எதிர்வரும் பொதுதேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியினை மீண்டும் உருவாக்கி ஆட்சியை கைப்பற்றுவதே தமது இலக்கு என தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பங்காளி கட்சிகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என தெரிவித் துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியை ஓரங்கட்டக் கூடிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே எனவும் ஐ.ம.சு.மு.வின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பிரதான பங்காளிக்கட்சிகள் நேற்று கொழும்பு தேசிய நூலகத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தின. அதில் தமது கருத்துக்களை முன்வைத்தபோதே அக்கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
ஜனநாயக இடதுசாரி முன்னிணி சார்பில் வாசுதேவ நாணயக்கார தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச மக்கள் ஐக்கிய முன்னணியின் தினேஷ் குணவர்த்தன தூய்மையான ஹெலஉறுமயவின் உதய கம்பன் பில இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.
வாசுதேவ நாணயக்கார
இதில் கருத்து தெரிவித்த ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ குறிப்பிடுகையில்;
ஐக்கிய தேசிய கட்சியையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்கத்தை எதிர்காலத்திலும் உருவாக்குவதற்கு நாம் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை.
ஐக்கிய தேசிய கட்சி வேறு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேறு, எமது தேவை ஐக்கிய தேசிய கட்சியினை தோற்கடித்து பிரதமர் உள்ளடங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை பலமானதொரு அரசாங்கமாக உருவாக்குவதே.
நாட்டின் சரியான பொருளாதார வளர்ச்சி அதன் மூலமான தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச விவகாரங்களை மிக சரியாக கையாளும் வகையிலேயே கடந்த காலங்களில் ஆட்சி அமைந்திருந்தது.
தற்போது அவை முழுமையாக மாற்றமடைந்துள்ள நிலையில் மீண்டும் இந்த நாட்டிற்கு தேவையானதும், ஏற்ற வகையிலுமான ஆட்சியினை உருவாக்கவே முயற்சிக்கின்றோம்.
இந்த நாட்டின் தேசிய பிரச்சினைகளை தீர்த்து ஜனநாயக நாட்டினை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதை எதிர்காலத்தில் உறுதியாக உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.
எனவே தேசிய அரசாங்கம் இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. குழப்பகர ஆட்சிக்கு மக்கள் விரும்பவில்லை. எனவே, எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தனித்து போட்டியிட்டு ஆட்சியினை தக்க வைப்பதா அல்லது வென்றாலும் தோற்றாலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசை கொண்டு செல்வதா என்பதை இப்போது தீர்மானிக்க வேண்டும்.
தேர்தல் காலத்தில் மக்கள் தனித்து சரிபாதியாக வாக்கு கொடுத்தனர். அவர்கள் பெரும்பான்மை வாக்குகளை கொடுத்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கினர்.
அதில் முரண்பாடுகள் ஏற்படாவிட்டாலும் இன்று மக்கள் மீண்டும் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். இப்போது நாம் மக்களின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதில் எம் எவருக்கும் ஆட்சேபமில்லை. மக்களின் மனங்களில் அவர் உள்ளார். அது தவிர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பலர் மீண்டும் மகிந்த ராஜபக்ஷ ஆட்சியை விரும்புகின்றனர். எம்மிடமும் வெளிப்படையாக தெரிவிக்கின்றனர்.
எனவே, நாம் இது தொடர்பில் பரிசீலனை செய்ய வேண்டும். இதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முரண்பாடுகள் ஏற்படப் போவதில்லை.
அவர் ஜனாதிபதி அவருடன் எமக்கு போட்டிஇல்லை. நாம் போட்டி போடுவது பிரதமருக்காகவே இதில் ரணில் விக்ரமசிங்கவை வீழ்த்த மிக சரியான தெரிவு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவே. எனவே, அவரை பிரதமர் வேட்பாளராகுவதை பற்றி கலந்தாலோசித்து தீர்மானமெடுக்க வேண்டும்.
தினேஷ் குணவர்த்தன
இவ்ஊடகவியலாளர் சந்திப்பின் கலந்து கொண்டிருந்த மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன கருத்து தெரிவிக்கையில்;
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருப்பினும் 58 லட்சம் மக்களின் ஆதரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளார்.
