டெல்லி: இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா வாயில் சுயிங்கம் சுவைத்துக் கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார். அவரது முன்னிலையில், இந்திய ராணுவ பலத்தை காண்பிக்கும் வகையில் அணி வகுப்புகள் நடந்தன.
ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் தங்கள் பராக்கிரமத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தன. அப்போது, கேமரா அவ்வப்போது, ஒபாமா பக்கமும் திரும்பியது. சில நேரங்களில் தலையை ஆட்டியபடி ரசனையை வெளிப்படுத்தியபடி இருந்ததை மக்கள் பார்க்க முடிந்தது.
ஆனால் ஒருமுறை கேமரா அவர் பக்கம் திரும்பியபோது, ஒபாமா தனது வாயில் இருந்து சுயிங்கத்தை வெளியில் எடுத்து மீண்டும் தனது வாய்க்குள் போட்டுக் கொண்ட காட்சி பதிவானது. இந்த காட்சி, உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒபாமா மென்றது சுயிங்கம் இல்லை என்றும், சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் சுயிங்கம் மாதிரியான நிக்கோடின் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை, தனது செய்திதளத்தில் இதுகுறித்து கூறுகையில், “சிகரெட் பழக்கத்தில் இருந்து வெளியேவர ஒபாமா நிகோடின் பயன்படுத்திவருகிறார்.
இந்திய குடியரசு தின ஊர்வலத்தின்போதும், உதவியாளர்கள் அதை அவருக்கு தந்திருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கான வெள்ளை மாளிகை தலைமை நிருபர் பீட்டர் பாகர் தனது டிவிட்டிலும், சுயிங்கம் போன்ற ஒரு பொருளை ஒபாமா மென்று கொண்டிருந்ததாக உறுதி செய்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம், சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டிலும், ஒபாமா சுயிங்கம் சாப்பிட்டபடி இருந்தது சர்ச்சையை கிளப்பியிருந்தது நினைவிருக்கலாம்.
அங்கே என்ன கூட்டம்!? ஜனாதிபதி மாளிகையில் எட்டிப்பார்த்த நாய்!!: துரத்தி பிடித்த போலீஸ்
January 26th, 2015
டெல்லி: ஒபாமா வர்றார்… ஒபாமா வர்றார்… என இந்தியா முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்க… டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் எறும்பு கூட எட்டிப்பார்க்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. தெரு நாய் ஒன்று கடும் பாதுகாப்பையும் மீறி குடியரசுத்தலைவர் மாளிகையில் ஹாயாக வலம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டின் 66 வது குடியரசு தினவிழாவில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று வருகை தந்தார். அவருக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒபாமா வர இருந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக அந்த வளாகத்துக்குள் திடீரென்று தெரு நாய் ஒன்று நுழைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நாயை துரத்தினார்கள். அது அங்கும் இங்குமாக ஓடியது. கையில் சிக்காமல் போக்கு காட்டியது.
என்றாலும் தீவிரமாக போராடி ஒருவழியாக நாயை பிடித்து வெளியே நிறுத்தப்பட்டு இருந்த பாதுகாப்பு வண்டியில் ஏற்றி அனுப்பினார்கள். ஒபாமாவின் வருகையை யொட்டி, டெல்லியில் குரங்குகள் மற்றும் தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
குரங்கு பிடிப்பவர்களும், நாய் பிடிப்பவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். என்றாலும் பலத்த பாதுகாப்பையும் மீறி அழையா விருந்தாளியாக குடியரசுத்தலைவர் மாளிகை வளாகத்திற்குள் நாய் நுழைந்தது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.