இலங்கையின் வடக்கே வவுனியா ஓமந்தை வீதிச் சோதனை முகாமின் சோதனை நடவடிக்கைகள் யாவும் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் இயல்பாகப் போக்குவரத்து செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்திருக்கின்றது.

பாதுகாப்பு அமைச்சு விடுத்த உத்தரவொன்றுக்கு அமைவாக திங்கட்கிழமை முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான சகல போக்குவரத்துக்களையும் கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த சோதனைச்சாவடி சர்வதேச அளவில் அறியப்பட்டிருந்தது.

இந்த சோதனைச்சாவடியின் ஊடாக பயணம் செய்பவர்களும் அவர்களின் உடைமைகள், வாகனங்கள், வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படும் பொருட்கள் என்பன முழுமையாக சோதனையிடப்பட்ட பின்பே தொடர்ந்து பிரயாணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் ஓமந்தை சோதனைச்சாவடியில் அரச படையினரும், அதற்கு அப்பால் விடுதலைப்புலிகளும் தமது சோதனைச்சாவடிகளை அமைத்து முழுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இரண்டு நாடுகளுக்கிடையிலான ஓர் எல்லைப்புற சோதனைச்சாவடியை நினைவுபடுத்தும் வகையில் இந்த சோதனை நடவடிக்கைகளை இரு தரப்பினரும் அப்போது மேற்கொண்டிருந்தனர்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தபின்பு விடுதலைப்புலிளின் சோதனைச்சாவடி இருக்கவில்லை. ஆயினும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியைத் தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி அரசு தொடர்ந்து இயக்கி வந்தது.

150203110123_omanthai_624x351_bbc_nocredit

யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகளின் பின்னர், 2013 ஆம் ஆண்டு ஓமந்தை சோதனைச்சாவடியின் சோதனை நடவடிக்கைகளில் தளர்வேற்படுத்தி வாகனங்கள் மாத்திரம் பதிவு செய்து செல்லும் நடைமுறை கைக்கொள்ளப்பட்டிருந்தது.

அதேநேரம் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களைத் தனியாகப் பதிவு செய்து அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் அண்மைய ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வெளிநாட்டவர்கள் வடக்கிற்குச் செல்வதானால், பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது சோதனை மற்றும் வாகனப் பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, வெளிநாட்டவரோ உள்நாட்வரரோ எவரும் எந்தவிதத் தடை தாமதமின்றி ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

எனினும் வடக்கில் இருந்து பழைய இரும்புப் பொருட்களை எற்றி வரும் ட்ரக் வண்டிகளில் யுத்த மோதல்களில் கைவிடப்பட்ட அல்லது வெடிக்காமல் கிடந்த வெடிப்பொருட்களும் சேர்த்து கொண்டு வரப்படக்கூடும் என்பதற்காக அந்த ட்ரக் வண்டிகள் மாத்திரம் சோதனையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஓமந்தை சோதனைச்சாவடியின் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதனால் தாமதமின்றியும் சுதந்திரமாகவும் பயணம் செய்வதற்கான வாய்ப்பு எற்பட்டிருக்கின்றது எனக் கூறும் பொதுமக்கள் புதிய அரசின் இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.

Share.
Leave A Reply