அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில், சிரியாவை பூர்வகுடியாக கொண்ட மூன்று அமெரிக்க முசுலீம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
23 வயது தே ஷாடி பராகத், அவரது மனைவி யூசர் மொகமத் அபு சல்ஹா, யூசரின் சகோதரி ராசான் மொகமத் அபு சல்ஹா மூவரும், தலையை துளைத்த இரக்கமற்ற தோட்டாக்களால் மரித்தனர். கொலையாளியின் பெயர் கிரெய் ஸ்டீபன் ஹிக்ஸ், வயது 46, வெள்ளையின அமெரிக்கர்.
வடக்கு கரோலினா பல்கலைக் கழக நகரமான சாப்பல் ஹில்லில், 10.02.2014 செவ்வாய் மாலையன்று இந்த பயங்கரம் நடந்திருக்கிறது.
கொல்லப்பட்ட Shaddy Barakat, 23, his wife, Yusor Mohammad Abu-Salha, 21, and her sister, Razan Mohammad Abu-Salha, 19.
கொலையாளியும், கொல்லப்பட்டவர்களும் அண்டை வீட்டுக்காரர்கள். ஆகவே “இது ஏற்கனவே இருந்த கார் நிறுத்த ‘பார்க்கிங்’ பிரச்சினை” என்று போலிசு முதல் தகவலாக தெரிவித்து விட்டது.
கார்ப்பரேட் ஊடகங்களும் இதை வழிமொழிந்து மற்றுமொரு குற்றச் செய்தியாக மூலையில் போட்டு கடந்து போக நினைத்தன. ஆனால் சமூக வலைத்தள நண்பர்கள் அதை கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கின்றனர்.
#MuslimLivesMatter #ChapelHillShooting எனும் ஹேஷ் டேக் மூலம் இந்த அநீதி குறித்த பல்வேறு செய்திகள் வெளியே வந்திருக்கின்றன.
அதன் பிறகே இந்த சம்பவத்தில் மத வெறுப்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரிப்பதாக போலீசு தெரிவித்திருக்கிறது. இறப்பதற்கு முன்னர் “யூதர்களைக் கொல்வோம், பாலஸ்தீனர்களைக் கொல்வோம் என்று சொல்வது எதையும் தீர்க்காது” என மத நல்லிணக்கம் வேண்டி தே பாரகத் டிவிட்டரில் கடைசியாக எழுதியிருந்தார்.
இந்தக் கருத்து முற்றிலும் நிறைவேறும் வரை அவரைப் போன்றவர்கள் உயிரை பறிகொடுக்கத்தான் வேண்டும் போலும்?
இஸ்லாம் மீதான வெறுப்பிற்கும் மற்ற மதங்களின் மீதான வெறுப்பிற்கும் பாரிய வேறுபாடு உண்டு. மற்ற மதங்களை பொதுவான நாத்திக பார்வையில் பார்க்கும் ‘முற்போக்கு’கள் கூட இசுலாம் என்றால் அந்த வெறுப்பில் அறிவியல் பார்வையைக் கழித்து விட்டு துவேசத்தை இட்டு நிரப்பிக் கொள்வர்.
காரணம் உலகமெங்கும் மேற்குலக ஊடகங்களால் அப்படித்தான் பொதுப்புத்தி இங்கே கட்டியமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே ஒரு முசுலீமை தாடி, லுங்கி, புர்கா, தீவிரமான மதவாதி என்று ஆரம்பித்து இயல்பிலேயே வெறியர்கள், கொலைகாரர்கள், காட்டுமிராண்டிகள் என்று அந்த கற்பிதம் ஆழமான வெறுப்பின் வேரை வளர்த்துக் கொண்டிருக்கிறது.
கொலை செய்த Craig Stephen Hicks
பாரிசில் நடந்த சார்லி ஹெப்டோ மீதான படுகொலை, நைஜீரியாவில் போகோ ஹாரம் கடத்தல், பாரசீகத்தில் ஐ.எஸ்-சின் நரபலிகள் என்று ‘ஆழ்ந்த மனித நேயத்துடன்’ பேசிய இதே உலகு, வடக்கு கரோலினா பயங்கரத்தை பேசவில்லை.
