ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஏழு நாட்கள் நகர்ந்துவிட்டன. இந்த மாற்றத்தினூடாக மலர்ந்துள்ள புதிய ஆட்சியில் ஒருபுறம் நூறு நாள் வேலைத்திட்டத்தை செயற்படுத்தவும் தேர்தல் கால வாக்குறுதிகளைக் காப்பாற்றவுமென பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடரில் அமைச்சரவை அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் அமைச்சுக்களுக்கான செயலாளர்களும் நிறுவனத் தலைவர்களும் நியமிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மறுபுறம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் விசுவாசிகளாக பரிணமித்த பலர் அவரைவிட்டு விட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.
மாகாண,மாநகர, நகர, பிரதேச சபைகளின் ஆட்சி மாற்றங்களுக்காக தமது இணைவுகளை ஆயுதமாகவும் பேரம் பேசலுக்கான கருவியாகவும் பயன்படுத்திக்கொண்டிருக்கையில், கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்றதாக கருதப்படும்–கண்டுபிடிக்கப்படும் பல்வேறு ஊழல் மோசடிகளுக்கெதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமும், குற்றப்புலனாய்வுப் பிரிவிடமும் முறைப்பாடுகளும் அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நடவடிக்கைகளும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
கடந்த அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக் ஷவின் குடும்ப உறுப்பினர்களால் புரியப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சிமிக்க புது புது விடயங்கள் நாளாந்தம் சமூக வலைத்தளங்களையும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களையும் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன.
நாட்டின் நடப்புக்களை நாளாந்தம் அறிந்துகொள்வதற்காக வாசகர்கள் பத்திரிகைகளை வாங்குவதற்காக பத்திரிகை விற்பனை நிலையங்களை காலை வேளையிலேயே முகாமிட்டிருப்பதையும் சமூக இணையத்தளங்களை இளைஞர்களும் கணினி அறிவுடையோரும் நிமிடத்திற்கொருமுறை திறந்து பார்ப்பதையும் காணக்கிடைக்கிறது.
இவ்வாறு தேர்தல் நிறைவடைந்த நாள் முதல் நகரும் நாட்கள் எல்லாம் மிக விறுவிறுப்பாக நகர்வதையும் சம்பவங்கள் இடம்பெறுவதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
இந்த விறுவிறுப்பாக நகரும் நாட்களை உருவாக்கிய, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒன்றிணைந்த மக்கள், மக்களால் ஒன்றிணைந்த மக்கள் பிரதிநிதிகள் பதவிகளுக்காக ஆடும் ஆட்டங்களைக் கண்டு மெய்மறந்து நிற்கின்றனர்.
குறிப்பாக, சிறுபான்மை சமூகத்தில் அதிலும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளின் நிலைமை பல கேள்விக் கணைகளை முஸ்லிம் சமூகத்தில் சமகாலத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. அதில் ஒன்றுதான் ஆட்சிமாற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் கிழக்கு மாகாண சபைக்கான ஆட்சி தொடர்பாகவும் முதலமைச்சர் பதவி குறித்தும் எழுந்துள்ள கேள்விக் கணைகளாகும்.
பதவியும் சமூக ஒற்றுமையும்
தற்போது வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏணைய மாகாணங்களின் ஆட்சி அதிகாரம் மாறும் நிலையில் உள்ளது. ஊவா மாகாண சபையின் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
மேல், வடமேல், மத்திய, கிழக்கு மாகாண சபைகளின் ஆட்சியிலும் மாற்றங்கள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழர்களும் முஸ்லிம்களும் அதிகம் வாழும் கிழக்கு மாகாண ஆட்சியிலும் மாற்றம் வரப்போகிறது.
இந்த ஆட்சி மாற்றத்தின்போது யார் முதலமைச்சர் பதவி வகிப்பது? எந்த இனத்திற்கு முதலமைச்சர் பதவி போகப்போகிறது என்ற கேள்வி தற்போது தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பதவி பெயர்களால் தமிழ்–முஸ்லிம் மக்களிடையேயான ஒற்றுமையில் சிதைவு ஏற்படாது பாதுகாக்க வேண்டியது இரு சமூக, அரசியல் தலைமைகளினது பொறுப்பாகும் அவை விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் அணுகப்பட வேண்டும்.
2012ஆம் ஆண்டின் சனத் தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனையோர் அடங்கலாக 1,551,381 மக்கள் தொகையினர் வாழ்கின்றனர். இவர்களில் தமிழ் மக்கள் 617,295 பேரும் முஸ்லிம்கள் 569,738 பேரும் சிங்களவர்கள் 359,136 பேரும் அடங்குவதுடன் ஏனையவர்களாக 5,212 பேர் உள்ளனர்.
