எவ்வளவுதான் தொழில்நுட்பமும் அறிவியலும் வளர்ந்தாலும், நம் மக்கள் மனதில் சில அசைக்க முடியாத நம்பிக்கைகள் அடித்தளம் போட்டு உட்கார்ந்திருக்கின்றன. அதை நம்பிக்கை என்றும் சொல்லலாம், ஒரு விதமான செண்டிமெண்ட் என்றும் அழைக்கலாம்.
இது போன்ற செண்டிமெண்ட்கள் இன்றைய இளம் பெண்களிடமும் இருக்கிறதா என்பதைக்கண்டறிய வேண்டும் எனத் தோன்றியது. ஒரு புறம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சில கல்லூரி மாணவிகளிடமும், மறுபுறம் சென்னையைச் சேர்ந்த இளம் பெண்களிடமும் பேசியதிலிருந்து.
அஸ்ஜீனா, சென்னை:
நான் 6-ம் வகுப்பு படிக்கும் போது என் அம்மா வாங்கிக் கொடுத்த மோதிரம் தான் இன்றுவரை எனக்கு வெற்றியைத் தேடிக் கொடுக்கிறது. இது மூடநம்பிக்கையாக தோன்றலாம் ஆனால் என் ஆழ் மனது இதை உறுதியாக நம்புகிறது. நான் 11-ம் வகுப்பு படிக்கும் போது கட்டுரை போட்டியில் கலந்து கொண்டேன்.
மறதியால் மோதிரத்தை வீட்டில் வைத்து விட்டேன். எப்போதுமே முதலிடம் பிடிக்கும் நான் அன்று 2-ம் இடம்தான் வந்தேன். நான் அந்த மோதிரத்தைப் போடாதது தான் அந்தச் சறுக்கலுக்குக் காரணம். இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் மோதிரத்தைக் கழற்றக் கூடாது அன்று முடிவு செய்து இன்று வரை என் கையிலேயே அணிந்துள்ளேன்.
ஏ.ரோஷ்னி, திண்டுக்கல்:
தேர்வு எழுதப் போகும்போது, காலையில் தோழிகள் யாரும் ஒருவருக்கு ஒருவர் ‘ஆல் த பெஸ்ட்’ சொல்லிக்கொள்ள மாட்டோம். தேர்வு தொடங்கும் அரை மணி நேரத்துக்கு முன்பே புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, மவுனமாகத் திரிவோம். மீறி யாராவது ‘ஆல் தி பெஸ்ட்’ சொன்னால், தேர்வு உருப்படாது என்பது எங்கள் நம்பிக்கை. மீறி யாராச்சும் ‘ஆல் தி பெஸ்ட்’ சொன்னால், பரீட்சை முடிந்ததும் சொன்னவருக்கு உதை நிச்சயம்.
எம்.காயத்ரி, திண்டுக்கல்:
நான் தினமும் செல்லும் பேருந்தின் டிரைவர் விஜய்சேதுபதி மாதிரி இருப்பார். அவரது முகத்தில் விழித்தால் அந்த நாள் சிறப்பாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. எனவே எந்த சீட்டில் இருந்து பார்த்தால் அவரது முகம் கண்ணாடியில் நன்றாகத் தெரியுமோ, அங்கேதான் உட்காருவேன். நான் பார்ப்பதை அவர் கவனித்துவிட்டால் ரெட்டை அதிர்ஷ்டம்தான். ரொம்ப யோசிக்காதீங்க, அந்த டிரைவருக்கு வயசு ஐம்பது இருக்கும்.
எஸ்.சுசீலா, திண்டுக்கல்:
வருடந்தோறும் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சில வேண்டுதல்களை வைத்துக்கொள்வது என் வழக்கமாகிவிட்டது. முதல் வருடம், நானும், என் நண்பர்களும் அரியர் வைக்காமல் பாஸாகணும் எனும் ஒரே ஒரு வேண்டுதல் தான் வைத்தேன்.
