டெல்லி தேர்தல் வெற்றியால் உற்சாகத்தில் இருந்த ஆதரவாளர்கள் மத்தியில், வெற்றிக்களிப்பில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தன் மனைவியை கட்டிப்பிடித்து தன்னோடு எப்போதும் இருப்பதற்காக காதலோடு நன்றி கூறினார்.
கெஜ்ரிவாலும் அவரது மனைவி சுனிதாவும் முசோரியில் உள்ள தேசிய நிர்வாக அகாடமியில் ஒன்றாக படித்தவர்கள், கல்லூரிக்காலத்திலேயே காதலித்த இருவரும் படிப்பு முடிந்து இந்திய வருவாய்த்துறை அதிகாரிகளாக பணியில் சேர்ந்தவர்கள். இருவருக்கும் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கி, முதல் சுற்று முவுகள் வெளியாகத் தொடங்கிய நேரத்திலிருந்து கெஜ்ரிவால் மகிழ்ச்சியான மனநிலையில் காணப்பட்டார்.
அவரது மனைவி சுனிதாவும் தனது கணவர் மீண்டும் டெல்லியின் முதல்வராக பதவியேற்க உள்ளதை எண்ணி ஆனந்த வெள்ளத்தில் மிதந்தார்.
கெஜ்ரிவாலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பக்கபலமாக இருந்தாலும் அவரது சுதந்திரத்தில் என்றுமே தலையிடாதவர் சுனிதா.
அரிதாகவே கட்சி அலுவலகத்திற்கு வரும் சுனிதாவை இன்று வெற்றியை கொண்டாட கட்சி அலுவலகத்திற்கு கூட்டி வந்தார் கெஜ்ரிவால். அப்போது அவரை அன்போடு கட்டிப்பிடித்து எப்போதும் தன்னுடன் இருப்பதற்காக தன் காதல் மனைவிக்கு நன்றி கூறினார்.
மகிழ்ச்சியில் தனது மனைவியை பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட கெஜ்ரிவால் “என் மனைவி எப்போதுமே கேமராவிற்கு முன் வருவதில்லை. ஆனால் அவர் அப்போதும் என்னுடனே இருக்கிறார். அவர் என்னோடு இல்லையென்றால் என்னால் எதையுமே சாதித்திருக்க முடியாது“ என்றார்.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் முதன் முதலாக சுனிதாவிடம் தனது காதலை வெளிப்படுத்திய சம்பவத்தை இந்த வெற்றிக்களிப்பினிடையே நினைவு கூர்ந்த கெஜ்ரிவால் “ஒரு நாள் அகாடமியின் கதவை தட்டி உள்ளே சென்று அவளிடம் என் காதலை தெரிவித்தேன். உடனடியாக சுனிதாவும் தனது சம்மதத்தை தெரிவித்தார்” என்றார்.
உண்மையில், காதல் தம்பதியருக்கு தங்கள் வாழ்வின் அதி உன்னதமான நாள் இன்று தான்.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி:முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் பிப்ரவரி 14-ம் தேதி பதவியேற்பு
10-02-2014
டெல்லி முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பிப்ரவரி 14-ம் தேதி பதவியேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, 67 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.
பாரதீய ஜனதா கட்சி வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கருத்து கணிப்புகளில் பாரதீய ஜனதா 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெரும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இவ்விவகாரத்தில் கருத்து கணிப்பு பொய்யாகிவிட்டது. கடந்த தேர்தலில் 32 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாரதீய ஜனதா வெறும் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
புதுடெல்லி சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார். அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் சர்மாவை 31,583 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில் டெல்லியில் வேரூன்றி நின்ற காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி டெல்லியின் 7-வது முதல்மந்தியாக கெஜ்ரிவால் பதவியேற்றார்.
அப்போதைய தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல் மந்திரியான ஷீலா திட்சீத்தை 25,864 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
வெறும் 49 நாட்கள் மட்டும் ஆட்சி செய்துவிட்டு லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் ஆட்சியை விட்டு அரவிந்த் கெஜ்ரிவால் விலகினார்.
தற்போது முதல்-மந்திரியாகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பிப்ரவரி 14-ம் தேதி பதவியேற்கிறார். டெல்லி ரால் லீலா மைதானத்தில் நடைபெறும் விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக பதவியேற்கிறார் என்று அக்கட்சியின் தலைவர் அசுதோஷ் தெரிவித்துள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.