கிழக்கில் வாழ்கின்றன மக்களின் விகிதாசாரத்தைப் பார்க்கின்றபோது 39.79 வீதமான தமிழர்களும் 36.72 வீதமான முஸ்லிம்களும் 23,15 வீதமான சிங்களவர்களும் உள்ளனர்.
வடக்கிலிருந்து கிழக்கு பிரிந்தபின் முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தல் 2008ஆம் ஆண்டு நடைபெற்றது. இததேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்திருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் இணைந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இணைந்து போட்டியிட்டன.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்காக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டதுடன் மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் ஜனநாயக தேசிய முன்னணியும் தனித்தனியாகப் போட்டியிட்டன.
308,886 வாக்குகளைப் பெற்று கிழக்கு மாகாண சபைக்கான 37 ஆசனங்களில் 20 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்று கிழக்கு மாகாண சபையை ஆட்சி செய்தது. பிள்ளையான் என்றழைக்கப்டும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இச்சபையின் முதலமைச்சராக 5 வருடங்கள் பதவி வகித்தார்.
2012ஆம் ஆண்டு நடைபெற்ற 2ஆவது கிழக்கு மாகாண சபையின்போது பிரதான கட்சிகளாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கியதேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி அவற்றுடன் சில சிறிய கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டன.
அம்பாறை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் போட்டியிட்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டது.
கிழக்கின் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 92,530 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைப் பெற்றது.
இதில் 3 ஆசனங்கள் தேசிய காங்கிரஸுக்குரியது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 64,190 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை ஐ.ம.சு.கூட்டமைப்பு பெற்றுக்கொண்டது இதில் 3 ஆசனங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குரியது.
ஒன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்குரியது. திருகோணமலை மாவட்டத்தில் 43,324 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை ஐ.ம.சு. கூட்டமைப்பு பெற்றுக்கொண்டது. ஆக, 12 ஆசனங்களுடன் 2 போனஸ் ஆசனமும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு கிடைத்தது,
ஆனால், தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 3 ஆசனங்களும் தேசிய காங்கிரஸின் ஒரு ஆசனமும் மற்றும் ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஒரு ஆசனமும் தற்போதைய ஜனாதிபதியின் பக்கம் உள்ளன ஐ.ம.சு.கூட்டமைப்பின் மொத்தம் 14 ஆசனங்களில் 5 ஆசனங்கள் இழக்கப்பட்டுள்ளன. ஆக 9 ஆசனங்களே கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பக்கம் உள்ளது.
கிழக்கின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இததேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக 193,827 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களைப் பெற்றுக் ோகண்டது.
அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 132,917 வாக்குகளைப் பெற்று மொத்தமாக 7 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 74,901 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது. அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட தேசிய சுதந்திர முன்னணி 95,22 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது,
தற்போதைய நிலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பக்கமே அதிகூடிய 11 ஆசனங்கள் உள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் 7 ஆசனங்களும் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்துள்ளதாகக் கருதப்படும் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனின் ஆசனம் உட்பட மு.கா.பக்கம் 8 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 4 ஆசனங்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 3 ஆசனங்களும் மற்றும் ஐ.ம.சு. கூட்டமைப்பிலிருந்து விலகிய திருகோணமலை மாவட்ட உறுப்பினர் பிரியந்த பிரமேகுமாரவின் ஒரு ஆசனம் உட்பட்ட மத்திய தேசிய அரசாங்கத்தின் பக்கம் மொத்தமாக 27 ஆசனங்கள் உள்ளன.
இதில் ஆசனங்கள் வரிசையில் நோக்கும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் 11 ஆசனங்கள் உள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் 8 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்துள்ள கட்சிகளின் ஆசனங்களைச் சேர்த்து 8 ஆசனங்களும் உள்ளன.
கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படுமாயின் எந்தக் கட்சிக்கு எந்தப் பதவி வழங்குவது என்ற இடியப்பச் சிக்கல் ஏற்படுவது யதார்த்தம். மக்களினதும் மாகாணத்தினதும் எதிர்கால நலன் கருதி பதவி விடயத்தில் விட்டுக்கொடுப்புகள் அவசியம் என்பதை சகல தரப்புக்குகளும் புரிந்துணர்வுடன் ஏற்றுக்கொள்வது முக்கியமானது.
கிழக்கு மாகாணம் மூவின மக்களையும் கொண்ட ஒரு மாகாணம் என்பதனால் அம்மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு செயற்படுவதற்கான பதவிப் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்படுவது அவசியம். ஆனால் தற்போது எழுந்துள்ள கேள்வி, யாருக்கு எந்த எந்தக் கட்சிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்பதாகும்.
