முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே தற்ப்போது தங்காலை – கார்டன் இல்லத்தில் தங்கியுள்ளார். பிரதேச மக்கள் அவரைச் சென்று சந்திக்கின்றனர்.
ஆனாலும் மனம் உடைந்த நிலையில் இருப்பதுடன் யார் சென்றாலும் கதைக்காமல் மௌனமாக இருப்பதாகவும் யார் சென்றாலும் தலை அசைப்பதைத் தவிர வேறு எதுவும் இல்லையாம் உள ரீதியாக பாரிய பின்னடைவில் முன்னால் ஜனாதிபதி இருப்பதாக உளவியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
100 கிலோ தங்கத்தை விற்கும் முயற்சி; ஷிரந்தி மீது குற்றச்சாட்டு
இலங்கையின் இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவுக்குச் சென்றிருந்த முன்னாள் காவல்துறை உயரதிகாரி ஒருவரின் மனைவி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மீது பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
நாட்டின் திறைசேரி அல்லது கருவூலத்துக்குச் சொந்தமான 50 கோடி ரூபா பெறுமதியான 100 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக விற்க எடுக்கபட்ட முயற்சியுடன் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்பிருந்ததாக முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டிஐஜி) வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.
தங்க விற்பனை முயற்சியில் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு உள்ள தொடர்பை விசாரிக்க முயன்றபோதே, தன் கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி அவரைக் கைதுசெய்து அரசாங்கம் சிறையில் அடைத்துள்ளதாகவும் ஷியாமலி பெரேரா ஊடங்களிடம் கூறியுள்ளார்.
கொழும்பு வடக்கு பிராந்தியத்திற்கான டிஐஜியாக வாஸ் குணவர்தன பொறுப்பேற்ற பின்னர், திறைசேரிக்குச் சொந்தமான 100 கிலோ தங்கத்தை மோசடிசெய்து விற்பதற்கு முயற்சி நடப்பதாக இராணுவப் புலனாய்வு பிரிவிடமிருந்து தகவல் கிடைத்திருந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
‘முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ நேரடியாக இந்த மோசடி சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக தெரியவந்தது.
அதன்பின்னர், இந்த விசாரணையில் எதனையும் வெளிப்படுத்த வேண்டாம் என்று எனது கணவருக்கும் எனக்கும் வெளிநாட்டில் இருக்கின்ற எங்களின் மகனுக்கும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் வந்த வண்ணம் இருந்தன… என்றார் ஷியாமலி பெரேரா.
‘விசாரணையில் இருட்டடிப்பு’
முன்னாள் டிஐஜி வாஸ் குணவர்தன மீது கொலைக் குற்றச்சாட்டு உள்ளது
இதனிடையே, ஷிரந்தி ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை தொடர்ந்து மேற்கொள்ளவிடாமல் தடுத்ததாகவும் அந்த விசாரணைகளை இருட்டடிப்புச் செய்ய முயற்சித்ததாகவும் மேல்மாகாண டிஐஜி அனுர சேனாநாயக்க மீதும் வாஸ் குணவர்தனவின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர், நீதியான விசாரணைகள் நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் தனது கணவர் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஷியாமலி பெரேரா கூறினார்.
இலஞ்ச ஆணைக்குழுவின் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு முன்னாள் டிஐஜி வாஸ் குணவர்தன ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் ஊடகங்களிடம் கூறினார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம் செல்வந்தரான மொஹமட் ஷியாமை கடத்திச் சென்று கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட டிஐஜி வாஸ் குணவர்தன மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்னும் விசாரணை நடந்துவருகின்றது.
இந்தக் கொலை தொடர்பில் முன்னாள் டிஐஜியுடன் அவரது மகன் ரவிந்து குணவர்தன மீதும் மற்ற நான்கு சந்தேகநபர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இந்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தியதாக முன்னாள் டிஐஜி வாஸ்குண மனைவி மீதும் குற்றச்சாட்டு உள்ளது.
தொழில்நுட்ப கல்விகற்கும் மாணவன் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் 2009-ம் ஆண்டில் ஷியாமலி பெரேரா கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தமையும் இங்கு நினைவுகூரத்தக்கது.
பொலிஸார் மறுப்பு
இதனிடையே, முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரது கருத்தினை பெற எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணைகளை இருட்டடிப்புச் செய்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க பிபிசி தமிழோசையிடம் மறுத்துள்ளார்.
குறித்த தங்கக விற்பனை முயற்சியில் ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்புபட்டிருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு பொய் என்றும் அனுர சேனாநாயக்க கூறினார்.