் பொது வேட்பாளராகத் தேர்தலில் களமிறக்கி, பெரும்பான்மையான மக்களின் ஆதரவோடு, அவரை ஜனாதிபதியாக அரியாசனத்தில் ஏற்றியிருக்கின்றார்.
தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் அமைதியான முறையில் பதவியேற்று, அடுத்தடுத்து ஆக வேண்டிய காரியங்களை மேற்கொண்டிருக்கின் றார்.
தேர்தல் பிரசாரத்தின்போது மக்களிடம் முன்வைத்திருந்த தனது 100 நாள் வேலைத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவர் முன்னெடுக்கத் தொடங்கியிருக்கின்றார்.
அதேநேரம், தேர்தல் பிரசார மேடைகளில் வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்கப் போவதில்லை என பேசியிருந்த புதிய ஜனாதிபதி, தமிழ் மக்கள் ஆறுதல் அடையத்தக்க வகையில், சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றார்.
இது தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.
தேர்தல் பிரசார காலத்தில் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில், அரச தரப்பினர் இராணுவத்தினரைப் பயன்படுத்தியிருந்தனர்.
ஆனாலும், வாக்களிப்பு தினத்தன்று இரா ணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு, பொலிஸாரும், பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிரடிப் படையினருமே கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தேர்தல் முடிந்த பின்னரும், இராணுவம் வெளியில் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்தும் அவர்கள் முகாம்களுக்குள்ளேயே இருக்கின்றனர்.
இந்த நடவடிக்கையானது வடபகுதி மக்கள் மத்தியில் பெரும் ஆறுதலை அளி த்திருக்கின்றது. அதேநேரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு இடைஞ்சலாக இருந்ததாகக் கருதப்பட்ட, இராணுவ பின்னணியைக் கொண்ட ஆளுநர் சந்திரசிறிக்குப் பதிலாக சிவில் செயற்பாட்டுப் பின்னணியைக் கொண்ட எச்.எம்.ஜி.எஸ்.பளிகக்கார புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றார் என்ற செய்தி யும் வெளியாகியுள்ளது.
அது மட்டுமல்லாமல், ஆளுநரின் கைப்பாவையாகச் செயலாற்றிவந்த வடமாகாண சபையின் பிரதம செயலாளரையும், அரசியல் செல்வாக்குக்கு உட்பட்டு பக்கச்சார்பாக நடந்து கொண்டதாகக் கருதப்படுகின்ற அரசாங்க உயரதிகாரிகள் சிலரையும் இட ம் மாற்றி புதியவர்களை நியமிப்பதற்கு புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருப் பதாகத் தெரி விக்கப்பட்டிருக்கின்றது.
இதுவும் வட பகுதி மக்களை ஆறுதல் அடையச் செய்திருக்கின்றது.
அதேநேரம், ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற மூன்று தினங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசின் முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சுக் கள் நடத்திய தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடம், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த உறுதிமொழி, தமிழ் மக்கள் புதிய ஜனாதிபதியின் தலைமையிலான நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைப்பத ற்கு வழி வகுத்திருக்கின்றது.
சிக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன
ஆடம்பரமில்லாமல், வெறும் ஆறாயிரம் ரூபா செலவில் ஜனாதிபதி பதவியேற் கும் வைபவத்தை எளிமையாகச் செய்து முடித்து, அடிமட்டத்தில் உள்ள மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படும் என உறுதியளித்து,
ஊழல்கள் ஒழிக்கப்படும், அதிகாரத் துஷ்பிரயோகம், முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இரக்கமின்றி தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய்துள்ள புதிய ஜனாதிபதி தான் கூறியவற்றை நடைமுறைப்படுத்து வார் என்று நாட்டு மக்கள் நம்பிக்கையோடு எதிர்பார்க்கத் தொடங்கியிருக்கின் றார்கள்.
யாரையும் அரசியல் ரீதியாகப் பழிவாங் கப் போவதில்லை என உறுதியளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது செயற்பாடுகளுக்கு நாட்டு மக்க ளும், சகல அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கின்றார்.