கிழக்கு மாகாண சபைக்கு இன்னும் ஏறக்குறைய இரு வருட ஆட்சிக்காலமே உள்ளது. முதலமைச்சர் பதவிக்காக 3 பிரதான கட்சிகளுக்கிடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இந்தப் பதவிப் போட்டியானது கட்சிகளுக்கிடையிலும் சமூகங்களுக்கிடையிலும் மாவட்டங்களுக்கிடையிலும் பிரதேசங்களுக்கிடையிலும் முரண்பாடுகளையும் வாதப் பிரதிவாதங்களையும் பிரதேச வாதங்களையும் ஏற்படுத்தாது இருப்பதில் தேசிய அரசாங்கம் கவனம் செலுத்துவது அவசியமாகும். அத்துடன் கட்சிகளும் இதில் அக்கறைகொள்வது ஆரோக்கியமான எதிர்காலத்தை இம்மாகாணத்தில் ஏற்படுத்த வழிவகுக்கும்.
ஆளுனர் மற்றும் முதலமைச்சர் பதவிகளில் ஆளுனர் பதவியை ஒரு பெரும்பான்மை சிங்கள பிரதிநிதிக்கு வழங்குவதுடன், முதலமைச்சர் பதவியை எஞ்சியிருக்கும் இரு வருட ஆட்சிக் காலத்தில் ஒரு வருடத்திற்கு தமிழ் தரப்புக்கும் மற்றுமொரு வருடத்தை முஸ்லிம் தரப்புக்கும் வழங்க அரசாங்கம் முடிவுசெய்யுமாயின் அம்முடிவானது பிரச்சினைகள் உருவாகுவதைத் தவிர்க்கும்.
அத்தோடு வழங்கப்படும் பதவிகள் சமூக ஒற்றுமையைச் சிதைக்காது சமூக மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்குமெனவும் அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுவது கவனத்திற்கொள்ளத்தக்கது
இந்நிலையில், ஒரு வருட முதலமைச்சர் பதவி தமிழ் தரப்புக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்குச் செல்வதில் பெரியளவில் பிரச்சினைவாராது. கட்சி தீர்மானிக்கும் ஒரு கூட்டமைப்பு உறுப்பினர் முதலமைச்சராகலாம் ஆனால், முஸ்லிம் தரப்பில் ஒரு வருட கால முதலமைச்சர் பதவி யாருக்கு அல்லது எந்தக் கட்சிக்கு வழங்குவது என்ற பிரச்சினை எழலாம்.
அந்த வாய்ப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்படுமாயின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களில் யாருக்கு முதலமைச்சர் பதவி வழங்குவது என்ற திரிசங்கு நிலை மு.கா.வின் தலைமைக்கு ஏற்படுவது திண்ணம்.
தலைமைத்துவத்தின் ஆளுமையுள்ள முடிவிலேயே பிரதேசவாதமும் பிரிவினைகளும் ஏற்படாதிருப்பதைத் தவிர்க்கும். ஆட்சி மாற்றம் பிரதேச ஒற்றுமையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது.
மக்கள் நலனும் கோரிக்கையும்
ஆட்சி மாற்றம் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பது உண்மையென்றபோதிலும் அம்மாற்றமானது பதவிகளிலும் ஆசையையும் அதிருப்பதியையும் ஏற்படுத்திவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
தங்களை மக்கள் பிரதிநிதிகளாக ஆக்கி அலங்கரித்தவர்கள் மக்களின் குரல்களுக்கு மதிப்பளிக்காது கடந்த 7ஆம் திகதிவரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து செயற்பட்டு அவரின் வரப்பிரசாதங்களை அனுபவித்துவிட்டு 8ஆம் திகதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து நாங்களும் ஆட்சியிலேதான் இருக்கிறோம்.
புதிய ஆட்சிக்கு எங்களது ஆதரவும் உண்டு என சில அரசியல்வாதிகள் வாய்கிழிய ஊடகங்களுக்கு முன்னால் தோன்றி இந்நாட்டு மக்களிடம் கூறிவருகிறார்கள்.
இவை அவர்கள் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்காளிகளாக பரிணமிப்பதற்கு மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் என மக்கள் பேசிக் கொள்வதையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
நாட்காலிகள் மீதான ஆசை நடு வீதியில் தள்ளியிருக்கும் நிலைமையை நாம் கண்டுள்ளோம். வரிச்சுமைகளினால் மக்களை வாட்டிவதைத்து, ஏழ்மைக்குத் தள்ளி, ஒவ்வொருவரையும் கடனாளிகளாக ஆக்கி ஆட்சி மேற்கொண்ட அரசாங்கத்தை இறைவன் சின்னாபின்னமாக்கியுள்ளான் என்ற வரலாற்றை வாசித்து கொண்டிருக்கும் இந்நாட்களில் பதவிகளைப் பெறுவதில் மக்கள் பிரதிநிதிகள் முண்டியடிப்பது வேதனையளிக்கிறது.