இலங்கையின் சர்வ வல்லமை பொருந்திய ராஜாதிராஜ மகாராஜாவும் அவரது சகாக்களும் மக்கள் விருப்பு வாக்குகள் மூலம் வீட்டுக்கு அனுப்பப்பட்டு இரு வாரங்களாகின்றன.
இவ்விரு வார காலத்திற்குள்ளும் தேர்தலுக்கு முந்திய வாரத்திலும் இடம்பெற்ற சம்பவங்கள் வெகு சுவாரஷ்யமானவை.
அரசியலில் நிரந்தர நண்பர்களோ பகைவர்களோ கிடையாது என்பதுடன் அரசியல்வாதிகளில் பலருக்கு நிரந்தரமான கொள்கைகளோ நாகரிகத்தன்மைகளோ விழுமியங்களோ கிடையாது என்பதை இக்கால பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை வைத்து உய்த்துணர்வது கடினமன்று.
கட்சித் தாவல்கள், காட்டிக்கொடுப்புக்கள், நம்பிக்கைத் துரோகங்கள், தமது துரோகங்களை நியாயப்படுத்த முயலும் நடத்தைகள் போன்றவற்றை ஸ்ரீமான் பொது ஜனம் வெகு நுணுக்கமாக அவதானித்துக் கொண்டுதானிருக்கிறது.
வெறுமனே தேர்தல்களை நடத்தி அரசியல்வாதிகளை ஆட்சி பீடத்தில் அமர்த்தி விடுவதால் ஒரு நாடு ஜனநாயக நாடாகி விடாது.
ஆட்சியில் அமர்பவர் யார், அவரது தகுதி என்ன, கடந்த காலத்தில் அவரது செயற்பாடுகள் எவ்வாறு அமைந்தன போன்ற எதுவித உசாவல்களும் இன்றி பணமும் அதிகார பலமும் உள்ள மேல்மட்ட அரசியல்வாதிகளின் ஆசீர்வாதம் பெற்ற எவரும் அரசியலுக்கு வரலாம் என்ற நிலையில்,
எழுத்தறிவு இருந்த போதிலும் அரசியல் அறிவற்ற – கொள்கைகளுக்காக அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்காமல் அவர் தம் பிரபலத்திற்காகவும் அற்ப சலுகைகளுக்காகவும் வாக்களிக்கும் கணிசமான வாக்காளர்களைக் கொண்ட எந்தவொரு நாட்டிலும் ஜனநாயக விழுமியங்களையோ நல்லாட்சியையோ எதிர்பார்ப்பது கடினம்.
கூர்மையான திட்டங்களையும் கைகளில் கறைபடியாத அரசியல் தலைவர்களையும் கொண்ட அர்ப்பணிப்புடன் தமது அரசியல் எதிர்காலத்தை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத ஒரு அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலமே பகீரதப்பிரயத்தனத்தின் பின்னர் அது சாத்தியமாகும்.
2005 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் ஊடாக மகாராஜா அரியணை ஏறியதும் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஜனநாயகத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளாக பார்க்கப்பட முடியாது.
தனது சகோதரர்களையும் உறவினர்களையும் தனக்கு நெருக்கமான விசுவாசிகளையும் துதிபாடிகளையும் உயர்மட்டபதவிகளில் அமர்த்துவதன் மூலம்…
தனது ஆட்சிக்கு அரசுக்குள்ளேயும் வெளியேயும் ஏற்படக்கூடிய சவால்களை முளையிலேயே கிள்ளி தனது அடுத்து வரும் பரம்பரையும் நீண்ட காலத்திற்கு நாட்டை ஆளும் வண்ணம் தனது அதிகாரத்தை உறுதியாக தக்க வைத்துக்கொள்வதே முக்கிய நோக்கமாக அமைந்ததை நாம் பார்க்கலாம்.
அதேபோல் ஒரு இரும்புக் கரத்தை தமிழ் மக்கள் மீது பிரயோகித்து அவர்களது இருப்பைக் கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார்.
2009இல் உள்நாட்டுப் போர் முடிவில் இடம்பெற்ற நிகழ்வுகள் காரணமாக இது உலகளாவிய ரீதியில் பலத்த விமர்சனங்களையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியது.
ராஜபக் ஷ சகோதரர்கள் சிறுபான்மை மக்கள் மீது ஏற்படுத்திய பாதிப்புக்கள் குறித்து தென் பகுதி மக்கள் பெரும்பாலானோர் மத்தியில் நியாயமான புரிதல் இருக்கவில்லை.
யுத்தம் இடம்பெற்ற போது ஏற்பட்ட பொதுமக்களின் இழப்புக்கள் குறித்து சர்வதேச ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் காட்சிப்புல சாட்சியங்களுடன் வெளிப்படுத்தியபோது தென்பகுதியில் இருந்த சாதாரண பொதுமக்களும் தென்பகுதி கல்விச் சமூக புலமையாளர்களும் அது பற்றி கிஞ்சித்தேனும் அனுதாபப்படவோ அல்லது குரல் கொடுக்கவோ முன்வரவில்லை.
