முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்து அதன்மூலம் முறையான திட்டங்களை வகுத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரும் இது விடயமாக பலசுற்றுப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இது வரை முன்னாள் ஜனாதிபதி உறுதியான பதில் எதையும் தெரிவிக்கவில்லை என்பதுடன் கட்சியின் அடி மட்டம் வரை பேச்சுவார்த்தையை முன்னெடுக்கப்படுமென்றும் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்நாட்களில் மஹிந்த ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோரை ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரிவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுத்தேர்தல் நடத்த வேண்டாம்: ஜனாதிபதியிடம் கோரிக்கை
அவசரமாக பொதுத்தேர்தல் ஒன்றை நடத்த வேண்டாம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றத்தை தெரிவு செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தற்போதுள்ள நாடாளுமன்ற தேசிய அரசாங்கமாக செயற்பட முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேசிய அரசாங்கமாக செயற்பட வேண்டுமாயின் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் எனவும் சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.