2016 இல் தமிழக மக்கள் முதல்வர் பதவியில் உட்கார வைக்கப் போவது கேப்டனைத்தான். இந்த மாநிலத்தை ஆளும் பொறுப்பை தே.மு.தி.க.வின் கையில்தான் மக்கள் கொடுப்பார்கள். முதல்வர் பதவியில் உட்காரும் முழுத் தகுதியும் படைத்தவர் கேப்டன் மட்டுமே. இதை நான் சொல்லவில்லை தமிழகமே சொல்லுது!
இந்த இயக்கத்தில் இணைஞ்சி உழைக்கிற உங்க எல்லாரையும் உச்ச பதவியில் உட்கார வெச்சு அழகு பார்க்காமல் நாங்க ஓயமாட்டோம் என்று தே.மு.தி.க பொதுக்குழுவில் நிர்வாகிகளைப் பார்த்துப் பிரேமலதா போட்ட சபதம் அவர்களைச் சிலிர்க்க வைத்தது.
கோவை வெள்ளக்கிணர் பிரிவு பகுதியிலுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண் மஹாலில் நடந்த பொதுக்குழுவில் பிரேமலதாவே ஹைலைட்!
பொதுக்குழு மண்டபத்துக்கு வந்த நிர்வாகிகளுக்கு ஏகத்துக்கும் கெடுபிடி. உள்ளே நடப்பது வெளியே போகக்கூடாது என்பதற்காகச் செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டு செல்ல நிர்வாகிகளுக்குத் தடை பத்திரிகையாளர்கள் உள்ளே நுழைந்து விடாதபடி கண்காணிக்க மண்டப மாடியில் குடையுடன் ஆட்களை நிறுத்தியிருந்ததுதான் இன்னும் காமெடி!
ஆனாலும் பொதுக்குழுவில் நடந்த நிகழ்வுகளைச் சில நிர்வாகிகள் நிருபர்களிடம் லைவ்வாக பகிர்ந்தனர். நீங்கள் குறிப்பிட்டபடியே பிரேமலதாவின் பிளான்படி சில நிர்வாகிகள் நம்மைக் கழட்டிவிட்டு அவங்க தனியா நின்னாலும் தேறமாட்டாங்க ஒப்புக்கு சிலரை கூட்டணி வெச்சாலும் உருப்படமாட்டாங்க என்று பா.ஜ.கவைச் சீண்டினர்.
தீர்மான வாசிப்பு முடிந்ததும் பிரேமலதா மைக் பிடித்தார். லஞ்சம் ஊழலுக்கு நான் எதிரி என்று நெத்தியடிக் கொள்கையை அறிவிச்சு கட்சி ஆரம்பிச்ச ஒரே தலைவர் இந்தியாவில் நம் கேப்டன் தான் எந்தத் தேர்தலையும் தனியா நிற்கிற திராணி அவரிடம் இருக்குது அதனால் தான்.
அவரைத் திராணியார் என்று புகழ்றீங்க. ஆனாலும் கடந்த தேர்தலில் அரசியல் சூழ்நிலையாலேயும் மக்கள் நலனை மனசுல வெச்சும் நாம ஒரு கூட்டணி போட்டோம்.
ஆனால் அ.தி.மு.க ஜெயிச்சு ஆட்சியில் அமர்ந்துச்சு. பொறுப்புக்கு வந்தவங்க பொறுப்பா நடந்துக்கணுமா இல்லையா? என்றவர் காரசாரமான சப்ஜெக்டுக்கு வந்தார்.
இங்கே யார் யாரெல்லாமோ நானே முதல்வர் நானே முதல்வர் என்று சொல்லிக்கிறாங்க. முதல்வர் வேட்பாளரா இவர் நிறுத்தப்படலாம் அவர் நிறுத்தப்படலாம் என்று கூடப் பேச்சு இருக்குது.
அதையெல்லாம் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். நாம் நம்ம கடமையைப் பண்ணிட்டே இருப்போம். கூட்டணி விஷயங்களை கேப்டன் முடிவு பண்ணிக்குவார்.