மாறாக கொல்லப்பட்ட அனைவரும் புலிகள் என்றும் அல்லது புலிகளுக்கு சார்பானவர்களாகையால் அவர்கள் சாவது நியாயமே என்றும் குழந்தைகளும் சிறுவர்களும் இறக்கையில் எதிர்கால புலிகள் இறப்பது நியாயமே என்றும் பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.
யுத்தம் முடிவுற்ற போது தென்பகுதி பூராகவும் பாற்சோறு சமைத்து, வெடி கொளுத்தி கொண்டாடியவர்கள் நம் கண்முன்னே வருகின்றனர்.
வேரோடு நாட்டைக் கைப்பற்றி குதூகலிப்பது போல தென்னிலங்கை கொண்டாட்டங்கள் அமைந்தன. ராஜபக் ஷ பேரரசராக வர்ணிக்கப்பட்டமைக்கு தமிழ் பயங்கரவாதத்தைத் தோற்கடித்தார் என்ற ஒற்றைக் காரணம் மட்டுமே இருந்தது.
ஊடகங்கள் தோரணங்கள், பொதுக்கூட்டங்கள் எல்லாமே இலங்கையை ஒருமைப்படுத்திய பேரரசராகவே ராஜபக் ஷவை வெளிப்படுத்தின.
சமூகங்கள் மத்தியில் யுத்தத்தின் முடிவு ஒருமைப்பாட்டைக் கொண்டு வருமென்று பொதுவான கருத்துகளும் இருந்த போதிலும் யுத்தத்தின் முடிவு இனங்களுக்கிடையேயான பிளவினை அகலப்படுத்துவதாகவே அமைந்தது.
இலங்கையில் சிறுபான்மை என்று எவரும் இல்லை என்று ராஜபக் ஷ உதட்டளவில் கூறினாலும் தோற்கடிக்கப்பட்ட ஒரு இனம், தாம் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற மேட்டிமைப்போக்கே அவரதும் அவரது அரசாங்கத்தினதும் நடவடிக்கைகளில் பிரதிபலித்தது.
தமக்கு சார்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய புலித்தலைவர்களைப் பிடித்து அவர்கள் மூலமாகவும் தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றும் போக்கும் காணப்பட்டது.
இந்நடவடிக்கைகள் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக் ஷவின் மதிப்பை மேலும் உயர்த்தியதுடன் தோற்கடிக்கப்பட முடியாத ஒரு பேரரசன் என்ற நிலைக்கு அவரை உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்தது.
யுத்தத்தின் முடிவு இலங்கை தனது காயங்களை ஆற்றி முன்னோக்கிச் செல்லக்கூடிய அரிய ஒரு வாய்ப்பினை ஆட்சியாளர்களுக்கு வழங்கிய போதும், அவ்வாய்ப்பினை ராஜபக் ஷ அரசாங்கம் தனது இறுமாப்பின் காரணமாக நழுவ விட்டது.
யுத்த வெற்றி என்ற மமதையே காயப்பட்ட மக்களுக்கு ஆறுதலளித்து ஆற்றுப்படுத்தி அரவணைத்து செல்லுவதற்கு பதிலாக அடக்கு முறையையும் வன்முறைக் கலாசாரத்தையும் இருப்பையே மறுத்துரைக்கும் போக்கினையும் ஏற்படுத்தியதென்றால் அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.
மறுபுறம் தனது நீண்ட கால இருப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளும் முகமாக ராஜபக் ஷ குடும்பம் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆரம்பத்தில் சிங்கள அரசியல்வாதிகள் அவ்வளவாகக் கண்டு கொள்ளாவிட்டாலும் சிறுபான்மைத் தமிழரை அடக்கப் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கரம் தம் மீது பாய்ந்த போது நிலை தடுமாறிப் போனார்கள்.
குறிப்பாக யுத்தத்திற்கு தலைமை வகித்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனது போட்டியாளராக 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கி தோற்ற போது அவருக்கு நடந்த உபசரணைகள் ராஜபக்ஷ தன்னை எதிர்க்கும் எவரையும் விட்டு வைக்கப்போவதில்லை என்பதை வெளியுலகுக்கு துலாம்பரமாகக் காட்டின.
ராஜபக் ஷ அரசாங்கத்தை விமர்சித்த ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. சிலர் கொல்லப்பட்டனர்.
ஊடக நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. குறிப்பாக, சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் கொலை, சர்வதேச ரீதியில் ராஜபக் ஷ அரசாங்கத்திற்கு மிகுந்த அபகீர்த்தியை ஏற்படுத்தியது.
இறுதிக்கட்டப்போரில் ஏற்பட்ட பொதுமக்களின் உயிரிழப்புக்கள் குறித்து சாட்சியங்களுடன் சர்வதேசம் கேள்வி கேட்க முனைந்த போது நாட்டைக் காட்டி கொடுக்கும் சதிகாரர்களின் வேலையே இக் குற்றச்சாட்டுக்களெனவும்…
தனி மனித உரிமைகள் பற்றிய பிரகடனத்தை ஒரு கையிலும் துப்பாக்கியை மறு கையிலும் கொடுத்தே தனது வீரர்கள் தமிழ் மக்களை புலிப்பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொள்ள அனுப்பியதாகவும் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கவில்லை எனவும் உயிரிழந்த அனைவரும் பயங்கரவாதிகளே எனவும் பதிலளிக்க முற்பட்டார்.