இதனையடுத்து, மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்தில் அவருடன் மிக நெருக்கமாகச் செயற்பட்ட அரசியல்வாதிகளும், புதிய ஜனாதி பதிக்கு ஆதரவு வழங்கி, அவருடன் இணைந்து செயற்பட முன்வந்திருக்கின்றார்கள்.
புதிய அமைச்சரவையை அமைப்பதிலிருந்து முக்கியமான பதவிகளில் முன்னர் இருந்தவர்களை மாற்றி புதியவர்களை நியமிப்பது வரையிலான நடவடி க்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு தருணத்தில், இவ்வாறு முந்திய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் புதிய ஜனாதிபதியுடன் இணைவதென்பது, அவருக்குப் பல வழிகளில் சிக்கல்களை ஏற்படுத்த வழி வகுத்திருக்கின்றது.
தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தவர்கள், அவருடைய ஆட்சியின் கீழ் அதிகாரப் பலத்தையும், அரசியல் செல்வாக்கையும் அனுபவித்த பலர் எதிரணி வேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன பக்கம் சேர்ந்தார்கள்.
கட்சி விட்டு கட்சி மாறினார்கள். இப்போது, முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, அவருடைய நெருங்கிய சகாக்கள் புதிய ஜனாதிபதியு டன் இணைவதைப் பொதுமக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
தேர்தலுக்கு முன்னர் அதிகாரத்தில் இருந்து போது, பாகுபாடாக நடந்து கொண்டது மட்டுமல்லாமல் பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் புதிய நிர்வாகத்திலும் அதிகார பலமுள்ளவர்களாக மாறும்போது, அவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள்
– புதிய ஜனாதிபதி கூறுவதைப் போன்று ஊழலற்ற, முறைகேடுகள் அற்ற வகையில் செயற்படுவார்களா, அதற்கு என்ன உத்தரவாதம் என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.
தற்போது முன்னைய அரசாங்கத்தின் தீவிர விசுவாசிகளாக இருந்தவர்கள் புதிய நிர்வாகத்தில் பதவிகளையும், அதிகாரங்களையும் பெற்றுக்கொள்வதற்காகவே புதிய ஜனாதிபதியுடன் இணைய முயற்சிக்கின்றார்கள் என்ற சந்தேகம், புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காகத் தேர்தலின்போதும், அதற்கு முன்னரும் தீவிரமாக உழைத்தவர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது.
இதனால் அவர்கள் கொதிப்படையத் தொடங்கியிருக்கின்றார்கள். இதனால், புதிய ஜனாதிபதியும், புதிய பிரதமரும் நெருக்கடிக்கு உள்ளாக நேர்ந்துள்ளதாகத் தெரிகின்றது.
புதிய கூட்டு அரசாங்கத்தை – ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்கும்போது, பலரையும் உள்வாங்க வேண்டிய தேவை இருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண் டும்.
அதனைத் தவிர்க்க முடியாது. ஆனால், முன்னர் அதிகாரத் துஷ்பிரயோக த்தில் ஈடுபட்டிருந்தவர்கள். ஊழல்களுக் குத்துணையாகச் செயற்பட்டவர்கள், அப்படியே புதிய நிர்வாகத்தில் இடம்பெறுவதை எவரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
முன்னைய அரசாங்கத் தில் அவர்கள் செயற்பட்ட முறைகளு க்கு பொறுப்பு கூறாமலும், அதற்குரிய பொறுப்பை ஏற்காமலும், – எந்தவிதமான விசாரணைகளுமின்றி மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் பங்கேற்பதை புதிய ஜனாதிபதியின் தீவிர விசுவாசிகள் விரும்பவில்லை.
இந்த நிலைமையை மிகவும் நிதானமாகவும், சரியான முறையிலும் கையாள வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு ஏற்பட்டிருக்கின்றது.
அதனை அவர்கள் சரியான முறையில் கையாளத் தவறினால் புதிய நிர்வாகத் தின் மீது மக்கள் நம்பிக்கை வைப்பதுகடினமான காரியமாகிவிடும்.
பல நல்ல அம்சங்களைக் கொண்டுள்ள 100 நாள் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதிலும் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.