2016இல் தமிழக மக்கள் முதல்வர் பதவியில் உட்கார வைக்கப்போவது நம்ம கேப்டனைத்தான் இந்த மாநிலத்தை ஆளும் பொறுப்பை தே.மு.தி.க கையில் தான் மக்கள் கொடுப்பாங்க் முதல்வர் பதவியில் உட்காரும் முழுத் தகுதி படைத்தவர் கேப்டன் மட்டுமே. இதை நான் மட்டும் சொல்லவில்லை தமிழகமே சொல்லுது.
நம்ம கேப்டனோட உடல்நலனைப் பற்றிச் சிலர் வாய்க்கு வந்தபடி பேசுறாங்க. சில பத்திரிகைகளும் அப்படி எழுதுறது. ஆனால் அவங்க சொல்றது அத்தனையும் பொய் எல்லா மனுஷனுக்கும் உடல் சுகவீனம் வர்ரது இயல்புதான்.
நம்ம கேப்டனை நான் இருபத்து நாலு மணிநேரமும் கண்ணும் கருத்துமா கவனிச்சுட்டு இருக்கிறேன். அவரைப் பற்றி வீண் வதந்தி பரப்புறவங்களை சும்மா விடக் கூடாது.
அவங்க மேலே மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கணும் என்று தலைமைக் கழகத்தை நான் கேட்டுகிறேன். நீங்க எல்லாரும் என்னையும் கேப்டனையும் அண்ணி அண்ணன் என்று சொல்றீங்க ஆனாலும் நாங்க உங்க அப்பா அம்மா மாதிரி ஒரு அப்பா அம்மாவுக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் எல்லார் மேலேயும் ஒரே மாதிரித்தான் பாசம் வெச்சிருப்பாங்க.
அதே மாதிரித்தான் நாங்களும் உங்க எல்லார் மேலேயும் அன்பு வெச்சிருக்கோம். இந்த இயக்கத்தில் இணைஞ்சு பாடுபட்டு உழைக்கிற உங்க எல்லாரையும் உச்ச பதவியில் உட்கார வெச்சு அழகு பார்க்காமல் நங்க ஓயவே மாட்டோம்.
2016இல் மட்டுமில்லை. அதுக்குப் பிறகும் பல தேர்தல்களில் நம்ம கேப்டனே முதல்வராவார். நூறு வருஷங்கள் அவர் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்து உங்களையும் இந்த மாநிலத்தையும் வழி நடத்துவார்.
அவரோட ஆரோக்கியத்துக்கு நான் கியாரண்டி என படபட என்று பொரிந்துதள்ளிவிட்டு அமர்ந்தார் என்றனர்.
பொதுக்குழுவில் பிரேமலதாவை அக்கட்சியின் மகளிரணியினர் தோளில் தூக்காத குறையாகக் கொண்டாடி விட்டனர். இதை ஓரக்கண்ணால் ரசித்தார் விஜயகாந்த். பிரேமலதாவுக்குப் பிறகு உரையாற்றிய விஜயகாந்தின் பேச்சில் சுரத்தில்லை.
அவரது பேச்சிற்கு நடுவே பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதித்தனர். நான் எதையும் மனசுல ஒளிச்சிட்டு பேசுறவனில்லை மனசுல பட்டதைச் சொல்லிடுவேன்.
ஊருக்கே சோறு போடுற தஞ்சாவூர்லேயே இப்போ அரிசிக்கு தட்டுப்பாடு விவசாயிகள் அந்தளவுக்கு நலிஞ்சுட்டிருக்கிறாங்க. இதைப் பத்தி சொன்னா அரசாங்கத்துக்கு கோபம் வருது என்று சிம்பிளா முடித்தார் விஜயகாந்த்.
பொதுக்குழுவில் எழுச்சியாக சென்டிமென்டாக அதிரடியாக அரசியல் பேசியே பிரமேலதாவின் பேச்சுதான் நிர்வாகிகளைச் சிலிர்க்க வைத்தது.
பா.ஜ.க. கூட்டணியில் நீடிப்பது பற்றி அவர் பேசாவிட்டாலும் விஜயகாந்தான் அடுத்த முதல்வர் என்று நான்கைந்து முறை சொல்லியிருப்பதால் கூட்டணியில் நீடிப்போமா இல்லையா என்ற குழப்பத்துடனேயே தே.மு.தி.க நிர்வாகிகள் கலைந்துசென்றனர்!