இலங்கையில் இரு வகையான மக்களே இருப்பதாகவும் நாட்டை நேசிக்கும் மக்கள் ஒருவகை. நாட்டை காட்டிக் கொடுக்கும் துரோகிகள் மறுவகை எனவும் அவர் வெளிப்படுத்த முயன்றார்.
தானும் தனது அரசும் மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளும் நாட்டை நேசிக்கும் நடவடிக்கைகளெனவும் நாட்டை நேசிக்கும் மக்கள் தனக்கு ஆதரவாக உள்ளதாகவும்
நாட்டுக்கு துரோகம் விளைவிப்போரே தமக்கு எதிராகவும் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் சர்வதேச ஏகாதிபத்தியவாத சக்திகளும் அரசு சாரா நிறுவனங்களும் வழங்கும் டொலர்களைப் பெற்றுக்கொண்டு தமது அரசாங்கத்திற்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதாகவும் நியாயப்படுத்த முனைந்தார்.
அரசதுறை முழுவதையும் தனது பூரணமான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து ராஜபக் ஷவைத் தவிர வேறெவரும் தலைவரில்லை என்றவாறானதொரு மாயை உருவாக்கப்பட்டது.
அரச ஊடகங்கள் முற்றும் முழுதாக ராஜபக் ஷ புகழ்பாடுவதையே தமது முழு நேரக் குலத்தொழிலாகக் கொண்டன. உதாரணமாக, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமது நிகழ்ச்சிகளின் நடுவே குறிப்பிட்ட நிமிடங்கள் தேசபக்திப் பாடலை ஒலிபரப்ப உத்தரவிட்டிருந்தது.
தேச பக்திப் பாடல் என்ற பெயரில் ராஜபக் ஷவை காவென்றும் கோவென்றும் புகழ்மாரி பொழியும் பாடல்களே ஒலிபரப்பப்பட்டன. நாட்டின் சகல சந்து பொந்துகளிலும் ராஜபக் ஷவின் கட் அவுட்டுகளும் பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களும் கூட பத்திரிகைகளில் முழு அளவு விளம்பரங்களைப் பிரசுரித்து வாழ்த்தத் தொடங்கின. இவ்வாறு தன்னை முதன்மைப்படுத்தியவாறு அரசனாக முற்பட்ட ராஜ பக் ஷ தனது குடும்பத்தினரது நடவடிக்கைகளால் மேலும் தன்னை நிலைப்படுத்த முயற்சித்தார்.
அதுவே தனக்குப் பாதுகாப்பு எனவும் கருதினார். அரசியல்வாதியாக மாறிய அவரது மகன் அடுத்த வாரிசாகவும் இளவரசராகவும் தன்னைக் கருதிக் கொண்டார்.
அவரது நடவடிக்கைகளும் அவ்வாறே அமைந்தன. மூத்த அரசியல்வாதிகளே முகம் சுளிக்கும் அளவுக்கு நடத்தைகள் அமைந்தன என்பது பரகசியம். பாதுகாப்புச் செயலாளராக ராஜபக் ஷவின் சகோதரர் ஒரு சர்வாதிகாரியாகவே தன்னை நினைத்தார்.
யாரும் கேள்வி கேட்க முடியாத ஒரு சர்வ வல்லமை கொண்ட ஒருவராகவே தன்னை முன்னிலைப்படுத்தினார். ஒரு அமைச்சின் செயலாளர் என்ற அரச ஊழியர் பதவி அவருடையது.
ஆனால் ராஜபக் ஷவுக்கு அடுத்த படியாக அதி கூடிய அதிகாரமிக்கவராக அவர் விளங்கியமைக்கு ராஜபக் ஷவின் சகோ தரர் என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு காரணங்களில்லை.
கலாநிதி எம். கணேஷமூர்த்தி சிரேஷ்ட விரிவுரையாளர்
பல்லைக் கடித்த படி அவர் அளித்த பேட்டிகளைக் காணும போது அருவருப்பு மிக்க ஒரு உணர்வே ஏற்படுகிறது.
எவ்வாறாயினும் பாதுகாப்பு அமைச்சுடன் நகர அபிவிருத்தி என்ற நீட்சியையும் எற்படுத்தி கொழும்பு நகரை அழகுபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து இராணுவத்தினரை கட்டு மானப் பணிகளில் ஈடுபடுத்தியமை காரணமாக கொழும்பு நகரின் முக்கிய பகுதிகள் தற்போது வெளிநாட்டு நகரங்களின் வசதிகளோடு அபிவிருத்தி செய்ததில் கோத்தாபய ராஜபக் ஷ வின் தலைமைத்துவத்தினை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
அவ்வாறு செய்வது பக்கச் சார்புடையதாகவே அமையும். எவ்வாறாயினும், அவரது ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் பலவாறும் கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளமை வெளிப் படையானதாகும்
(தொடரும்)