கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த தபால் ரயிலில் வந்த மூவருக்கு மயக்கமருந்து கலந்த ரொட்டியைக் கொடுத்து அவர்களிடமிருந்த பணம், நகை என்பன அபகரிக்கப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐ.அனீஸ் வயது 32, ஏ.றுபிஸா வயது29, ஐ.இன்ஸா வயது 15 ஆகிய மூவரும் கொழும்பு கிறான்பாஸில் இருந்து கிளிநொச்சிக்கு புதன்கிழமை (14) மாலை ரயிலில் ஏறியுள்ளனர்.

குருநாகலில் இருந்து ஏறிய மூன்று பேர் இவர்களுடன் உரையாடிக்கொண்டு வந்துள்ளனர். தரிப்பிடமொன்றில் குருநகரிலிருந்து ஏறிய மூவரில் ஒருவர் ரொட்டி வாங்கி வந்து, இவர்கள் மூவருக்கும் உண்ண கொடுத்துள்ளார்.

ரொட்டியை உண்ட மூவரும் மயக்கமடைந்த நிலையில் ஒருவருடைய மோதிரமும் பையில் இருந்த 10 ஆயிரம் ருபாய் பணமும் களவாடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இறங்க வேண்டிய இவர்கள் மயக்க நிலையில் யாழ் புகையிரத நிலையத்தை வந்தடைந்தனர். மயங்கிய நிலையில் இருந்த இவர்களை பொலிஸார் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

இவர்களுக்கு உண்ணக்கொடுத்த உணவை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் யாழ்ப்பாண பொலிஸார் கூறினர்.

Share.
Leave A Reply