அது நிறைவேறியதும் செருப்பு போடாமல் நடப்பது, நெற்றி நிறைய குங்குமத்தோடு சிவப்பு நிறச் சுடிதார் போட்டுக்கிட்டு பஸ்ஸில் வர்றதும்னு இருந்தேன். இப்படியே திரிவது ரொம்ப கூச்சமாக இருந்ததால், இனி இது போன்ற வேண்டுதல்கள் வேண்டாம் எனத் தோன்றியது. ஆனால் இனிமேல் நான் வேண்டாம்னு சொன்னாலும் வீட்ல விட மாட்டாங்களே?!
ஜெர்லின், சென்னை:
எனக்கு யாராவது பொய் சத்தியம் செய்தால் பயமாக இருக்கும். யார் மீதாவது சத்தியம் செய்தால் அவர்களுக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று பயப்படுவேன். அதனால் எனக்குப் பிடித்தவர்கள் மேல் சத்தியம் செய்ய மாட்டேன். சத்தியம் கேட்டாலே அப்படிப்பட்ட ரகசியம் எனக்குத் தேவையில்லை என்று தலை தெறிக்க ஓடிவிடுவேன்.
ராஜலட்சுமி, திண்டுக்கல்:
வெள்ளைதான் எனக்குப் பிடிச்ச நிறம். வெள்ளை டிரஸ் போட்டுக்கிட்டு வந்தால், பாராட்டு, பரிசு, மகிழ்ச்சியான அனுபவம் ஏதாவது கிடைக்கும்ங்கிறது என் நம்பிக்கை.
ஆர்.ஆர்த்தி, திண்டுக்கல்:
என்கிட்ட எந்த செண்டிமெண்ட்டும் கிடையாது. எங்கள் கல்லூரியில் இதுவரை விலங்கியல் துறையில் இருந்து யாரும் மாணவர் பேரவைத் தலைவியானது கிடையாது. செண்டிமெண்ட் பார்க்காமல் தேர்தலில் துணிச்சலாகக் களமிறங்கியதால் தான், இப்போது மாணவர் பேரவைத் தலைவியாகி இருக்கிறேன்.
அனிதா, சென்னை:
நல்ல காரியங்களுக்குச் செல்லும்போது அபசகுனம், எமகண்டம், செவ்வாய்க்கிழமை என்று தள்ளிப் போடுவது மூடநம்பிக்கையைத் தாண்டி முட்டாள் தனம். அதற்காக நான் செண்டிமெண்ட் பார்ப்பவர்களையும் குறை கூறவில்லை. அவர் வளர்ந்த சூழல் அப்படி. ஆனால் எனக்கு எந்த விதமான செண்டிமெண்டும் கிடையாது.
காத்தலின் ரீமா, சென்னை:
செண்டிமெண்ட்தான் என்னுடைய முதல் எதிரி. சமீபத்தில் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குக் கிளம்பியபோது அம்மா, ‘இப்போது, நல்ல நேரம் இல்லை. அரை மணி நேரம் கழித்துக் கிளம்பு’ என்றார். அதுதான் சரி என்று தாமதமாகக் கிளம்பினேன். அந்த அரை மணி நேரத்தில் டிராஃபிக் ஜாமில் சிக்கி, பதற்றமாகி கடைசியில் நேர்முகத் தேர்வில் கோட்டைவிட்டேன். இனி எமகண்டமல்ல, எமனே குறுக்க வந்தாலும் செண்டிமெண்ட் பார்க்க மாட்டேன்.
டி.நிவேதா, திண்டுக்கல்:
ரொம்ப செண்டிமெண்டாக இருக்கிறவங்களைப் பார்த்தா, லாலாலா… லல்லான்னு லந்து கொடுப்பேன். இப்படிச் செய்தால் அப்படியாகிடும், இப்படியாகிடும் என்று யாராவது கிளப்பிவிட்டாங்கன்னா, நான் பெண் பெரியாராக மாறி கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிடுவேன். அதனால எல்லாரும் அப்படியே அசந்து போயிடுவாங்க.
ஒரு மாதிரி செண்டிமெண்ட்டும், தன்நம்பிக்கையும் கலந்துகட்டிதான் நம் யுவதிகள் இருக்கிறார்கள். இருந்தாலும் எலுமிச்சை பழம் மாலை போடாமல், சூரத்தேங்காய் உடைக்காமல்கூட விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் நாள் கூடிய சீக்கிரம் வராதா என்ன?