முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரான யோசித ராஜபக்ஷ எவ்வாறு இலங்கை கடற்படையில் இணைந்தார்? கடற்படை பயிற்சிகளை எவ்வாறு இங்கிலாந்தில் நிறைவு செய்தார் போன்ற விடயங்களை ஆராயக்கோரி இன்றைய தினம் பாதுகாப்பு அமைச்சிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிக்கிறார்.
கொழும்பு பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
முன்னாள் ஜனாதிபதியின் மகனான யோசித ராஜபக் ஷ கடற்படையில் இணைந்து கொண்ட முறை பற்றியும் கடற்படை பயிற்சி கல்லூரியில் பயின்ற போதான அவரது நிலைபஙபாடு பற்றியும் முழுமையான சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதியின் பிரசார மேடையில் அவர் சீருடையுடன் இருந்தமை போன்ற காரணங்கள் குறித்தும் தற்போதைய பாதுகாப்பு செயலாளரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் குடும்பத்தினர் அரசியல் பலத்தை தமக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்ட காரணத்தால் பாதிப்புக்குள்ளான பொது மக்கள் வியாபாரிகள் எம்மிடம் முறைப்பாடுகளை கையளித்துள்ளது அத்துடன் இதுவரையில் பாதிக்கப்பட்டாலும் முறைப்பாடு செய்யத் தவறியவர்கள் அவர்களது முறைப்பாடுகளை எம்மிடம் கையளித்தால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க கோரி புதிய அரசாங்கத்திடம் வலியுறுத்துவதோடு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க நாம் முன்னிற்போம்.
முன்னைய அரசாங்கத்தால் பொதுமக்கள் இன பேதமின்றி 6000 ஹெக்டயர் காணிகளை தனியார் வெளிநாட்டுக்கு விற்று காணிகளை சுவீகரித்துக் கொள்ள இன பேதமின்றி மக்களை விரட்டியடித்தனர். அத்துடன் பல சுகபோக இல்லங்களும் வியாபாரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி முன்பு கொரியா செல்ல பரீட்சை செய்து போதிய புள்ளிகள் பெற்றவர்களை விடுத்து நாமல் ராஜபக் ஷவின் பணிப்பின் பேரிலேயே சிலர் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றனர். இவை தொடர்பில் தகவல் இருக்குமாயின் எமக்கு அறியத்தாருங்கள்.
பாதிக்கப்பட்டவர் தம்மிடம் உள்ள முழுமையான தகவல்களை 48/ 20 ஆலமரச்சதுக்கம் பிலிமந்தல வீதி மஹரகம என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் தொலைபேசி வாயிலாக தகவல் வழங்குபவர்கள் 011 2896364, 071 8106863 போன்ற இலக்கத்தை பயன்படுத்துமாறும் மின்னஞ்சல் ஊடாக தகவல் வழங்குபவர்கள் politicsandsrilanka@gmail.compoliticsandsrilanka (link sends e-mail)@gmail.com என்ற முகவரி வாயிலாகவும் தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
நடைமுறை அரசியல் மீது பூரண நம்பிக்கை கொள்ளாத போதிலும் மக்கள் நலன் கருதி தம் பக்கம் சாராது செயற்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.