முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் வங்கிக்கணக்கில் மக்களின் பணம் வைப்பிலிடப்பட்டதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படுவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எதிர்காலத்தில் தகவல்களை வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் இலங்கை வங்கியின் தெப்ரபேன் கிளையில் நடத்திச் செல்லப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்த சுமார் 8 பில்லியன் ரூபாவை திரைசேரியின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அண்மையில் தெரிவித்தார்.
அத்துடன், நிதியமைச்சின் பணத்தை வேறு இடங்களில் வைக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
காலி முகத்திடலில் இராணுவ தலைமையகம் அமைந்திருந்த காணியை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணம் குறித்த வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டிருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ நேற்று (19) விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்தப் பணம் பத்தரமுல்லையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற புதிய இராணுவத் தலைமையகத்திற்காக பயன்படுத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த வங்கிக்கணக்கை ஆரம்பிப்பதற்காக அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.