மதுரை: மதுரை திருமங்கலம் அருகே காவல் நிலையத்தில் பெண் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலத்தை அடுத்துள்ள பேரையூர் அருகே உள்ள சலுப்பப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் கருப்பாயி (28). இவர் நாகையாபுரம் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரது மகன் பெத்தண்ணசாமி (32) என்பவருக்கும் 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பெத்தண்ணசாமி ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு மாத விடுமுறையில் பெத்தண்ணசாமி ஊருக்கு வந்தார். அப்போது அவர் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து கருப்பாயியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். விடுமுறை முடிந்தும் அவர் பணிக்குத் திரும்பவில்லை. வீட்டிலேயே இருந்தார்.

தினமும் குடித்தார். மனைவியுடன் சண்டை போட்டு வந்தார். இதனால் கருப்பாயி பெரும் வேதனையிலும், மன உளைச்சலிலும் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென பெத்தண்ணசாமி மீண்டும் ராணுவத்துக்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.

 policea

இதையடுத்து கருப்பாயி கணவர் பணிக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். ஆனால் நேற்று மாலை மீண்டும் குடித்து விட்டு வந்து வேலைக்குப் போக மாட்டேன் என்று கூறி மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த கருப்பாயி, கணவருடன் வாக்குவாதம் புரிந்துள்ளார். பின்னர் இரவுப் பணிக்கு சென்று விட்டார்.

நேற்று இரவு நாகையாபுரம் போலீஸ் நிலையத்தில் கருப்பாயியை தவிர மற்ற போலீசார் அனைவரும் தை அமாவாசையையொட்டி சதுரகிரி மகாலிங்கசுவாமி கோவிலுக்கு பாதுகாப்புக்கு சென்றிருந்தனர். கணவர் வேலைக்கு செல்லாததாலும், குழந்தை பேறு இல்லாததை நினைத்தும் வாழ்க்கையில் வெறுப்படைந்த கருப்பாயி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

போலீஸ் நிலையத்தில் இருந்த கைத்துப்பாக்கியில் 2 தோட்டாக்களை நிரப்பி தனது நெற்றியில் வைத்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதில் தோட்டா பின்புறமாக வெளியேறி ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்து இறந்தார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீஸ் நிலையத்துக்கு வந்து பார்த்த போது கருப்பாயி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் மதுரை மாவட்ட எஸ்.பி.

விஜயேந்திர பிதாரி, பேரையூர் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கருப்பாயியின் உடல் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Share.
Leave A Reply