லிங்கா படத்தால் நஷ்டம் நஷ்டம் நஷ்டம் என்று சங்கோ சங்கு ஊதிக்கொண்டிருக்கிறார்கள் சில விநியோகஸ்தர்கள். ஆனால் படத்தயாரிப்பு நிறுவனமோ லாபமும் இல்லை.
ஆனால் நஷ்டமும் இல்லை போட்ட பணத்தை எடுத்திருக்கிறார்கள். பல ஏரியாக்களில் வேண்டுமென்றே சிலர் ரஜினிக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்கிறது.
லிங்காவால் ஏற்பட்ட டமேஜ் காரணமாக உங்களுடைய இமேஜ் சரிந்து கொண்டிருக்கிறது. நீங்கள் வாய் திறக்கா விட்டால் பெரும் சிக்கலுக்குள் உங்களை தள்ளி விடுவார்கள் என்று ரஜினியைச் சிலர் உசுப்பி வருகிறார்கள். அவர் விரைவில் மௌனம் கலைத்துப் பகிரங்க பேட்டி தருவார் என்ற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அவர் மௌனம் கலைக்கிறாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் அவரது மனச்சாட்சிப்படி கற்பனையில் ஒரு பேட்டி வெளியானால் எப்படி இருக்கும் இதோ….
கேள்வி நீங்கள் ஓடாத குதிரையா?
பதில் ஓடாத குதிரைக்கிட்டே பேட்டி எடுப்பீங்களா?
கேள்வி – லிங்கா ஓடியதா…ஓடவில்லையா?
பதில் ஓடியது ஓடிக்கொண்டிருக்கிறது ஓடும்!
கேள்வி – அப்புறம் நஷ்டம் என்ற குரலும் ஓடிக்கொண்டிருக்கிறதே?
பதில் – பெரிய ஹீரோக்களின் படங்களை மினிமம் கியாரண்டி பிளான்லதான் ரிலீஸ் செய்யிறாங்க. அந்தப் பிளான்ல வெளியான படம் தான் லிங்கா. இந்த அக்ரிமென்ட்படி பணம் திருப்பித் தர வேண்டியதில்ல!
கேள்வி சரி பாபா குசேலன் படங்களும் மினிமம் கியாரண்டி பிளான்ல தானே ரிலீஸ் ஆச்சு? அப்புறம் ஏன் பணத்தைத் திருப்பிக் கொடுத்தீங்க?
பதில் – மனிதாபிமானம் பார்த்தேன். அது இப்போ தப்புன்னு பீல் பண்றேன்!
கேள்வி. நீங்க காட்டிய தவறான பாதையால் ஜில்லா படமும் நஷ்டம் என்று சொல்லி விஜய்க்கிட்டயும் 5 கோடி வாங்கிட்டாங்களே?
பதில்– இதுக்குப் புள் ஸ்டாப் வைக்கணும். அதுக்கு ஒரு பிளான் இருக்கு. அதை உங்க கிட்ட சொல்ல முடியாது. இனி எந்த ஹீரோவுக்கும் கஷ்டம் வராது!
கேள்வி – உங்க படத்துக்கு ஏகப்பட்ட ரேட் சொல்லி வியாபாரம் செஞ்சது சரியா?
பதில்– படத்தைத் தயாரிச்சவங்க யாரையும் வற்புறுத்தி வாங்கச் சொல்லவில்லையே?
கேள்வி- உங்க படம் வசூலாகும் என்று நினைச்சு வாங்கின விநியோகஸ்தர்களுக்கு லாபம் வரணுமா இல்லையா?
பதில்- லாபம் வந்தால் தயாரிப்பாளர்கள் கிட்ட போய் அண்ணே… பத்துக் கோடிக்கு வாங்கினேன். 40 கோடி கிடைச்சது. இந்தாண்ணே பத்துக் கோடின்னு இது வரைக்கும் யாராவது திருப்பிக் கொடுத்திருக்காங்களா?
கேள்வி – அஞ்சு எந்திரன் பத்துப் படையப்பாவுக்குச் சமம். லிங்கா என்று சொல்லிவித்தது தப்பு தானே?
பதில் – அது படத்தை ஓட வைக்கிற மார்க்கெட்டிங் அது தப்பா?
கேள்வி- படம் ஓடியிருந்தால் இந்தப் பிரச்சினையே இல்லையே?
பதில். என்னோட எல்லாப் படங்களும் 100 நாள் ஓடிச்சா இல்லையே? 100 ஆவது படம் ராகவேந்திரா கூடத்தான் கல்லா கட்டலை. அதுக்குப் பின்னாடி வந்த மாவீரன் என்னாச்சு? அப்புறம் கொடிபறக்குது ராஜா சின்ன ரோஜா அதிசயப்பிறவி எல்லாம் என்னாச்சு?
