5 திருமணங்கள் செய்து ஆறாவதாக 20 வயதுடைய பெண்ணொருவரை புதன்கிழமை (11) வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் திருமணம் செய்ய முயன்ற 56 வயதுடைய சுவிஸ் நாட்டு பிரஜை ஒருவரை செவ்வாய்க்கிழமை (10) மாலை கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பொலிஸார் மேலும் கூறியதாவது,
’56 வயதுடைய நபர் ஒருவர் 20 வயதுடைய யுவதியொருவரை திடீரென திருமணம் செய்யவுள்ளதாக அந்தப் பிரதேச சிவில் குழுவினர் எமக்குத் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, குறித்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தினோம்.
தான் சுவிட்ஸர்லாந்திலிருந்து வருகை தந்ததாக அந்த நபர் கூறிய போதிலும் அவரிடம் கடவுச் சீட்டோ அல்லது அவரை அடையாளப்படுத்தக்கூடிய எந்தவொரு ஆவணமோ இருக்கவில்லை. இந்நிலையில், அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டோம்.
இதன்போது, அச்சந்தேகநபர் திருகோணமலையில் இரு பெண்களையும், வரணி பகுதியில் இரு பெண்களையும், யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு பெண்ணையும் திருமணம் செய்து ஏமாற்றியமை தெரியவந்தது.
தனது மகளைத் திருமணம் செய்வதாகக்கூறி சந்தேகநபர் 15 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டதாக இன்று (செவ்வாய்க்கிழமை) திருமணம் செய்யவிருந்த யுவதியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (11) முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதேவேளை, திருமணத்துக்கு தயாரான யுவதி நெஞ்சுவலி காரணமாக தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொலைபேசி அழைப்பின் மூலம் திருமண சம்மதம் ஏற்படுத்தப்பட்டு, திருமணம் நடத்தவிருந்ததாக பொலிஸார் கூறினர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.