சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர், சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும், தாமரைக் கோபுரம் (Lotus Tower) கட்டுமானப் பணிக்கான ஆலோசனைக் கட்டணமாக மாதம் ஒரு இலட்சம் ரூபாவை இரகசியமாகப் பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக இருக்கும், மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவுக்கே, இந்த தொகையை சிறிலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் இரகசியமாக வழங்கி வந்துள்ளார்.
2013ம் ஆண்டுக்கான ஆலோசனைக் கட்டணம் முழுவதும் , ஸ்ரான்டட் ஸ்ராட்டட் வங்கியில் உள்ள மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவின் 001131168901 இலக்க வங்கிக் கணக்கில் சிறிலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தினால் வைப்பிலிடப்பட்டுள்ளது.
2012, 2014ம் ஆண்டுக்கான கொடுப்பனவுகள் குறித்த விபரங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை.
முன்னைய ஆட்சியின் போது, இராணுவ அதிகாரிகளை தமது பக்கத்தில் வைத்திருப்பதற்காக, இராஜதந்திர பதவிகள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிஷா பிஸ்வாலுக்கும் அப்பம் – கொழும்பில் தொடரும் ‘அப்பம்’ இராஜதந்திரம்
03-02-2014
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தனது நேற்றைய நீண்ட சந்திப்புகளை, இராப்போசன விருந்துடன் நிறைவு செய்ததாக டுவிட்டரில் எழுதியுள்ளார்.
இந்த இராப்போசன விருந்தில் தாம் முதல் முறையாக சிறிலங்கா அப்பத்தை சுவைத்துப் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இராப்போசன விருந்தில் சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் அமர்ந்திருக்கும் ஒளிப்படத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
சிறிலங்காவில் அண்மைக்காலமாக அரசியலில் அப்பம் முக்கிய இடத்தை வகித்து வருகிறது.
தன்னுடன் ஒன்றாக இராப்போசனமாக அப்பம் சாப்பிட்ட, மைத்திரிபால சிறிசேன மறுநாள் காலையில் சொல்லிக் கொள்ளாமல் எதிரணிக்கு ஓடி விட்டதாக, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூட்டங்களில் தெரிவித்து வந்தார்.
அத்துடன் இனிமேல் தாம் யாருக்கும், அப்பம் கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.