பாரிஸ் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதலை நடத்தியவர்கள் பற்றிய சந்தேகங்கள் இன்னும் ஓயவில்லை. தாக்குதல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், பிரெஞ்சு ஜனாதிபதி ஹோலந்த், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும் என்று கூறியுள்ளார். ஏனெனில், அந்த தடைகளினால் பிரெஞ்சுப் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.

நேட்டோ இராணுவக் கூட்டமைப்பின் கீழ், ஐரோப்பிய கூட்டாளிகளை ஒன்று சேர்த்து வைத்திருப்பதன் மூலம் தான், ஐரோப்பாவில் அமெரிக்கா தனது பிடியை வலுவாக்கிக் கொள்ள முடியும். ஆகவே, Charlie Hebdo பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள், GLADIO பயங்கரவாதிகளாக இருக்க வாய்ப்புண்டு.

GLADIO என்பது, நேட்டோவின் தலைமையின் கீழ் இயங்கும் ஐரோப்பிய பயங்கரவாத அமைப்பு ஆகும். நாற்பது நாடுகளின் அரசுத் தலைவர்கள் பங்குபற்றிய, பயங்கரவாதத்திற்கு எதிரான பாரிஸ் அணிவகுப்பில் அமெரிக்க அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

charlie-hebdo-no1163-011014
சார்லி எப்டோ (Charlie Hebdo), ஒரு “இடதுசாரிப்” பத்திரிகை என்று சிலர் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். போலி இடதுசாரிகள் இலங்கை, இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறார்கள் என்று யாராவது நினைத்தால் ஏமாந்து போவீர்கள். பிரான்சிலும், ஐரோப்பாவிலும் கூட, போலி இடதுசாரிகள் மலிந்து போயிருக்கிறார்கள்.

அந்தப் பத்திரிகையில் வேலை செய்யும் ஊடகவியலாளர்கள் சிலர் இடதுசாரிகளாக, அல்லது கம்யூனிஸ்டுகளாக கூட இருக்கலாம். அது ஐரோப்பாவில் ஒன்றும் புதுமை அல்ல. ஏனெனில், ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்யும் பெரும்பாலான ஊடகவியலாளர்கள், தனிப்பட்ட கொள்கை அளவில் இடதுசாரிகள் தான்.

ஆயினும், அவர்கள் தமது கொள்கையை வீட்டில் கழற்றி வைத்து விட்டு வேலைக்குப் போகிறார்கள். இது புள்ளிவிபரம் மூலம் நிரூபிக்கப் பட்ட உண்மை.

சார்லி எப்டோ, பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் ஒரு வகையில் நாஸ்திக – இடதுசாரிப் பாரம்பரியத்தின் விளைவாக தோன்றிய பத்திரிகை தான்.

அது ஏற்கனவே கத்தோலிக்க போப்பாண்டவரையும், இயேசு கிறிஸ்துவையும் கேலிச்சித்திரம் போட்டிருக்கிறது. ஆனால், மதச்சார்பற்ற அல்லது நாஸ்திக பிரெஞ்சு சமுதாயத்தில் அது பெருமளவு தாக்கத்தை உண்டு பண்ணுவதில்லை.

அதே நேரம், யூத மதத்தையும் கேலி செய்துள்ளது தான். ஆனால், சட்டச் சிக்கல்கள் வராமல் மிகவும் அவதானமாக அதைச் செய்துள்ளது. ஏனெனில், பிரான்சிலும்  பிற ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைப் போன்று, யூத மதத்தை அல்லது யூதர்களைப் பற்றி கேலிச்சித்திரம் போடுவது, Antisemitism எனும் தண்டனைக்குரிய குற்றம் ஆகலாம்.

அண்மைக் காலமாக, தனது விற்பனையை அதிகரிப்பதற்காக, சார்லி எப்டோ பத்திரிகை பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் உள்ள இனவாதக் கருத்துக்களை பிரதிபலித்து வந்துள்ளது. அது இஸ்லாமியருக்கு எதிராக மட்டும் துவேஷத்தைக் காட்டவில்லை.

பிரான்சில் குடியேறியுள்ள, தமிழர்கள் போன்ற மூன்றாமுலக நாடுகளை சேர்ந்த மக்களுக்கு எதிராகவும் இனத் துவேஷத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது.

இங்கேயுள்ள சார்லி எப்டோ அட்டைப் படத்தில், என்ன எழுதி இருக்கிறது என்று, பிரெஞ்சு மொழி தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். கேலிச்சித்திர விளக்கம்:

“போகோ ஹராம் பாலியல் அடிமைகள் கோபமாக இருக்கிறார்கள்”
“எமது சமூகக் கொடுப்பனவுகளில் கை வைக்காதே!”

untitled
ஆப்பிரிக்க கருப்பின கர்ப்பிணிப் பெண்கள், பிறக்கப் போகும் பிள்ளைகளுக்கு கிடைக்கவிருக்கும் பிரெஞ்சு அரசின் சமூக கொடுப்பனவுகளை குறி வைக்கிறார்களாம். இந்த இனவாத கேலிச்சித்திரம் மறைமுகமாக தமிழர்களையும் கிண்டல் செய்கின்றது.

பிரான்சில் வாழும் தமிழ்க் குடும்பங்களில், பலருக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும். ஏனென்றால், மூன்று பிள்ளைகளுக்கு மேலே இருந்தால், அரசு அதிகமான பணம் கொடுக்கிறது.

ஆப்பிரிக்கர்கள் மட்டுமல்ல, தமிழர்களும் அரச கொடுப்பனவுகளை எதிர்பார்த்து, அதிகளவு பிள்ளைகளை பெறுவதாக பிரெஞ்சு இனவாதிகள் குற்றஞ்சாட்டுவதுண்டு. சார்லி எப்டோ பத்திரிகையும் பிரெஞ்சு பெரும்பான்மை சமூகத்தின் இனவாதக் கருத்துக்களை கேலிச்சித்திரமாக வரைந்து காசு சம்பாதித்து வருகின்றது.

தாக்குதலின் பின்பு, தன் வெளியீட்டைக் கண்ட இப் பத்திரிகை முப்பது லட்சம் (3 மில்லியன்) பிரதிகள் விற்றது! அது மட்டுமல்ல, இனிமேல் ஆங்கிலம், அரபி, துருக்கி, இத்தாலி ஆகிய பிறமொழிகளிலும் பத்திரிகை வெளியாகவுள்ளது. ஐரோப்பிய கலாச்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கு ஒரு சிறந்த வழி. உலகை நாகரிகப் படுத்தும் வெள்ளையனின் காலனிய கால கடமை நிறைவேறியுள்ளது.

பிற்குறிப்பு:
ஏற்கனவே, ருவாண்டா இனப்படுகொலையில் பிரெஞ்சுப் படையினர் நேரடியாகப் பங்கெடுத்திருந்தனர். அவை யாவும் ஆவணப் படுத்தப் பட்டுள்ளன.
Claims of French Complicity in Rwanda’s Genocide Rekindle Mutual Resentment

http://www.nytimes.com/2014/04/09/world/africa/claims-of-french-complicity-in-rwandas-genocide-rekindle-mutual-resentment.html?_r=2

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில், பிரான்ஸ் அரசு, “பயங்கரவாத எதிர்ப்புப் போர்” என்ற பெயரில், ராஜபக்சே அரசுக்கு ஆயுத விநியோகம் செய்து, தமிழினப் படுகொலையில் பங்கெடுத்திருந்தது.

https://euobserver.com/defence/28155

-கலையரசன்-

Share.
Leave A Reply