ஒரு விசயத்தில் என்ன நடந்தது என்பதை இணையத்தில் செல்வாக்கு மிக்க ஆளும் வர்க்க ஊடக நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட இணைப்புகளைக் கொண்டு விதண்டாவாதம் செய்பவர்களுக்கு அதிலும் முசுலீம்களை வெறுப்பவர்களுக்கு ‘ஆதாரம்’ கிடைக்காமலா போய்விடும்?
இது வெறுமனே ‘கார் பாரக்கிங்’ பிரச்சினை, இதற்கு மத முலாம் பூசக்கூடாது என்று அந்த ஆதாரக்காரர்கள் வாதிடலாம். கூடுதலாக கொலை செய்த ஹிக்ஸ் ஒரு நாத்திகர் என்பதை நாமே முதலில் சொல்லிவிடுவோம். மதங்களை விமரிசித்து அவர் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பதிவுகளை போட்டு வந்தார் என்றும் அதை எளிமைப்படுத்தி வாதிடலாம். இங்கே நாத்திகர் என்பதற்கு என்ன பொருள்?
“இசுலாம்ஃபோபியா”வும் கிறித்தவ பெரும்பான்மையும் உள்ள நாட்டில் நாத்திகம்
ஒரு விசயத்தில் என்ன நடந்தது என்பதை இணையத்தில் செல்வாக்கு மிக்க ஆளும் வர்க்க ஊடக நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட இணைப்புகளைக் கொண்டு விதண்டாவாதம் செய்பவர்களுக்கு அதிலும் முசுலீம்களை வெறுப்பவர்களுக்கு ‘ஆதாரம்’ கிடைக்காமலா போய்விடும்?
இது வெறுமனே ‘கார் பாரக்கிங்’ பிரச்சினை, இதற்கு மத முலாம் பூசக்கூடாது என்று அந்த ஆதாரக்காரர்கள் வாதிடலாம். கூடுதலாக கொலை செய்த ஹிக்ஸ் ஒரு நாத்திகர் என்பதை நாமே முதலில் சொல்லிவிடுவோம். மதங்களை விமரிசித்து அவர் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பதிவுகளை போட்டு வந்தார் என்றும் அதை எளிமைப்படுத்தி வாதிடலாம். இங்கே நாத்திகர் என்பதற்கு என்ன பொருள்?
இசுலாம்ஃபோபியா”வும் கிறித்தவ பெரும்பான்மையும் உள்ள நாட்டில் நாத்திகம் என்பது அதிகாரத்தில் உள்ள மதத்தை அம்பலப்படுத்துவதையும், சிறுபான்மையாக உள்ள மதத்தினரின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதையும் செய்ய வேண்டும்.
அனைவரையும் ஒரு சேர விமரிசிப்பது என்பது சரி என்றாலும் அதற்கும் இடம் காலம் பொருள் உண்டு.
ஹிக்ஸ் வெறுமனே கார் பார்க்கிங் பிரச்சினைக்காக கொலை செய்தார் என்றால் அது இன்னும் மோசம்.
கார் கண்டுபிடித்த ஆண்டுகளை விட அல்லாவை கண்டுபிடித்த காலம் அதிகமல்லவா, அதற்கு அதிகம் உணர்ச்சி உண்டு என்று வாதிடலாமா? காரின் உணர்ச்சியை விட கடவுளின் உணர்ச்சி பலம் வாய்ந்தது என்று ஒரு மதவாதி சொன்னால் நுகர்வு கலாச்சார மதவாதிகள் என்ன சொல்வார்கள்?
இதுதான் பிரச்சினை என்றால் அதிலும் இனவாதமும், முசுலீம் வெறுப்பும் இணைந்தே இருக்கின்றது. அமெரிக்காவில் இருக்கும் நாகரீக கனவான்கள் ஏழை நாடுகளின் மக்களை வெறுமனே மதம் சார்ந்து மட்டும் வெறுப்பதில்லை.
நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிகள் என்றே அடிப்படையில் கருதுகிறார்கள். இதே கார் பார்க்கிங் பிரச்சினையில் வேறு ஒரு அமெரிக்க வெள்ளையர் முசுலீம் வீட்டுக்காரர் இடத்தில் இருந்தால் இப்படி துப்பாக்கி வெடிக்காது.
ஒரு வேளை வெடித்த துப்பாக்கிகளும் அமெரிக்காவின் முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் போட்டி போறாமை நிறைந்த தனிநபர்வாதம் காரணமாகவே சக அமெரிக்கர்களை கொன்றிருக்கின்றன.
அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசிக்கும் மூன்றாம் உலக நாட்டு மக்களில் படிப்பு, மாத சம்பள வேலை என்று கொஞ்சம் வசதியாக வாழும் பலர் உண்மையில் வெள்ளையின கனவான்களிடம் பெயர் வாங்கும் விருப்பமும் நடைமுறையும் கொண்டவர்கள்தான்.
இருப்பினும் இவர்களை சீமான்களின் உலகத்தில் ஏற்றுக் கொள்வதற்கு சராசரியான அமெரிக்கர்கள் தயக்குவார்கள். அப்துல் கலாமே ஆனாலும், ஷாருக்கானே வந்தாலும் அமெரிக்க அதிகாரிகள் முழுவதும் அவிழ்த்துப்பார்த்து சோதித்தே அனுப்புகிறார்கள். இதற்கு அரசியல், வர்க்க பார்வையைத் தாண்டி கலாச்சாரம், பழக்க வழக்கம் என்ற காரணங்களும் இருக்கின்றன.
ஆகவே புர்கா போட்ட சிரிய அமெரிக்கர்கள் வெள்ளையின அமெரிக்கர்களின் உள்ளத்தில் நுழைவது கடினம். நாத்திகரான ஹிக்ஸ் இவர்களை வெறுப்பது மேற்கண்ட கலாச்சார காரணங்களையும் உள்ளடக்கித்தான்.
ஆகவே “இவர்களுக்கு நாகரீக உலகில் வாழத்தெரியாது, பல்கலையில் கூட புர்கா போட்டு தமது தனித்துவத்தை நிலைநாட்டுவார்கள், ஒரு காரை கூட அண்டை வீட்டுக்காரருக்கு இடையூறு செய்யாமல் நிறுத்த தெரியாது” என்றெல்லாம் ஹிக்ஸ் மனதில் இயல்பாகவே தலையெடுத்திருக்கும்.
இது ஏதோ ஒரு சில வெள்ளையின வெறியர்களின் நிலை மட்டுமா? கனவான்களின் ஊடகங்களான சிஎன்என் மற்றும் ஃபாக்ஸ் நியூஸுக்கு, பாரிஸ் தாக்குதல் மட்டும் பயங்கரவாதம்.
வடக்கு கரோலினா தாக்குதலோ ஒரு பெட்டி கிரைம். இந்த மனநிலையின் கொதிப்புதான் ஹிக்ஸ் போன்றோரின் பயங்கரங்கம்.
ஒரு முசுலீம் மூன்று நாத்திகர்களை கொல்வதும், ஒரு கிறித்தவ நாத்திகர் மூன்று முசுலீம்களை கொல்வதும் இதே ஊடகங்களுக்கு வேறாகத் தெரிகின்றன.
கொன்றவன் முசுலீம் என்றால் அவனை பயங்கரவாதி என்று அழைக்கும் உதடுகள் அதே பயங்கரத்தை ஒரு வெள்ளை கிறித்தவன் செய்தால் அவனை வெறும் மனிதன் என்று உச்சரிக்கின்றன. இது உதடுகளின் பிரச்சினையா இல்லை வெறுப்பில் விளைந்த உள்ளத்தின் காழ்ப்புணர்வா?
போலீசும், ஊடகங்களும் இதை கார் பார்க்கிங் பிரச்சினையாக முன்வைத்தாலும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் இதை மறுத்திருக்கின்றனர். கொல்லப்பட்ட பெண்களின் தந்தையான டாக்டர் முகமது அபு சல்ஹா, “இது கார் பார்க்கிங் பிரச்சியினை அல்ல.
இதற்கு முன்னரே அந்த மனிதன் எனது மகள்கள், மருமகனை துப்பாக்கியால் பலமுறை மிரட்டியிருக்கிறான். அவனோடு இணக்கமாக வாழமுடியாது என்றாலும் இந்த அளவுக்கு அவன் போவான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை” என்கிறார்.
மகள்களில் ஒருவர் அவனை வெறுப்போடு அலையும் அண்டை வீட்டுக்காரன் என்று ஒரு வாரம் முன்னர் சொன்னதாகவும் கூறியிருக்கிறார். அந்த வெறுப்பு அவர்கள் முசுலீம் என்பதாலும், புர்கா தோற்றத்தினாலும் உருவாகிய ஒன்று என்றும் அதெ மகள் கூறியிருக்கிறார்.