படங்கள் ஓடலையே ப்ளட் ஸ்டோன் என்று சொல்லி இங்கிலீஷ் படம் நடிச்சேன். அது என்ன ஹோலிவூட்ல போக்ஸ் ஆபிஸ் ஹிட்டா? லாபம் கிடைக்கல என்று யாராவது கொடி பிடிச்சாங்களா?
அதுக்கு அப்புறமா 60 படம் நடிச்சிருக்கேனே. ஒரு படம் ஓடினா கொண்டாடுவாங்க. ஒரு படம் படுத்துச்சின்னா கல் எடுத்து வீசுவாங்க. எல்லாத்தையும் பார்த்துட்டேன். ஆனால் நானே யாரையும் போய் என்னை வைச்சுப் படம் எடுங்கன்னு சொல்றது இல்லை.
என் படத்தை வாங்கிக்குங்கன்னு சொன்னதும் இல்லை. பொய்க்கணக்கு காட்டி அக்ரிமென்ட்டை மீறி பணத்தைக் கொடுன்னு சொன்னால் கொடுத்துட முடியுமா?
அப்போ லிங்கா படத்தில் வசூல் இருந்ததா சொல்றீங்களா?
பதில் – சென்னையில் முதல் நாள் 150 ரூபா டிக்கெட்டை 500 ரூபாய்க்கு வித்தாங்க. ராத்திரி ஒரு மணிக் காட்சிக்கு ஒரு டிக்கெட் ஆயிரம் ரூபாய்க்கு வித்த தியேட்டருங்களும் எனக்குத் தெரியும். அதே சமயம் பிளாக்கில் 300 ரூபாய்க்கும் வித்தாங்க. தியேட்டர்ல நாலு நாள் வசூலான பார்க்கிங் கேன்டீன் வியாபாரமும் எனக்குத் தெரியும். இங்கே யார் உண்மையச் சொல்றாங்க. ஆனால் உண்மை தெரிய கொஞ்சம் லேட்டாகும்.
கேள்வி– ஊர்ல இருக்கிற எல்லாத் தியேட்டர்லயும் ஒரே படத்தை ரிலீஸ் செய்யிறதால்தான் இந்தப் பிரச்சினையா?
பதில் – நோ கமென்ட்
கேள்வி- சரி படத்தை முதலிலேயே விநியோகஸ்தர்களுக்குப் போட்டுக் காட்டி படத்தோட விலையை நிர்ணயம் செஞ்சிருக்கலாமே!
பதில் – பாயாசம் கொடுத்தால் சாப்பிட்டுப் பாக்கணும் பாயசத்துல முந்திரி இன்னும் போடணும் சர்க்கரை கம்மின்னு ஆளாளுக்குச் சொல்லிக்கிட்டுப் போனால் எப்படி? அதனால் படத்தைக் அவங்களுக்குப் போட்டுக் காட்டுறதை நிப்பாட்டியாச்சு!
கேள்வி – பணத்தைக் கொடுத்துப் பொருளை வாங்கிறவங்களுக்குப் பொருளைக் காட்டாமல் எப்படி விக்கிறது?
பதில்- இங்கே அதுல இடியப்பச் சிக்கல் இருக்குதுன்னு சொல்றேன் விட்டுடுங்க!
கேள்வி- தமிழ்ப் படங்களோட பட்ஜேட் அதிகப்பட்சம் 50லிருந்து 60 கோடிதான். அதுக்கு மேல 100 கோடின்னு போய் எடுத்தால் சிக்கல் வருது ஒப்புக்கிறீங்களா?
பதில் -எதை வச்சி அளவு போடறீங்க? இங்கே ஒரு டைரக்டர் 25 கோடி சம்பளம் கேட்கிறது உங்களுக்குத் தெரியுமா?
கேள்வி – 100 கோடி பட்ஜெட் 1000 தியேட்டர்களில் ரிலீஸ்ன்னு வெளியிட்ட எந்திரன் படத்துலயும் நஷ்டம் என்று சொல்லி கோர்ட்டுக்குப் போனாங்க. திரும்பவும் அதே ஸ்டைல் தேவையா?
பதில்– உங்க ஆலோசனைக்கு நன்றி!
கேள்வி- அடுத்து உங்க படத்தை ஷங்கர் கூட்டணியில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் உங்கள் இரண்டாவது பேரன் யாத்ராவின் பெயரில் 200 கோடியில் எடுக்கப் போறதாச் சொல்றாங்களே?
பதில் – பேட்டியை முடிச்சிக்கலாம்!
இப்படி ஒரு பேட்டி வரும்ம்ம்ம்…ஆனால் அது எப்போ என்று தான் தெரியாது.