இது ஒரு பக்கம் இருக்க, யுத்தவெற்றியையும், இனவாதத்தையும் முதன்மைப்படுத்தி ஊழல்கள் மலிந்த நிலையில் சுமார் ஒரு தசாப்த காலம் நடந்து வந்த நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும்போது, அப்போது செய்யப்பட்ட பிழைகளைத் திருத்துவதற்கு முற்படும்போது பல சவால்களுக்கு முகம் கொடுக்கத்தான் வேண்டும்.
அதனைத் தவிர்க்க முடியாது. இந்தக் கைங்கரியம் இலகுவானதல்ல. அந்த கடினமான காரியத்தை முன்னெடு ப்பதற்கு கூட்டுப் பொறுப்புடன் அனைவரும் செயற்பட வேண்டியது அவசியம். பொறுமையாகவும் திட்டமிட்ட வகையி லும் செயற்பட வேண்டியதும் முக்கியம்.
இதனை புதிய ஜனாதிபதியும், புதிய பிரதமரும் நிச்சயம் அறிந்திருப்பார்கள். அதற்கேற்ற வகையில் அவர்கள் செயற்பட வேண்டியது முக்கியமாகும்.
கட்சி அரசியலில் ஏற்பட்டுள்ள நிலைமைகள்
இது ஒருபக்கம் இருக்க, கட்சி அரசியலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளும் புதிய ஜனாதிபதிக்கு மேலும் சவால்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலானது, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்ட பாரிய வெடிப்பின் போட்டிக்களமாகவே அமைந்திருந்தது.
முக்கிய வேட்பாளராக நேரடிப் போட்டியில் ஈடுபட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தவர்.
இப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தக் கட்சியின் செயலாளராக அவருடன் செயலாற்றிய வர். இருவருக்கும் இடையிலேயே தேர்த லில் கடும்போட்டி நிலவியது.
தேர்தல் முடிந்த பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு உரிமை கோருவதில் போட்டி ஏற்பட்டிருக்கின்றது. புதிய ஜனா திபதியின் ஆதரவாளர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக மைத்திரிபால சிறிசேனவைத் தெரிவு செய்திருக்கின்றார்கள்.
அதேவேளை, அந்தக் கட் சியின் தலைவர் தானே என்று மஹிந்த ராஜபக் ஷ உரிமை கோரி, தனது ஆதரவாளர்களுடன் செயற்பட முற்பட்டிருக்கின்றார்.
இந்த நிலைமையானது, புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஜனாதிபதி என்ற பொறுப்பில் இருந்து மேற்கொள்ள வேண்டிய பல்வேறு செய ற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், அவற்றில் கூடிய கவனம் செலுத்த முடியாத வகையில் கஷ்டம் கொடுப்பதாகவும் அமையும் என்பதில் சந்தேகமி ல்லை.
பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ள 100 நாள் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பாக செய்து முடிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டிய வேலைகளை அவர் பட்டியலிட்டு 100 நாள் வேலைத்திட்டமாக அறிவித்திருந்தார்.
எனவே தேர்தலின்போது நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை, அவரே வரையறுத்துக் கொண்ட 100 நாட்களுக்குள் கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது.
ஏனெனில் ஜனாதிபதி தேர்தல் மட்டுமே நடந்து முடிந்துள்ளது. இன்னும் 3 அல்லது நான்கு மாதங்களில் ஒரு பொதுத் தேர்தலுக்கு அவர் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
இந்த நிலைமையில் ஜனாதிபதியாகப் பதவியேற்றால் செய்து முடிப்பேன் என கூறியவற்றை உறுதியளித்தவற்றைச் செய்து முடிக்காவிட்டால், வரப்போகின்ற பொதுத்தேர்தலில் தனது கட்சி யைச் சேர்ந்தவர்களை வெற்றிபெறச் செய்ய முடியாது.
நாட்டு மக்களுக்கு அளித்துள்ள உறுதிமொழிக்கமைவாக 100 நாள் வேலைத் திட்டத்தைச் செய்து முடிக்கின்ற அதேநேரத்தில் சிறிலங்கா சுதந் திரக் கட்சிக்கு உரிமை கோரி போட்டியிட்டுக் கொண்டிருக்கின்ற மஹிந்த ராஜ பக் ஷவின் செயற்பாடுகளை முறியடிக்க வேண்டியதும் முக்கிய தேவையாக இருக் கின்றது.
