இத்தேர்தலில் நீங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் “தமிழீழம்” அமைப்பதற்கான ஆணையாகும். அடுத்த பொது தேர்தல் சுதந்திரம் பெற்ற தமிழீழத்தில்தான் நடைபெறும்.
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் பொதுக் கூட்ட மேடைகளில் செய்த முழுக்கம் இதுதான்.
அரசியலில் வாக்குறுதிகளின் ஆயுள் எப்போதும் மிகக் குறைவானதாகவே இருக்கிறது. கூட்டணியினர் மக்களுக்கு வழங்கிய நான்கு வயதுவரைக் கூட வாழவில்லை.
1981ம் ஆண்டு தமிழீழ கோரிக்கைக்கு பதிலாக கிடைத்த மாவட்ட அபிவிருத்தி சபையோடு தேர்தலில் போட்டியிட்டனர் தமிழர் விடுதலைக் கூட்டணியினர்.
மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலை நிராகரிப்பது என்று உமா-சுந்தரம் குழுவினர் முடிவு செய்தனர். “புதிய பாதை” பத்திரிகையில் மாவட்ட அபிவிருத்தி சபையை கண்டித்து காரசாரமான விமர்சனங்கள் தொடுக்கப்பட்டன.
புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவை ஆதியோடந்தமாய் அமிர் அறிந்து வைத்திருந்தார். அதனால் உமா-சுந்தரம் குழுவினர் தனது தலைமைக்கு எதிரானவர்கள் என்ற கோபத்தில் இருந்தார்.
பிரபாகரன் தனக்கு எதிராக செல்லமாட்டார் என்ற நம்பிக்கையில் இருந்த அமிர். உமா-சுந்தரம் குழுவினரது நிராகரிப்பு பிரச்சாரத்தைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
அமுதர் குனிந்து நின்றார்.
யாழ் நகரில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பிரச்சாரக் கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. தலைவர் அமிர் உட்பட மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் வேட்பாளர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர்.
திடீரென கூட்டத்தில் சலசலப்பு ஆயுதங்களோடு தோன்றினார்கள் சில இளைஞர்கள். அவர்கள் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.
கூட்டத்தினர் சிதறி ஓட தொடங்கினர்.
“உயிர் தமிழுக்கு, உடல் மண்ணுக்கு”
“உச்சி மீது வானிடிந்து வீழந்தாலும் அஞ்சோம்”
என்றெல்லாம் சிங்கம் போல் கர்ஜிக்கக்கூடிய பேச்சாளர்கள் மேடையில் வீற்றிருந்தனர். வான் இடிந்து விழவில்லை. வானை நோக்கி துப்பாக்கி வோட்டுக்கள் மட்டுமே தீர்க்கப்பட்டன.
பொதுக் கூட்டமேடையில் தளபதி அமிர் மட்டுமே தனித்து நின்றார். அவரோடு வீற்றிருந்தவர்களை காணவில்லை.
உடல் மண்ணுக்கும், உயிர் தமிழுக்கும் கொடுக்க இது தரணமல்ல என நினைத்து தப்பியோடினார்களோ தெரியவில்லை
அமுதர் ஓடவில்லை அசையாமல் நின்றார். ‘கூவிப் பிதற்றட்டுமே’ தெரிந்த தனது அணியினரை நினைத்து நிச்சியம் அவர் வருந்தியிருப்பார்.
துணிச்சலை பொறுத்தவரை இரும்பு மனிதன் நாகநாதனுக்கு பின்னர் அமுதர்தான். அவரது இடத்தை நிரப்ப அப்போதும் சரி இப்போதும் சரி கூட்ணியில் ஆள் கிடையாது.
யாழ் நகர் கூட்டம் குழுப்பத்தில் முடிந்தது. உமா-சுந்தரம் குழுவினரே அந்த கூட்டத்தை குழப்பினார்கள்.
அவர்கள் நினைத்திருந்தால் அமுதரை சுட்டிருக்க முடியும். அவ்வாறான ஒரு எண்ணம் அப்போது யாருக்கும் எழுந்திருக்கவில்லை. ஏனெனில்.., ஆயதப் போராட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் அனைவருமே அமுதரை நேசித்து வளர்ந்தவர்கள்.
தலைவர்களது வேகம் போதாது என்று கோபப்பட்டார்கள், அவர்களது உயிர் வேண்டும் என்று குறிவைக்கவில்லை.
தமிழர் விடுதலைக் கூட்டணி முதலாலித்துவ தலைமை.. “தமது நலன்கள், பதவிகள் என்பவற்றை பாதுகாத்துக்கொண்டு தான் உரிமை போராட்டம் பற்றிய முடிவுகளை எடுப்பார்கள்″.
இவ்வாறு இடதுசாரி சிந்தனையுள்ள தமிழ் இளைஞர்கள் கூறினார்கள். உமா- சுந்தரம் குழுவினர்களும் அவ்வாறு தான் கருத்துக்கொண்டிருந்தனர்.
அதற்கு அமுதர் உடனடியாக பதில் அளித்தார்.
“நான் இலங்கையின் பிரபல இடதுசாரி என். எம் பேரேராவின் மாணவன். சோசலிசத்தை விரும்புபவன். சோசலிச தமிழீழம் என்ற எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டிருக்கிறோம்”. என்று பேசுவார் அமிர்.
இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை கூறவேண்டும்.
1980களில் பல்கலைகழக மாணவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக கிழந்தெழுந்தார்கள்.
