‘துடைப்பம்தான் எங்கள் கட்சியின் சின்னம். அரசியலில் நிறைந்துள்ள ஊழலை இந்த துடைப்பத்தை கொண்டு சுத்தம் செய்ய முடியும் என நம்புகிறேன்!’ -2012ம் ஆண்டு இறுதியில் கட்சியை துவங்கி, 2013ம் ஆண்டு முதன் முதலாக டெல்லி சட்டமன்ற தேர்தலை  சந்தித்த ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இப்படி அறிவித்த போது, பலரும் இதை கிண்டலடித்தனர்.

துடைப்பத்தை கூட கெஜ்ரிவால் விடவில்லையா? என தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி வெளிப்படையாகவே கிண்டல் அடித்தார்.

ஆனால் அந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், வெற்றி பெற்று, டெல்லியின் முதல்வரானார் கெஜ்ரிவால். இப்போது மீண்டும் கெஜ்ரிவாலின் எழுச்சியும், துடைப்பத்தின் வெற்றியும் விஸ்வரூபம் எடுத்து தொடர.. இரண்டாவது முறை முதல்வராக இருக்கிறார் கெஜ்ரிவால்.

அரியானா மாநிலம், பிவானி மாவட்டத்தில் உள்ள சிவானி எனும் ஊரில் பிறந்த அரவிந்த் கெஜ்ரிவால், காரக்பூர் ஐ.ஐ.டி.யில் இயந்திரவியல் பொறியியல் பட்டதாரி.

இந்திய குடியுரிமை பணிகளில் ஒன்றான ஐ.ஆர்.எஸ். எனும் இந்திய வருவாய்துறை பணியில் சேர்ந்து, டெல்லியில் வருமான வரி ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றினார். அந்த பணியின் போதே ஊழலுக்கு எதிரான போராட்டங்களை அவர் மேற்கொண்டதாக சொல்கின்றனர்.

அரசு பணியில் இருந்து கொண்டே போராடுவதில் உள்ள சிக்கலால், 2000ம் ஆண்டில் தனது பணியில் இருந்து தற்காலிகமாக விலகிய கெஜ்ரிவால், டெல்லியில் குடிமக்கள் இயக்கம் எனும் அமைப்பை துவக்கினார்.

நியாயமான, ஒளிவுமறைவற்ற அரசு அமைய வேண்டும் என போராடிய அவர், 2006ம் ஆண்டு தனது பணியில் இருந்து முழுமையாக விலகினார்.

அதன் பின்னர் தகவல் பெறும் உரிமைக்கான போராட்டத்திலும் பங்கேற்ற இவர், அந்த சட்டத்தை பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்களிலும் தன்னை ஈடுபடுத்தி வந்தார்.

இது போன்ற நடவடிக்கைகளால் பிரபல தனியார் தொலைக்காட்சியான சி என் என் -ஐபிஎன் தொலைக்காட்சி இவருக்கு 2006ம் ஆண்டு சிறந்த இந்தியருக்கான பட்டத்தை வழங்கியது.

aam20with20hazare

இந்த சூழலில்தான் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையில், ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டார் கெஜ்ரிவால்.

பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து, 2012ம் ஆண்டு இறுதியில் ஆம் ஆத்மி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தேர்தல் அரசியலுக்கு வந்த பின்னர் இவரது நடவடிக்கைகள் எல்லாம் மக்களை திரும்பி பார்க்க வைத்தது.

2013ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில், அரசியல் பின்னணி இல்லாதவர்களை வேட்பாளர்களாக போட்டியிடச் செய்தது அதில் மிக முக்கியமான ஒன்று.

தேர்தலில் போட்டி என அறிவித்த போது அரசியல் கட்சிகள், ஆம் ஆத்மியை அலட்சியமாகத்தான் பார்த்தது. டெல்லி தேர்தலில் அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரசுக்கும், பி.ஜே.பி.க்குமிடையேதான் போட்டி இருக்கும் என்ற கருத்து நிலவியது.

இந்த சூழலில் வெளியான கருத்து கணிப்புகள் எப்படியும் 15 முதல் 20 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெல்லும் என சொல்ல அதிர்ந்து போனது காங்கிரசும், பி.ஜே.பி.யும்.

08-sheila-dikshit300ஆனால் அதை விட அதிக இடத்தில், அதாவது மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 28 தொகுதிகளில் வென்றது ஆம் ஆத்மி. 15 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை பல ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார் கெஜ்ரிவால்.

பி.ஜே.பி. 31 தொகுதியில் வென்ற போதும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆம் ஆத்மிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர காங்கிரஸ் முன்வர, அதையேற்று டெல்லியில் ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி. முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால்.

aam203

பதவியேற்ற முதல் நாளிலேயே நிதி, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய கெஜ்ரிவால், அதிரடி மின்கட்டண குறைப்பு,   இலவச குடிநீர் திட்டம், வீடு இல்லாதவர்கள் பயன்படுத்த பழுதடைந்த பஸ்கள், ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கை என இவரது நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறையை கண்டித்து, கெஜ்ரிவால் போராட்டம் நடத்த அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸை கோபப்படுத்தியது.