கொல்லப்பட்ட தே பராகத்தின் மூத்த சகோதரி சுசானி பராகத் இந்த கொலையை வெறுப்பினால் செய்யப்பட்ட ஒன்றா என்று புலனாய்வு செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஹிக்சின் மனைவி கரேன், இந்த கொலை இஸ்லாம்ஃபோபியாவால் நடக்கவில்லை என்று மறுத்திருக்கிறார். ஆனால் வெறுமனே கார் பார்க்கிங் பிரச்சினைக்காக ஒரு துப்பாக்கியை எடுத்து மூன்று தலைகளை துளைத்து கொல்லுமளவு வன்மம் ஒரு மனிதனிடம் உருவானது ஏன் என்று அவர் விளக்குவாரா?
இல்லை கடந்த காலங்களில் அம்மையாரின் கணவர் துப்பாக்கி பெல்ட்டை காண்பித்து அந்த பெண்களை மிரட்டியதெல்லாம் சாதாரணமான ஒன்று என்று கருதுவாரா? கொல்லப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கும் இவர், கொலையாளி குறித்தும் அதே அனுதாபத்தை கொண்டிருப்பது சரியா?
கரேனும், அரசு வழக்கறிஞரும் ஹிக்சின் மன நல நோய் ஒரு காரணம் என்று கூறியிருக்கின்றனர். எனில் அதே மனநலக் குன்றல் சொந்த குடும்பத்தினரையோ இல்லை வேறு எவரையோ குறி வைக்காமல் குறிப்பிட்ட மதத்தை சார்ந்த அண்டை வீட்டுக்காரர்களை கொன்றொழித்தது ஏன்?
பராகத்தும் அவரது மனைவியும் வடக்கு கரோலினா பல்கலையில் பல் மருத்துவத்தில் பயின்று வரும் மாணவர்கள். சென்ற டிசம்பரில்தான் மணமுடித்திருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்குள் அவர்களது மணவாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. தே பராகத் அங்கே சிரியா மக்களுக்கும், வீடற்ற அமெரிக்கர்களுக்கும் உதவி செய்யும் தன்னார்வல வேலைகளை செய்து வந்தார்.
வீடற்றவர்களின் புன்னகை என்ற அந்த ஹேஷ் டேக்கை போட்டு எழுதியவரின் புன்னகையை மேற்கத்திய சமூகம் உருவாக்கிய பயங்கரம் அழித்துவிட்டது.
“நாங்களும் சார்லிதான்” என்று இசுரேல் உள்ளிட்ட மேற்கத்திய ‘காந்திகள்’ ஊர்வலம் நடத்தியது போல வடக்கு கரோலினாவுக்காக “நாங்களும் முசுலீம்தான், நாங்களும் புர்கா அணிவோம்” என்று தலைவர்களை விடுங்கள் யாரேனும் வார்டு கவுன்சிலர்களாவது அணி திரள்வார்களா?
சார்லி ஹெப்டோ குறித்த வினவின் கட்டுரையை மறுக்கும் நண்பர்கள், அந்த பிரெஞ்சு பத்திரிகையை ஒரு முற்போக்கு பத்திரிகை என்று மல்லுக்கட்டி வாதாடினார்கள். அதே போல இங்கும் ஹியூஸ் ஒரு நாத்திகவாதி, இது வெறும் கார் பார்க்கிங் பிரச்சினை என்று வாதிடுவார்களா?
கொலை செய்த ஹிக்சின் மனைவி கரேன்
மேற்கத்திய நாட்டில் வாழும் முற்போக்கு என்பது அங்குள்ள சிறுபான்மை மக்களின் நலன்களோடு இணைந்தது. அனைத்தையும் ஒரே தட்டில் பார்க்கும் முற்போக்கு உண்மையில் பிற்போக்கான ஒன்றே.
ஏனெனில் அங்கே வாழும் வெள்ளை நிறவெறிக்கு அரசியல், பொருளாதார, வரலாற்று அடிப்படை உண்டு. அதாவது இந்த இனவெறிக்கு அதிகாரம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.
ஆனால் அதே பாரிசில் அல்லாவின் ராஜ்ஜியத்திற்காக ஒரு முல்லா பேசினால் அது ஒரு லூசின் உளறலாக மட்டுமே பார்க்க வேண்டும். அந்தப் பிதற்றலுக்கு சமூக நடப்பில் மதிப்பில்லை.