“வேகம் போதாது. தமிழீழத்தை கூட்டணி பெற்று தராது. பாராளுமன்றவாதிகளினால் போராட்டம் நடத்தமுடியாது” என்றெல்லாம் பிரச்சாரம் செய்த பல்கலைகழக யாழ் மாணவர்கள் செய்த ஒரே காரியம் கூட்டணியினரை கோபப்படவைத்தது.
அமிர்தலிங்கத்தின் கொடும்பாவியை வீதீ வீதியாக இழுத்துச் சென்று கொழுத்தி எரித்தனர்.
பல்கலைகழக யாழ் மாணவர்கள் தங்கள் கையைவிட்டுச் செல்லத்தொடங்கிவிட்டதை கூட்டணி கவலையோடு கவனித்தது.
1971இல் தரப்படுத்தலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழ் மாணவர்களையும், தமிழ் மாணவர் பேரவையையும் தனது தலைமையின் கீழ் கொண்டு வந்தவர்கள் கூட்டணியினர். 1980களில் மாணவர்கள் தமக்கெதிராக மாறிவிட்டதை சகிக்கமுடியவில்லை.
கொடும்பாவி எரிப்பை கண்டிக்க யாழ் பல்கலைகழகம் முன்பாக உள்ள ஒரு வளவுக்குள் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பொதுக் கூட்டம் நடத்தியது. பொதுக் கூட்ட மேடையை சுற்றி பொலிசார் பாதுகாப்பு வழங்கினார்கள்.
மேடையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரம்வரை கயிறுகட்டி யாரும் மேடையை நெருங்க முடியாதவாறு பாதுகாப்பு செய்யப்பட்டது.
மாணவர்கள் மீது பாச்சல்
தமக்கு எதிரான அரசியல்வாதிகளை துரோகிகள் என்று கூட்டணியினர்கள் முன்னர் கூறுவது வழக்கம்.
கூட்டணியினர்கள் யாரைப் பார்த்து துரோகிகள் என்று சுட்டிக்காட்டுகிறார்களோ அவர்களை மாணவர்களும் இளைஞர்களும் விரேதமாக நோக்குவது 1970வதுகளில் நடந்த கதை.
ஆனால்… 1980களில் நிலமை தலைகீழாக மாறிவிட்டது.
மாணவர்கள் மீது சீறினார்கள் கூட்டணியினர். அரசாங்கத்திடம் சலுகைகள் எதிர்பார்க்கும் விரிவுரையாளர்கள் சிலர் மாணவர்களை தூண்டிவிடுகிறார்கள் என்றும் பேசினார்கள்.
அனைத்து வசைகளையும் மிஞ்சிவிட என்ற வேகத்தோடு மேடையில் பேசினார் ஆலாலசுந்திரம் “அடலேறு” ஆலால சுந்தரம்.
குதிரை ஓடி வந்த -சிலதுகள் யாழ் பல்கலைகழகத்துக்குள் படிக்கவிருப்பமில்லாமல் குழப்ப வேலைசெய்கின்றன என்றார் அவர்.
கூட்டத்தை அவதானித்துக்கொண்டிருந்த மாணவர்களில் சிலர் கற்களை எடுத்துக்கொண்டனர். அவர்களை வேறு சில மாணவர்கள் தடுத்துவிட்டதால் ஆலால சுந்தரத்தின் தலை தப்பியது.
குதிரை ஓடுவதென்றால் தனக்கு பதிலாக இன்னொருவரை பரீட்சை எழுதவைத்து பாஸ் ஆகுவது என்று பொருள்.
தமக்கு எதிரானவர்கள் என்றால் அவர்களை தரம் தாழ்த்துவதுவதில் சகல நாகரீக எல்லைகளையும் தாண்டிச்சென்று வசைபாட தலைவர்கள் தயங்குவதில்லை.
அந்தக்கூட்டத்தில் மிகமுக்கிய பேச்சாளராக விளங்கியவர் உணர்ச்சி கவிஞ்ஞர் என்றழைக்கப்படும் காசி ஆனந்தன்.
“மார்கசியம் படித்தவன் -கிழித்தவன் எவனாவது இருந்தால் வா என் தலைவர் அமிரொடு விவாதிக்க உங்களுக்கு தகுதியில்லை. என்னோடு வா விவாதம் நடத்தலாம்”
பல்கலைகழக மாணவர்களுக்கு சவால் விட்டு காசியானந’தன் பேசியது.
கும்பியும் தளபதியும்
காசி ஆனந்தன் என்றவுடன் இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதையும் இப்போதே சொல்லிவிடுகிறேன்.
1983 க்கு பின்னர் – ஆண்டு நினைவில்?
தமிழ் நாட்டில் மதுரையில் ஒரு பொதுக் கூட்டம். அதில் கலந்துகொண்டு காசியானந்தன் உரையாற்றினார்.
“தம்பி பிரபாகரன் தமிழீழத்தை மீட்டெடுத்து தளபதி அமுதரின் காலில் சமர்ப்பிப்பார்”
என்று பேசிவிட்டார் காசி ஆனந்தன்.
அப்போது அமுதரோடு பிரபா முரண்பட்டிருந்த நேரம்.
காசியானந்தனை கூப்பிட்டனப்பினார் பிரபாகரன். அவ்வாறான பேச்சுக்களை நிறுத்துமாறு பிரபாகரன் கண்டிப்பாக தெரிவித்து விட.. கப்சிப் ஆகிவிட்டார் காசியானந்தன்.
தொடரும்…
அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -13 – அற்புதன்