ஜனாதிபதி தேர்தலில் பல எதிர்க்கட்சிக ளும், எதிர் அணிகளும் ஒன்றிணைந்து அவரை பொது வேட்பாளராகக் களத்தில் நிறுத்தியிருந்தன.
இதன் காரணமாக அவர் ஒரு கட்சியைச் சார்ந்தவராக அல்லது ஒரு கட்சியின் தலைவர் என்ற அரசியல் தள த்தில் இருந்து தேர்தலில் போட்டியிட வேண்டிய தேவை இல்லாமல் இருந்தது.
ஆனால் வரப்போகின்ற தேர்தலில் அவருக்கு சார்பானவர்கள் ஓர் அரசியல் கட்சியின் ஊடாகவே பாராளுமன்றத்திற்குத் தெரிவாக வேண்டிய கட்டாயத் தேவை எழுந்திருக்கின்றது.
இதனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உரிமையை நிலைநாட்டுவதற்குரிய செயற்பாடுகளை அடு த்து வருகின்ற சில மாதங்களில் அவர் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத் தேவையும் ஏற்பட்டிருக்கின்றது. எனவே, கடினமான பல பணிகள் வரிசையாக அணிவகுத்து, புதிய ஜனாதிபதியின் கவனத்தையும் செயற்திறமையையும் எதிர்நோக்கியிருக்கின்றன.
உள்ளூர் விசாரணைகள்
அரசியல் ரீதியாக எவரையும் பழிவாங் கப் போவதில்லை என உறுதியளித்துள்ள புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதேபோன்று, சர்வதேச விசாரணைக்கு எவரையும் உள்ளாக்கவிடமாட்டேன் என் றும் உறுதியுரைத்திருக்கின்றார்.
மனித உரிமை மீறல்கள் மனிதாபிமான சட்ட மீறல்களை உள்ளடக்கிய போர்க்குற்றம் தொடர்பிலான விசார ணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என்ற முன்னைய ஜனாதி பதியின் நிலைப்பாட்டையே புதிய ஜனாதிபதியும் முன்னெடுப்பார் என்பது இதன் ஊடாகத் தெரிகின்றது.
அதேநேரம் நம்பகமுள்ள உள்ளூர் விசாரணைப் பொறிமுறையொன்றை அமைத்துச் செயற்படப் போவதாக அவர் கூறியிருக்கின் றார். அதனை அவர் எவ்வாறு முன்னெ டுக்கப் போகின்றார் என்பது தெரியவி ல்லை.
அதேநேரம் ஊழல், மோசடிகள், முறை கேடுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன கூறியுள்ளார்.
எனவே, ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் மூலம் தனது தேர்தல்கள எதிரியும், அரசியல் கட்சி ரீதியான எதிரியுமாகிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு களைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து அவரை, செயலூக்கம் அற்றவரா க்குவதற்கான நடவடிக்கைகளை முன் னெடுக்கவும் கூடும். இதனை அவர் செய்யமாட்டார் என்று இப்போதைய அரசியல் நிலைமைகளில் சொல்ல முடி யாது.
எது எப்படியானாலும், புதிய ஜனாதிபதி யாகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து, தேர்தலில் அவ ருக்கு அமோகமாக வாக்களித்துள்ள சிறு பான்மையினராகிய தமிழ், முஸ்லிம் மக் கள் பல நல்ல விடயங்களை எதிர்பார்த் திருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல், சிங்கள மக்களும்கூட பலவற்றை எதிர்பா ர்த்திருக்கின்றார்கள்.
எனவே, நாட்டு மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றத்தக்க வகையில்,இனங்களுக்கிடையில் ஐக்கி யத்தையும் உண்மையான புரிந்துணர் வையும் ஏற்படுத்தி ஒரு நல்லாட்சியைக் கொண்டு நடத்த வேண்டிய பொறுப்பு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன மற்றும் புதிய பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க ஆகியோர் முன்னிலையில் மலை போல எழுந்து நிற்கின்றது. ஆகவே, அவர்கள் தமது பொறுப்பை சரியான முறையில் நிறைவேற்றுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.