அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலர் நிசா பிஸ்வால் இலங்கைக்கு வருகை தந்து ஒரு சில மணி நேரத்தில் நிறுத்தப்பட்ட ஓமந்தை சோதனை நடவடிக்கைகள் மீண்டும் வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் வடக்கே, கடந்த திங்கட்கிழமை 2 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டிருந்த ஓமந்தை சோதனைச் சாவடியின் சோதனை நடவடிக்கைகள், புதன்கிழமை இரவு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சில் இருந்து கிடைத்த திடீர் உத்தரவையடுத்தே இந்த சோதனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பெப்ரவரி 2 ஆம் திகதி பகல் விடுத்த உத்தரவுக்கு அமைவாக இந்த சோதனைச் சாவடியின் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, ஏ9 வீதியில் வாகனங்கள் எந்தவித சோதனைகளுமின்றி செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

ஓமந்தை சோதனைச்சாவடியின் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், வடக்கு நோக்கிச் செல்கின்ற லொறிகளில் வெடிபொருட்கள் மற்றும் பைனாகுலர்ஸ் போன்ற வடபகுதிக்குக் கொண்டு செல்ல முடியாதவை என்று தடை செய்யப்பட்டிருந்த பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பதைப் பரீட்சிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

omanthaia
‘சோதனை நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்து பழையபடி நடந்துகொள்ளுமாறு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது’

அதேவேளை, வடக்கில் இருந்து பழைய இரும்புப் பொருட்களை ஏற்றிவருகின்ற லொறிகளில் யுத்த மோதல்களின்போது கைவிடப்பட்ட அல்லது அப்பகுதிகளில் கண்டெடுக்கப்படுகின்ற வெடிபொருட்களும் பழைய இரும்புப் பொருட்களுடன் கொண்டு வரப்படலாம் என்பதால், பழைய இரும்புப் பொருட்களை ஏற்றி வருகின்ற லொறிகள் சோதனையிடப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, சோதனை நடடிக்கைகள் நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட இரண்டாவது நாளான நேற்று புதன்கிழமை இரவு முதல் மீண்டும் ஓமந்தை சோதனைச்சாவடியில் சோதனை நடவடிக்கைகள் முன்னைய நடைமுறைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்றன.

ஓமந்தையில் சோதனை நடவடிக்கைள் நிறுத்தப்பட்டிருப்பதாத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றதே, நீங்கள் ஏன் சோதனையிடுகின்றீர்கள் என ஓமந்தை சோதனைச்சாவடிடியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அங்குள்ள அதிகாரிகளிடம் வினவியுள்ளனர்.

‘சோதனை நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்து பழையபடி நடந்துகொள்ளுமாறு எங்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே நாங்கள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்’ என்று அங்குள்ள அதிகாரிள் ஓமந்தை ஊடாகப் பயணம் செய்த பயணிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இன்றைய மதிய (05-02-2014)இலங்கை செய்திகளை பார்வைிடும்

Share.
Leave A Reply