அகமதாபாத்: குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது ஆதரவாளர்கள் கோயில் ஒன்றை கட்டியுள்ளனர்.
ஆரம்பத்தில் ராஜ்கோட் கிராமத்தில் மோடியின் புகைப்படம் ஒன்றை வைத்து சிலர் வழிபாடு செய்து வந்தனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்று பிரதமரான பின்னர் அந்த இடத்தில் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
தற்போது முழுமையடைந்துள்ள இந்த கோயிலில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் ஒடிசாவை சேர்ந்த சிற்பக்கலைஞர் உருவாக்கிய மோடியின் உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது.
முறைப்படி இந்த கோயிலை மத்திய வேளாண்மை துறை இணை மந்திரி மோகன்பாய் கல்யான்ஜிபாய் குண்டாரியா வரும் 15-ம் தேதி திறந்து வைக்கிறார்.
எனினும், ராஜ்கோட் கிராம மக்களும் அக்கம்பக்கத்து கிராமத்தினரும் கடந்த சில நாட்களாகவே காலை, மாலை இருவேளையும் இங்கு பூஜைகளை செய்ய தொடங்கி விட்டனர்.
இந்த கோயிலை கட்டுவதற்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொண்ட ‘மோடி பக்தர்’ ரமேஷ் உன்ஹாட் என்பவர், மோடியை அவரது ஆதரவாளர்கள் இரண்டாவது வல்லபாய் பட்டேலாக கருதுகின்றனர் என கூறுகிறார்.
இந்த கோயில் அமைந்திருக்கும் ராஜ்கோட் கிராம தலைவரான மன்சுக் குமார், ‘ஒவ்வொரு கிராமத்திலும் இதை போன்ற கோயில்களை கட்ட வேண்டும்’ என தெரிவித்தார்.