திருமங்கலம்: என் நிம்மதியைக் கெடுத்ததால், மனைவியின் குடும்பத்தையே கொன்று குவித்தேன் என்று மதுரை அருகே 5 பேரை வெட்டிக்  கொன்ற ராணுவவீரர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் ஏ.தொட்டியபட்டியை சேர்ந்தவர் கமலக்கண்ணன். ராணுவ வீரர்.  திருமணமாகி 3 ஆண்டுகளில், கருத்து வேறுபாடு காரணமாக, இவரது மனைவி கோமதி பிரிந்து சென்றார்.

நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக நேற்று  முன்தினம் இரவு ஏ.தொட்டியபட்டி வந்த மனைவி கோமதி, மாமனார் சின்னச்சாமி, மாமியார் ராமுத்தாய், மனைவியின் சகோதரிகள் பாக்யலட்சுமி  மற்றும் வனரோஜா ஆகிய 5 பேரையும் கமலக்கண்ணன், அவரது தம்பி பரமசுந்தர் உள்ளிட்ட 3 பேர் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

கமலக்கண்ணன் மற்றும் பரமசுந்தர் நாகையாபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மதுரை எஸ்பி விஜயேந்திர பிதாரி நேற்று அதிகாலை வரை  2 பேரிடமும் விசாரணை நடத்தினார்.

ராணுவவீரர் கமலக்கண்ணன் போலீசில் அளித்த வாக்குமூலம்: திருமணமான நாள் முதல், என்னுடன் உறவு  வைத்துக்கொள்ள கோமதி மறுத்து வந்தார்.

இதனால்  நாங்கள் பிரிந்து வாழ்ந்து வந்தோம். எனது மாமனார்  சின்னச்சாமி முன்னாள் ராணுவவீரர்.  நான் பணியாற்றும் ராணுவ முகாமுக்கு, பல்வேறு புகார்கள் அனுப்பிக்கொண்டே இருந்தார்.

இது குறித்து அடிக்கடி என்னிடம் விசாரித்ததால் மன  உளைச்சல் ஏற்பட்டது. திருமங்கலம் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தேன். இதில் விவாகரத்து வழங்கப்பட்டது.

ஜீவனாம்சமாக மாதம்  ரூ.6,100 வழங்கி வந்தேன். இதை எதிர்த்து கோமதி, மதுரை கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். விடுமுறையில் ஊருக்கு வந்தேன். மனைவியுடன்  சேர்ந்து வாழ  வேண்டும்.

இல்லாவிட்டால் அவரை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டேன். கள்ளத்துப்பாக்கி ஒன்று வாங்கினேன். நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு மனைவி  மற்றும் அவரது குடும்பத்தினர் வந்தனர்.

என்னை பார்த்து எனது அண்ணி பாக்யலட்சுமியும், கொழுந்தியாள் வனரோஜாவும் கேலி செய்து சிரித்தபடி  சென்றனர். பேச்சுவார்த்தைக்கு சென்ற எனது அக்காள் பூர்ணகலாவை அவர்கள் தாக்கினர்.

இதில் ஆத்திரமடைந்த நான், துப்பாக்கியால் கோமதியை  பார்த்து சுட்டேன். ஆனால் குறி தவறி விட்டது. இதையடுத்து அரிவாளை எடுத்து வெட்டினேன்.

அப்போது தடுக்க வந்த மாமியார், மாமனார்,  அண்ணி, கொழுந்தியாள் ஆகியோரையும் விரட்டிச் சென்று வெட்டிக் கொன்றேன். எனது நிம்மதியை கெடுத்ததால், மனைவியின் குடும்பத்தையே  கொலை செய்தேன். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

அண்ணன், தம்பி இருவருடன் இவர்களது தாய் சுப்புலட்சுமி(65), அக்கா பூர்ணகலா (38) ஆகியோரையும் நாகையாபுரம் போலீசார் நேற்று கைது  செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய பூர்ணகலாவின் கணவர் வெங்கடேசை தேடி வருகின்றனர்.

ராணுவ வீரரான வெங்கடேஷ், கோவாவில்  வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் கமலக்கண்ணனுடன் சேர்ந்து விடுமுறையில் ஏ.தொட்டிய பட்டிக்கு வந்திருந்தார்.

சம்பவம் நடந்த போது  இவரும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. கமலக்கண்ணனின் தந்தை ராமலிங்கம், ஓய்வு பெற்ற தாசில்தார். பரமசுந்தர் இன்ஜினியரிங் கல்லூரி  மாணவர்.

கொலையாளிகள் மீது கத்தி, துப்பாக்கி ஆகிய ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட 5 பேரின் உடல்களும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டன.

Share.
Leave A Reply