டெல்லி: குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா, மூன்று நாள் பயணமாக இந்தியாவிற்கு இந்தியா வந்தடைந்தார். ஒபாமாவைப் பிரதமர் மோடி நேரில் சென்று விமான நிலையத்தில் வரவேற்றார்.
இந்தியாவின் 66வது குடியரசுத் தினம் நாளைக் கொண்டாடப் படவுள்ளது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
அவரது இந்தப் பயணத்தின்போது இரு நாடுகள் இடையே வர்த்தகம், பருவநிலை மாற்றம், கூட்டாக பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பது, ஆக்கப்பூர்வ அணுசக்தியில் நிலவும் வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பது, தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூ விமானப் படை தளத்தில் இருந்து, ஒபாமாவை ஏற்றிக் கொண்டு அதிபரின் பிரத்யேக “ஏர் போர்ஸ் ஒன்’ விமானம் நேற்று இந்தியா புறப்பட்டது. ஒபாமாவுடன் அவரது மனைவி மிச்செல், நான்சி பெலோசி உள்ளிட்ட அமைச்சர்கள், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழுவும் இந்தியா வந்துள்ளனர்.
இந்திய நேரப்படி, இன்று காலை 10 மணியளவில் டெல்லியின் பாலம் விமானப்படை தளத்தில் ஒபாமா வந்திறங்கினார். ஒபாமாவை பிரதமர் மோடி நேரில் சென்று விமான நிலையத்திலேயே கட்டி அணைத்து வரவேற்றார்.
இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக வரும் அதிபர் என்ற முறையிலும், இந்திய குடியரசு தினத்தில் கலந்து கொள்ளும் முதல் அமெரிக்க அதிபர் என்ற முறையிலும் ஒபாமாவின் இந்திய சுற்றுப்பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பரூதின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒபாமாவின் இந்திய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமானதாக்க அமெரிக்காவும், இந்தியாவும் கடுமையாக பணியாற்றி வருகின்றன. ஒபாமாவின் இந்தியப் பயணத்தை, வெளிநாடுகளுடன் அண்மையில் மேற்கொண்ட ராஜீய ரீதியிலான தொடர்புகளில் மிகவும் முக்கியமானதாக இந்தியா கருதுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, ஒபாமா இடையேயான சந்திப்பின்போது, பாதுகாப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, இந்தியாவின் அண்டை நாடுகளின் விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இதேபோல், இருநாடுகள் இடையேயும் வர்த்தகத்தை மேலும் ஊக்குவிப்பது, வர்த்தகத் தொடர்புகளை அதிகரித்துக் கொள்வது, பருவநிலை மாற்ற விவகாரம் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
ஆக்கப்பூர்வ அணுசக்தி விவகாரத்தில் நிலவும் வேறுபாடுகளைக் களைவது தொடர்பாக இரு நாடுகள் இடையேயும் முன்பு நடந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதை அமெரிக்காவுடன் இணைந்து மேலும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என இந்தியா எதிர்பார்க்கிறது.
இந்தியா தனது வளர்ச்சிப் பணிகளில், முதலீடு, தொழில்நுட்பம், அறிவு, திறன்கள் ஆகியவற்றில் அமெரிக்காவை இந்தியா முக்கியக் கூட்டாளியாகவும், தூய எரிசக்தி தொடர்பான தொழில்நுட்பம், ஹைட்ரோகார்பன் ஆகியவற்றில் அமெரிக்காவை சிறந்த ஆதாரத் தளங்களாகவும் இந்தியா கருதுகிறது.
இதேபோல், பாதுகாப்புத் தொழில்நுட்பம், பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய விவகாரங்களிலும் அமெரிக்காவை முக்கிய கூட்டாளியாக இந்தியா கருதுகிறது’ என்றார்.