இந்த சூழலில் டெல்லி சட்டமன்றத்தில் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முயன்றார் கெஜ்ரிவால். மொத்தமுள்ளா 60 பேரில், 47 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, போதிய ஆதரவு கிடைக்காமல், தீர்மானம் தோல்வியை தழுவியது.

இதையடுத்து ஜன்லோக்பால் மசோதாவை காரணம் காட்டியே, ஆட்சி அமைத்து 49 நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்.

தொடர்ந்து, 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், வாரணாசி தொகுதியில், பி.ஜே.பி.யின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்ட கெஜ்ரிவால் அங்கு தோல்வியை தழுவினார்.

டெல்லியில் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, யாரும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. இதையடுத்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

டெல்லியில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க மறுக்கவே, சட்டசபையை கலைத்து விட்டு மீண்டும் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

kejri 20- 20kiran 20bedi

ஆம் ஆத்மியின் சார்பில் இந்த தேர்தலில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். நாடாளுமன்ற தேர்தல், சில மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் வென்ற தன்னம்பிக்கையில், மோடி அலை, மோடி மேஜிக் என களமிறங்கிய பி.ஜே.பி, முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மியில் இருந்து விலகிய, முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடியை அறிவித்தது.

தேர்தலில் ஆம் ஆத்மி – பி.ஜே.பி.யிடையே கடும் போட்டி நிலவும் என்பன போன்ற கருத்துகள்தான் கருத்து கணிப்பில் வெளியானது.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், மோடி… மோடி… என வாய் வலிக்க வலிக்கப் பேசிய பி.ஜே.பி.யினருக்கு சரியான அடி கொடுத்துள்ளனர் டெல்லி மக்கள். காங்கிரஸ், பி.ஜே.பி.யின் முதல்வர் வேட்பாளர்கள் உட்பட அனைவரும் தோற்க, போட்டியிட்ட 70 இடங்களில், 67 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

கிரண்பேடி உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் தோல்வியை தழுவ, வெறும் 3 பேர் மட்டுமே பி.ஜே.பியின் தரப்பில் வெற்றி பெற்றுள்ளனர். மறுபுறம் காங்கிரசை முழுமையாக துடைத்தெறிந்து விட்டனர் டெல்லி மக்கள்.

aam202

95 சதவீத இடங்களில், வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகிறார் கெஜ்ரிவால். நிச்சயம் இது வரலாறு காணாத தேர்தல் வெற்றிதான்.

49 நாட்களில் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தபோது, அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தனக்கு வாக்களித்த மக்களைப்பற்றி கவலைப்படாமல் இருப்பதா? என பெரும் கேள்வியும் எழுந்தது.

ஆனால் இவற்றை எல்லாம் மீறி 95 சதவீத இடங்களை ஆம் ஆத்மிக்கு வழங்கி, கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வராக்கியுள்ளனர் டெல்லி மக்கள்.

அதுவும் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு அனுப்பியுள்ளது என்பது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

இளம் முதல்வர் என அடையாளத்துடனும், பெருமையுடனும் இரண்டாவது முறை டெல்லியின் முதல்வராக பதவியேற்கும் கெஜ்ரிவால், தேர்தலுக்கு பின்னால் பல முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

மக்களை பற்றி கவலைப்படாமல் ராஜினாமா செய்தவர் என்ற இமேஜை உடைக்க 5 ஆண்டுகள் அவர் எந்த சிக்கலும் இல்லாமல் பதவியை தொடர வேண்டியது அவசியம்.

“மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மக்கள் ஏற்படுத்தித் தந்தால், தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியில் இருப்பேன், இடையில் ஓட மாட்டேன்’ என சத்தியம் செய்யாத குறையாக அரவிந்த் கெஜ்ரிவால் சொன்னதை, அப்படியே நடத்தி காட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அடுத்து ஜன்லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுவது, மின் கட்டணத்தை குறைப்பது, இலவச தண்ணீர் போன்ற ஏற்கனவே கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளை செயல்படுத்த வேண்டிய கட்டாயமும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர வேண்டிய கட்டாயமும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உள்ளது.

மக்கள் கெஜ்ரிவாலிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்பது 95 சதவீத இடங்களில் வெற்றி பெற வைத்ததன் மூலம் மக்கள் உணர்த்தி விட்டார்கள்.

இனி மக்களின் ஆதரவை நிலை நிறுத்திக்கொள்ள அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய மிகப்பெரிய சவால் கெஜ்ரிவாலின் முன் இருக்கிறது.

ச.ஜெ.ரவி

Share.
Leave A Reply