கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சர் யார்?, என்பது தொடர்பிலான இழுபறிக்கு இன்னமும் முடிவு காணப்படவில்லை. தமிழ் பேசும் மக்களின் இரு பிரதான கட்சிகளும் விட்டுக் கொடுப்பின்றி தன் பக்க நியாயங்களோடு அடம்பிடிக்கின்றன.

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனநாயக இடைவெளியொன்று வாய்த்திருக்கின்ற நிலையில், அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ§ம் பெரு முனைப்புக்களுக்காக சரியாகக் கையாள வேண்டிய தருணம் இது.

ஆனால், இரண்டு கட்சிகளும் கிழக்கு முதலமைச்சர் விவகாரத்துக்குள் மாட்டிக் கொண்டு காலத்தைக் கடத்துகின்றன.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விலகியது.

அந்தத் தருணத்திலிருந்து பெரும்பான்றையற்ற நிலையில், கிழக்கு மாகாண சபையின் ஆட்சியையும் தார்மீக ரீதியாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இழந்துவிட்டது. அன்றிலிருந்து சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாக புதிய முதலமைச்சர் சர்ச்சை நீடிக்கின்றது.

தமிழ் பேசும் மக்களுக்கிடையில் கடந்த கால அசாதாரண  சூழ்நிலைமைகளினால் ஏற்பட்ட இன ரீதியான முறுகல்களையும், கசப்புணர்வுகளையும் குறைப்பதற்கான வழிவகைகளை நோக்கியும் செல்ல வேண்டிய வேளை இது.

அதற்கான ஒரு சந்தர்ப்பமாக கிழக்கு மாகாண சபை விவகாரத்தை(யும்) கைக்கொள்ள வேண்டும். மாறாக, முறுகலையும், கசப்புணர்வையும் அதிகரிக்கும் விடயமாக மாற்றிவிடக் கூடாது.

2012ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மத்தியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது.

அப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி என்கிற நான்கு முனைப் போட்டியே காணப்பட்டது.

எது எப்படியாக இருந்தாலும் தனித்த ஒரு கட்சி ஆட்சியமைக்கும் சூழலை கிழக்கு மாகாண சபையின் தேர்தல் முடிவுகள் வழங்காது என்கிற நிலையில், தேர்தல் காலத்திலேயே கூட்டாட்சிக்கான அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் விடுத்தது.

0229தேர்தல் முடிவுகளும் அதையே பிரதிபலித்தன. மொத்தமுள்ள 37 ஆசனங்களில்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14 (2 போனஸ்) ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 8 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தது.

அந்தத் தருணத்திலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ§க்கு முதலமைச்சர் பதவியை விட்டுத் தருவதாகக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டாட்சிக்கான அழைப்பினை விடுத்தது. சில சந்திப்புக்களும் கூட அப்போது இரு கட்சிகளுக்கும் இடையில் நடைபெற்றன.

ஆனாலும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கான ஆதரவினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கியது.

அப்போது, மொத்தமுள்ள 5 வருடங்களில் 2½ வருடங்கள் என்கிற அளவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ§ம் முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்து கொள்வதென்று இணக்கப்பாடு காணப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

najeebஅதன்பிரகாரமே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அப்துல் மஜித் முஹமட் நஜீப் (தனித்த) கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது முதலமைச்சரானார்.

கிழக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பாட்டுள்ள ஆட்சி மாற்ற சூழ்நிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ§ம் இணைந்தே எதிர்கொள்ள வேண்டும்.

எந்தவொரு  தருணத்திலும் மாற்றுக் கட்சியொன்றோடு இணைந்து ஆட்சியமைக்கும் சூழலுக்கு செல்லக் கூடாது. அது, தமிழ்- முஸ்லிம் உறவினை இன்னமும் சீர்கெடுத்துவிடும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவோடோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடனோ ஆட்சியமைப்பதனை பெருமளவில் விரும்பவில்லை. அது, ஒப்பீட்டளவில் சரியாகவும் இருக்காது.

மறுபுறத்தில், ஸ்ரீலங்கா லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒத்துழைப்போடு ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் செய்யப்பட்ட பழைய ஒப்பந்தத்தைக் காட்டி ஒத்துழைப்பினை வழங்குவதற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக தெரிகின்றது. இது, தார்மீக ரீதியில் நியாயமான விடயம் அல்ல.

ஏனெனில், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து முஸ்லிம் மக்களின் ஆணையினால் வெளியேறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக மீள் இணைவது பொருத்தமானது அல்ல.

அதுபோல, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய தருணத்திலேயே அதற்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் மீறப்பட்டுவிட்டதாகவே அர்த்தம் கொள்ளக் கூடியது.

இவ்வாறான நிலையில், புதிய அரசியல் சூழலை ஏற்படுத்துவது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிந்திக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ§க்கும் இப்போதுள்ள இழுபறியில் வைக்கப்படும் வாதங்களும் கவனிக்கக் கூடியதாக இருக்கின்றது. ‘கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் காலத்திலும், அதன் பின்னரும் முதலமைச்சர் பதவி விட்டுத் தருகின்றோம்.

