ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அலரிமாளிகையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் சதித்திட்டங்கள் தொடர்பாக தகவல்களை வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, அப்படி இல்லையென்றால் எதற்காக கொழும்பு 15 மோதரை ரொக்கவுஸ் முகாமுக்கு மேலதிகமாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொண்டுவரப்பட வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ளார்.

ரூபவாஹினி தொலைக்காட்சி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே மேர்வின் சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது;

ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாகவே தாங்கள் கதைத்ததாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வாக்குகள் எண்ணும் நேரத்திலும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் நேரத்திலும் ஏன் ஊரடங்குச் சட்டத்தை அமுலாக்க வேண்டும்.

அடுத்த பிரச்சினை என்னவென்றால், முடிவுகள் வெளியாகும் வேளையில் அலரிமாளிகைக்கு அவர்கள் ஏன் அழைக்கப்பட்டனர். அதற்கான அவசரம் என்ன? ஏன் குழப்பமடைய வேண்டும்?

இந்நிலையில் அபாயகரமான ஒன்றுதான் கொழும்பு ரொக்கவுஸ் இராணுவ முகாமுக்கு மூவாயிரத்துக்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொண்டுவரப்பட்டிருந்ததுடன் , அங்கு புலனாய்வு பிரதானியொருவரும் இருந்தார்.

அவர்கள் அனைவரும் அணிந்திருந்த தொப்பியிலிருந்த படையணியின் சின்னத்தையும் சீருடையிலிருந்த சின்னத்தையும் கழற்றிவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டுமென அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

அவர்கள் என்ன படையணியைச் சேர்ந்தவர்கள் என்பதனைக் கண்டறியாமல் இருப்பதற்கே அவ்வாறு கூறப்பட்டிருந்தது. இதற்கான சாட்சிகள் உள்ளன.

இவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்து ஏனென்றால், பாதுகாப்பு செயலாளரின் சதித்திட்டங்களைச் செயற்படுத்தி வெற்றிபெற்றவர்களின் வெற்றியை பறித்தெடுத்து நாட்டில் இரத்த ஆற்றினை உருவாக்குவதற்கான முயற்சியாகவே இருந்தது. இதற்கு எவரும் இணங்கியிருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply