ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையில் அரசி முன்னெடுத்து வருகின்ற 100 நாள் வேலைத்திட்டத்துக்குப் பிறகு இலங்கை அரசியலின் திசைமார்க்கம் எவ்வாறு அமையப் போகிறது என்று சிந்திக்கத் தூண்டுகிற வகையிலான கருத்துகளை கடந்த சில நாட்களாக அரசியல் தலைவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறும் என்று கூறியிருக்கும் பிரதமர் விக்கிரமசிங்க அந்தத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களை கைப்பற்றக்கூடிய கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்வதற்கு கடுமையாகப் பாடுபடவேண்டும் என்று தனது கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் வலியுறுத்திக் கேட்டிருக்கிறார்.

அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நிமல் சிறிபால டி சில்வா எந்த நேரத்திலும் பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இருக்கிறது என்றும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சகல முற்போக்கு சக்திகளினதும் தேசபக்த சக்திகளினதும் ஆதரவைத் திரட்டப் போவதாகவும் கூறியிருக்கிறார்.

இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஐ.தே.கவைப் பாதிக்கக் கூடிய வகையில் நடந்து கொள்ளப் போவதில்லை என்றும், இதேபோன்றே சுதந்திரக் கட்சியினரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றத்தைத் தரப் போவதில்லை என்றும் கூறியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

நூறு நாள் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்ற அரசை ‘தேசிய அரசு’ என்று வர்ணிக்கின்ற பிரதமர் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சி கூடுதலான ஆசனங்களைப் பெற்றாலும் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசொன்றையே மீண்டும் அமைக்கப் போவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்று இலங்கையில் காணப்படுவது முன்னென்றுமில்லாத வகையிலான ஒரு அரசியல் நிலைவரமாகும். சுதந்திரக் கட்சியின் தலைவியாக இருந்த திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை ஜனாதிபதியாகவும் ஐ.தே.கவின் தலைவர் விக்கிரமசிங்கவை பிரதமராகவும் கொண்டிருந்த அனுபவம் இலங்கையர்களுக்கு ஏற்கனவே உண்டு என்றபோதிலும், அப்போது “இரு தலைவர்களுக்கும் இடையே ‘சக வாழ்வு ஆட்சி முறை” ஒன்றை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கவில்லை.

ஆனால், இன்று ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு அளித்த உறுதிமொழியின் பிரகாரம் 100 நாள் வேலைத்திட்டத்தை ஐ.தே.க. தலைவரைக் கொண்ட நிர்வாகமே நடைமுறைப்படுத்துவதில் இறங்கியிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் கூடுதல் ஆசனங்களை (127) கொண்டிருக்கும் சுதந்திரக் கட்சி, அந்த 100 நாள் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்கின்ற அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவராகவும் அக்கட்சியைச் சேர்ந்தவரே இருக்கிறார். நாடாளுமன்றத்தில் கூடுதல் ஆசனங்களைக் கொண்டிருக்கும் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் விசித்திரமான அரசியல் சூழ்நிலை.

சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன ராஜபக்‌ஷ அரசிலிருந்து வெளியேறி எதிரணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்கென்று தனியான கட்சிக் கட்டமைப்பொன்று இருக்கவில்லை.

ஜனாதிபதி ராஜபக்‌ஷவுக்கு எதிராக அவரை நிறுத்திய பெருவாரியான எதிர்க்கட்சிகளில் ஐ.தே.க. மாத்திரமே பாரிய வாக்கு வங்கியைக் கொண்டதாகும்.

அந்த வாக்கு வங்கி இல்லாவிட்டால் மைத்திரிபால சிறிசேனவினால் ராஜபக்‌ஷவைத் தோற்கடித்திருக்கவே முடியாது. இத்தகைய பின்புலத்திலேயே இன்று ஜனாதிபதியின் தலைமையிலான சுதந்திரக் கட்சிக்கும் பிரதமரின் ஐ.தே.கவுக்கும் இடையிலான சகவாழ்வு அரசியலை நோக்க வேண்டும்.

எது எவ்வாறிருந்தாலும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.கவும் சுதந்திரக் கட்சியும் எதிரெதிர் முகாம்களாகவே போட்டியிடப் போகின்றன என்பது வெளிப்படையானது.

ஒன்றுக்கொன்று முரண்பாடான கொள்கைத் திட்டங்களை நாட்டு மக்களிடம் முன்வைத்து இரு கட்சிகளும் வாக்குக் கேட்கும் பட்சத்தில் எதிர்கால சகவாழ்வுக்கான வாய்ப்புகளின் நிலையென்ன?

சுதந்திரக் கட்சியுடன் தேசிய அரசொன்றை அமைப்பதே தனது நோக்கம் என்று பிரகடனம் செய்திருக்கும் பிரதமர் விக்கிரமசிங்க, தேர்தல் பிரசாரங்களின் போது ஜனாதிபதியின் சுதந்திரக் கட்சிக்கு எதிரான நிலைப்பாடுகளை எவ்வாறு மக்களுக்கு கூற முடியும்?

ஐ.தே.கவினதும் எதிரணிக் கட்சிகளினதும் வாக்குகளினால் ஜனாதிபதியாக வந்திருக்கும் மைத்திரிபால சிறிசேன, தனக்கு எதிராக மேடைகளில் பிரசாரம் செய்தவர்களை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யுமாறு எவ்வாறு மக்களை கேட்கப்போகிறார்?

சுதந்திரக் கட்சிக்குள் மீண்டும் ஆதிக்கம் செலுத்த முடியாதவராக ஓரங்கட்டப்பட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அக்கட்சிக்குள் இருக்கின்ற தனது விசுவாசிகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்துவக் கட்சிகளில் சிலவற்றையும் சேகரித்துக் கொண்டு தனியான அணியொன்றை உருவாக்குவதற்கான சாத்தியப்பாடு இருக்கிறதா? இவையெல்லாம் தென்னிலங்கையின் இன்றைய விசித்திரமான அரசியல் சூழ்நிலையில் விடை வேண்டி நிற்கும் முக்கியமான கேள்விகள்!

வீ. தனபாலசிங்கம்

Share.
Leave A Reply