கூட்டாட்சிக்கு வாருங்கள் என்று அழைத்தோம். அப்போது அதனை நிராகரித்துவிட்டு மஹிந்வோடு இணைந்து ஆட்சியை அமைத்தார்கள்.

இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை விட்டுத்தர வேண்டும் என்று கோருவது என்ன வகையிலான நியாயம்?’ என்கிற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாதம் இருக்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ, ‘கிழக்கு மாகாண சபையில் மொத்தமுள்ள 37 உறுப்பினர்களில் 15 பேர் முஸ்லிம்கள். ஆகவே, தார்மீக ரீதியில் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக இருக்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ளது. அதனைக் கருத்தில் கொண்டும் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்க வேண்டும். பழைய விடயங்களைப் பேசுவதற்கான காலம் இதுவல்ல.’ என்கிறது.

இந்த இழுபறிக்கு மத்தியில் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இரண்டு தரப்பும் அணுகியிருக்கின்றது. ஆனாலும், அவர் கிழக்கு மாகாண சபை விடயத்தில் தான் தலையிடுவதை விரும்பவில்லை என்று கூறிவிட்டு ஒதுங்கியிருக்கின்றார். இதை ஒத்த கருத்தையே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முன்வைத்திருப்பதாகத் தெரிகின்றது.

ஜனாதிபதியும், பிரதமரும் தலையிடாது ஒதுங்கியதையும் நல்ல விடயமாகவே கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாகவுள்ள தமிழ் பேசும் சமூகங்கள் தங்களது பிரச்சினைகள் தங்களுக்குள்ளேயே பேசித் தீர்ப்பதற்கான சந்தர்ப்பத்தின் ஆரம்பமாக இந்த முதலமைச்சர் விவகாரம் இருக்கலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ§ம் தமது மக்களின் அபிப்பிராயங்களை பிரதிபலிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதை யாரும் நிராகரிக்க முடியாது.

ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலினைக் கருத்தில் கொண்டு மாத்திரம் விடாப்பிடியான நிலைப்பாட்டினை இப்போது கைக்கொள்வது கிழக்கில் பெரும் முறுகலை ஏற்படுத்தி விடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கான இணக்கப்பாடோ, பேச்சுவார்த்தைகளோ அடுத்த கட்ட நோக்கி நகர வேண்டிய தருணம். அது, புத்திஜீவிகளின் பங்களிப்போடு முன்னெடுக்கப்பட வேண்டும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் புத்திஜீவிகளின் பங்களிப்பு என்பது பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இல்லாமல் எப்போதாவது பயன்படுத்தப்படும் அளவிலேயே இருந்து வந்திருக்கின்றது.

வாக்குகளிலான தேர்தல் புத்திஜீவிகளின் பங்களிப்பை பெருமளவில் அனுமதித்து வந்ததும் இல்லை. அதுவே, அரசியலில் இருந்து புத்திஜீவிகளை ஒதுங்கவும் வைத்திருக்கின்றது.

ஆனால், தமிழ்- முஸ்லிம் சமூக அரசியலில் புத்திஜீவிகளின் பங்களிப்பு மிகவும் அவசியமாக இருக்கின்றது. தூர நோக்கிலான சிந்தனையோடும், இணக்கப்பாட்டோடும் இரு சமூகங்களும் ஒன்றாகப் பயணிப்பதற்கு அது உதவும்.

மாறாக, இனமான அரசியலை வாக்குகளைப் பெறுவதற்காக மேற்கொள்ளும் சக்திகளையே தீர்மானம் எடுப்பவர்களாக அனுமதிக்கும் போது பிரச்சினையின் தீவிரம் அதிகரிக்கவே செய்யும்.

இங்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

முரண்பாடுகள் முன்னோக்கிச் செல்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்கியது இல்லை. இவ்வாறான நிலையில், நிலையான பேச்சுக்களினூடு ஒருவரை மற்றொருவர் புறந்தள்ளாது கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தினை கையாள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ§ம் அரசியல் ரீதியிலான தீர்மானமாக மட்டும் கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தை கையாளமால் சமூக ஒற்றுமை மற்றும் இணக்கப்பாட்டின் அடிப்படையிலும் அணுக வேண்டும். அதனை தமது மக்களிடம் தெளிவாக முன்வைக்க வேண்டும்.

இன்னும் 2½ வருடங்கள் மாத்திரமே எஞ்சியுள்ள கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலத்தில் குரோதங்களை பெருமளவில் தோற்றுவிக்கும் சாத்தியங்களைத் தவிர்க்கலாம். அது, தமிழ்- முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் பெரும் வாய்ப்புக்களை வழங்குவதாக அமையும்!

Share.
Leave A Reply