கிழக்கு மாகாண சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். அவருடைய பெயர் அடுத்த 72 மணி நேரத்தில் அறிவிக்கப்படும்.
அது தொடர்பான ஆலோசனைகள் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பீடத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் முகாமைத்துவ அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மருதமுனை கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்ற அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் மத்தியகுழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி காலத்தில் நாம் அந்த அரசுக்கு ஆதரவு வழங்கியதுடன், கிழக்கு மாகாண சபைக்கு இரண்டரை வருடகாலம் முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டோம்.
அந்தவகையில் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்த உடன்படிக்கையை நாம் எடுத்து கூறியதுடன், மிகுதி இரண்டரை வருடத்தை மு.கா. வுக்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டோம்.
இந்த உடன்படிக்கையை அவர் ஏற்றுக் கொண்டதுடன், முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
இதற்கமைய நாம் கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் யார் என்ற பெயர் விபரங்களை அடுத்த 72 மணி நேரத்தில் வெளியிடுவோம்.
கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமக்கு ஆதரவு வழங்குமென எதிர்பார்க்கிறோம் அதற்கான அழைப்பை விடுவோம்.
இதே வேளை கிழக்கு மாகாகண சபை தேசிய அரசொன்றுக்கு முன்னுதாரணமாக அமையும் என நான் கருதுகின்றேன். மேலும் அரசின் 100 நாள் வேலைதிட்டத்தில் அபிவிருத்தி குறித்து நாம் எதிர்பார்க்க முடியாது.
இது அரசியல் யாப்பு திருத்தம், சட்டரீதியான ஏற்பாடுகள் மற்றும் நல்லாட்சி ஒன்றினை உறுதி செய்யும் வகையிலேயே அமைந்துள்ளது.
இது தொடர்பில் சிறுபான்மை மக்கள் மத்தியில் உரிய தெளிவு அவசியமாகும். அதேவேளை, அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பிலும் சிறுபான்மை மக்களின் அபிப்பிராயங்கள் அவசியமாகும்.
இது குறித்து நாம் கலந்துரையாடி ஆலோசனைகளை முன்வைக்கலாம். எதிர் காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
அந்தவகையில் சிறுபான்மை கட்சிகள் இந்த ஆட்சியில் பங்குதாரர்களாகி சாத்தியமான ஆட்சி அதிகாரத்தை நிர்வகித்துக் கொள்வது அத்தியாவசியமாகும் என்றார்.
இதேவேளை, சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற எம்.வை.எம். மன்சூரின் 25ஆவது நினைவுதின நிகழ்வில் பிரதம அதிதியாக்க கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறுகையில்,
இன்று தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அரசியல் ஒரு புதிய கட்டத்தை அடைந்திருக்கின்றது. இன்று பரஸ்பரம் விட்டுக்கொடுப்போடு இலங்கை என்ற தேசியத்துக்குள் தமிழ்ப்பேசும் சமூகங்கள் உச்சக்கட்ட அதிகாரப் பகிர்வை அனுபவிப்பதற்கான தகுதி குறித்து போராடிக்கொண்டிருக்கின்றோம்.
கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் நியாயப்படுத்துகின்ற விடயங்களைப் பொறுத்தவரையில் ஆசன வித்தியாசங்களை வைத்து கிழக்கு மாகாண சபை ஆட்சி என்ற விடயத்தில் ஒரு பெரிய கயிறிழுப்பு நடந்துகொண்டிருக்கின்றது.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எங்களுக்கு வித்தியாசமான மக்கள் ஆணை கிடைத்தது. அது சாதாரணமான மக்கள் ஆணையல்ல. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கிடைத்த மக்கள் ஆணையாகும்.
ஆனால், அந்தத் தேர்தலின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் வாக்களித்த மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக நடந்துகொண்டு ஆளுங்கட்சியுடன் சேர்ந்து அதனை விரயஞ் செய்து விட்டதாகவும் சோரம்போய் விட்டதாகவும் கூறப்பட்டது.
இன்றும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதற்காக எங்கள் மீது வசை பாடிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அரசியலில் சில நியாயங்களை அவர்கள் புரிந்துகொள்ளல் வேண்டும்.
அன்று கிழக்கு மாகாணசபை விடயத்தில் அரசுடன் நாங்கள் ஒத்துப் போகாதிருந்தால் வடமாகாண சபைத் தேர்தலையே நடத்தியிருக்க மாட்டார்கள்.
இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தோதல் நடைபெற உள்ள சூழ்நிலையில் இந்நாட்டு தெற்கில் வாழும் சிங்கள மக்கள் மத்தியில் இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நல்லாட்சி நிறுவப்படுவதற்காக வரிந்து கட்டிக்கொண்டு புறப்பட்ட முற்போக்குச் சக்திகள் இனவாதம் என்ற பிற்போக்கு அரசியல் படுகுழிக்குள் இழுத்துக்கொண்டு போய்த் தள்ளுகின்ற விதத்தில் நாம் வடகிழக்கு அரசியல் பற்றி சிந்திப்பது தவறாகும்.
அதேவேளையில் முஸ்லிம் காங்கிரஸுடைய உரிமையை வழங்க வேண்டிய கடப்பாட்டை புதிய ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.
ஜனாதிபதியின் பார்வையில் யார் எந்தப்பதவியில் இருந்தார் அல்லது இருக்கின்றார் என்பது அவருக்கு முக்கியமல்ல. தனது அரசியல் கூட்டணி செய்து கொண்ட உடன்படிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற நம்பகத் தன்மையோடு முஸ்லிம் காங்கிரஸுக்கு கிழக்கில் முதலமைச்சர் பதவியை வழங்குவது என்ற முடிவை எடுத்திருக்கின்றார்.
அதற்காக அவருக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டு இருக்கின்றோம் என்றார்.