மேலாக மேற்கத்திய நாடுகள் அனைத்தும் இதெ முல்லாக்களை ஆதரித்து ஷேக்குகளை ஆள வைத்து வளைகுடா நாடுகளில் ஜனநாயகத்தை கொன்றொழித்தவர்கள்.
ஆகவே மேற்கத்திய நாடுகளில் நடக்கும் இசுலாமிய பயங்கரவாதமும், வல்லரசு நாடுகளின் பயங்கரவாதமும் அடிப்படையில் ஒரே தன்மை கொண்டவை அல்ல.
முன்னது பின்னது உருவாக்கிய விளைவு மட்டுமே. இந்தியாவில் இந்துமதவெறியர்களை தட்டிக் கேட்க முடியாது எனும் நிலைமை அதிகரிப்பதற்கேற்ப இங்கே இசுலாமிய இளைஞர்கள் தீவிரவாதத்தின் பக்கம் போவதை அதிகப்படுத்தும். ஆதலால் நோயை தீர்க்காமல் வலியை மட்டும் நிறுத்த முடியாது.
வடக்கு கரோலினாவில் இதுவரை முசுலீம் மக்களை எதிர்த்து எந்த மத துவேசமும் இல்லை என்று அமெரிக்க அரசு வழக்கறிஞர் கூறுகிறார். இது காமராசர் காலத்தில் சாதிக் கலவரம் இல்லை எனும் கூற்றுக்கு ஒப்பானது.
காமராசர் காலத்தில் ஆதிக்க சாதியினர் வைத்த சட்டங்களை மீறாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்தே ஆகவேண்டும். பிறகு 90களில் இந்த சார்பு நிலை கொஞ்சம் மாறியதும் அடிமைத்தனத்தை எதிர்த்து அதே மக்கள் போராடுகிறார்கள்.
விளைவு ‘கலவரங்கள்’. ஆகவே அமைதி என்பதன் பொருள் ஆதிக்கமோ இல்லை வெறுப்புணர்வோ இல்லை என்றாகிவிடாது. அதை எதிர்த்துக் கேட்கும் குரல் இல்லை என்பதால் இந்த அமைதி ஆள்வோர் போட்ட அடக்குமுறையின் அமைதி.
டிசம்பர் 2014-ல் திருமணம். பிப்ரவரி 2015-ல் மரணம்
அதே அமைதிதான் வடக்கு கரோலினா பயங்கரவாதத்தை வெறும் குற்ற நடவடிக்கையாக கடந்து போக வைக்கிறது. எல்லா வெள்ளையர்களும் இனவெறியர்கள் அல்ல.
ஆனால் எல்லா வெள்ளையர்களும் ஒரு இனவெறி, மதவெறி நடவடிக்கையை கண்டிக்காமல் அமைதி காத்தால் அதை அமைதி முலாம் பூசிய பயங்கரவாதம் என்று அழைக்கலாமா?
எல்லா முசுலீம்களும் பயங்கரவாதிகளல்ல, ஆனால் எல்லா பயங்கரவாதிளும் முசுலீம்கள்தான் என்று பழமொழி உருவாக்கி விளம்பரம் செய்த நெஞ்சங்கள் மேற்கண்ட் புதுமொழியையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
வடக்கு கரோலினா படுகொலையை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விசாரிக்காமல் நீதி கூறமுடியாது என்று இறுதியாக ஒரு சப்பைக் கட்டு கட்டப்படலாம். நல்லது. எனில் சிஎன்என், ஃபாக்ஸ் நியூஸ் தலைமை தாங்கும் மேலாதிக்க கனவான்கள் ஆரம்பத்திலேயே இதை கார் பார்க்கிங் பிரச்சினையாக அறுதியிட்டு கூற காரணம் என்ன?
ஒருவேளை இருமதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமான இந்த பயங்கரத்தை வெறுமனே பெட்டி கிரைமாக மாற்றிவிட்டார்களோ?
அப்படியும் சில கருத்துக் கந்தசாமிகளும், கருத்து காயத்ரிக்களும் வாதிடலாம்.
இதற்கு ஏன் இவ்வளவு சிரமப் படவேண்டும். எல்லா பயங்கரவாதிகளும் முசுலீம்கள் என்பதால் எல்லா முசுலீம்களையும் அழித்து விட்டால் பயங்கரவாதமே இருக்காதே?
பாசிசத்தின் மொழி அழித்தொழிப்புதான், அமைதியல்ல!
வேல்ராசன்.