அவரை மக்கள் இன்றும் ஆதரிக்கின்றனர். தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களை திருப்திப்படுத்தவில்லை. தேசிய அரசுக்கு வாக்கு கொடுத்த பல லட்சம் மக்கள்இன்று மீண்டும் எம்முடன் கைக்கோர்க்க தயாராக உள்ளனர்.
அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை பலமான அரசாங்கமாக உருவாக்க வேண்டும். அதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவருவதில் எமக்கு ஆட்சேபனையில்லை.
அதேபோல் முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தலைராக்கிய தனிக் கட்சியினை உருவாக்கும் நோக்கம் எமக்கு இல்லை.
இவ்வாறான தீர்மானங்கள் எடுப்பது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியினை முழுமையாக அழித்து விடும். எனவே மக்களை வலுப்படுத்த மீண்டும் முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும்.
அதேவேளை, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவிக்கையில்;
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மக்கள் தெரிவு செய்தனர். ஆனால் பிரதமராக ரணில் விக்கிரம சிங்கவை மக்கள் தெரிவு செய்யவில்லை.
ஜனாதிபதியும் எதிர்க்கட்சியும் ஒரு கட்சியாக இருக்கையில் பிரதமர் வேறு கட்சியில் இருந்து ஆட்சி நடத்துகின்றார். இது குழப்பகரமான தேசிய அரசு.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஹெல உறுமய போன்ற கட்சிகள் தீர்மானமெடுக்கின்றனர். இது மக்களின் தெரிவில் உருவான ஆட்சி அல்ல.
ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் வாக்குக் கொடுத்தது 9 ஆம் திகதி இவ்வாறான குழப்பகர ஆட்சியினை உருவாக்க அல்ல. இப்போது மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து அனைவரும் போட்டியிட்டு பின்னர் முதலிடம் வகிப்பர் பிரதமர் இரண்டாவது வருபவர், உப பிரதமர் என கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.
இவர்களின் செயற்பாட்டினால் நாட்டில் எதிர்க்கட்சி ஒன்று இல்லாது போய்விட்டது. தேசிய அரசு உருவாக தனித்து போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை. இதில் தெளிவாக தெரிகின்றது.
சர்வதேசத்திற்கும் புலம்பெயர் புலி அமைப்புகளுக்கு தேவையான அரசை உருவாக்க இவர்கள் முயற்சிக்கின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
மீண்டும் மக்கள் ஆட்சிக்கு திரும்ப வேண்டும். எனவே, வெற்றியின் பயணத்தினை மீண்டும் நாம் ஆரம்பித்து வெற்றியினை பெறக் கூடிய பொருத்தமான தலைமைத்துவத்துடன் பொதுத் தேர்தலில் களமிறங்க வேண்டும்.
அதேபோல் எதிர்வரும் 18 ஆம் திகதி இவ் முயற்சியினை வெற்றி பெறச் செய்யும் வகையில் மக்களை மீண்டும் ஒன்றுபடுத்தி ஆட்சியினை கைப்பற்றும் மாநாட்டினை நாம் மேற்கொள்ளவுள்ளோம்.
இதில் ஐக்கிய மக்கள் சுதந்திரகக் கூட்டணியில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். எனவே, 18 ஆம் திகதி நுகேகொடையில் அனைத்து மக்களையும் எதிர்பார்க்கின்றோம்.
உதய கம்மன்பில
தூய்மையான ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிடுகையில்;
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை அழித்து மக்களை சீரழிக்கும் சர்வதேச முயற்சிக்கு உதவும் வகையிலேயேதேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
அவர்களின் நூறு நாட்கள் வேலைத்திட்டம் வெறும் கண்துடைப்புமட்டுமே. இதில் ஏமாந்து போய் நாட்டையும் மக்களையும் சீரழிக்க நாம் அனுமதிக்கக் கூடாது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியாக களமிறங்க நாம் தயார். பிரதமர் வேட்பாளரும் தயாராகவே உள்ளார். மக்களின் மனங்களிலும் உள்ள தலைவர் ஒருவரே பிரதமர் பேட்டிக்குத் தகுதியானவர் அத்துடன் அவரால் மட்டுமே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை காப்பாற்ற முடியும்.
எனவே, அதற்கு ஏற்ப மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதனை நாம் எதிர்க்கவில்லை. எதிர்வரும் 18 ஆம் திகதி நுகேகொடையில் நடாத்தவிருக்கும் மக்கள் கூட்டத்தில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.