யாழ்ப்பாணம், சுருவில் மற்றும் மண்டைதீவுப் பகுதிகளில் மூடப்பட்டுள்ள கிணறுகளை தோண்டி காணாமல்போனவர்கள் எவராவது குறித்த கிணறுகளுக்குள் புதைக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்த விசாரணையை மேற்கொள்ளவேண்டுமென பிரதி பொலிஸ்மா அதிபரிடம் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை
நீதிமன்ற உத்தரவைப் பெற்று இந்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபரிடம் ஐ.தே.க.வின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மகளிர் விவகார பிரதி அமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆயுதக் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் இவ்வாறு மூடப்பட்ட கிணறுகளுக்குள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கடத்தப்பட்டவர்களது உறவினர்கள் புகார் அளித்துள்ளமையினாலேயே இவ்வாறான விசாரணையை நடத்துமாறு கோரிக்கை விடுப்பதாகவும், பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வடமாகாண பிரதிபொலி ஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
கடந்த 10 ஆம் திகதி புதிய பஸ் சேவையினை ஆரம்பிப்பதற்காக நான் சுருவில் பகுதிக்கு விஜயம் செய்திருந்தேன். இந்த பஸ் சேவையை ஆரம்பித்து வைத்த பின்னர் மக்களையும் சந்தித்து நான் உரையாடியிருந்தேன்.
இதன்போது என்னை சூழ்ந்துகொண்ட பெண்கள் தமது கணவன்மார் மற்றும் மகன்மார் கடத்தப்பட்டு காணாமல்போயுள்ளனர். இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என நாம் சந்தேகிக்கின்றோம்.
படுகொலை செய்யப்பட்டவர்கள் சுருவில் சந்திப்பகுதியில் அமைந்துள்ள மூடப்பட்ட கிணற்றுக்குள் புதைக்கப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக அந்த மக்கள் என்னிடம் கூறினர்.
இந்தப் பகுதி ஆயுதக்குழுவொன்றின் கட்டுப்பாட்டின் கீழேயே இன்னமும் இருந்து வருகின்றது.
இந்தப் பகுதிகளில் மேலும் சில கிணறுகள் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் என்னிடம் தெரிவித்தனர். இந்தக் கிணறுகளை தோண்டி மக்களின் பாவனைக்கு விடுவது அவசியமானதாகும்.
அத்துடன் காணாமல்போனவர்கள் இந்தக் கிணறுகளுக்குள் புதைக்கப்பட்டார்களா என்பது தொடர்பிலும், ஆராயவேண்டியுள்ளது.
சுருவில் விஜயத்தை முடித்துக்கொண்டு நான் மண்டைதீவில் பொதுமக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டேன். இதில் ஆயிரம் பேரளவில் பங்கேற்றார்கள்.
இந்தக் கூட்டத்தில் சுருவில் பகுதியில் மக்கள் காணாமல் போனமை தொடர்பிலும், கிணறுகள் மூடப்பட்டுள்ளமை குறித்தும் நான் எனது மன ஆதங்கத்தை வெ ளிப்படுத்தினேன்.
இதன் போது அங்கிருந்த மக்கள் கருத்துத் தெரிவிக்கையில் கிணறுகள் மூடப்பட்டமையொன்றும் தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் மண்டைதீவு பகுதியிலும், ஐந்து கிணறுகள் இவ்வாறு மூடப்பட்டுள்ளன.
இந்த கிணறுகளுக்குள்ளும் காணாமல்போனவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தாமும் சந்தேகிப்பதாக அவர்கள் என்னிடம் கூறினர்.
மண்டைதீவுப் பகுதியிலுள்ள தேவாலயத்திற்கு அருகிலுள்ள கிணறும் இவ்வாறே மூடப்பட்டுள்ளது. இங்கிருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டிருந்த போதிலும் ஆயுதக்குழுவின் அலுவலகம் தற்போதும் இயங்குவதாகவே தெரிகின்றது.
இந்தப் பகுதியில் மக்கள் தொடர்ந்தும் குறித்த ஆயுதக்குழுவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியே வருகின்றனர். சுருவில் , மண்டைதீவு ஆகியபகுதிகளைப் போன்று அல்லைப்பிட்டி, மண்கும்பான், வேலணை, சரவணை, புங்குடுத்தீவு, புளியங்கூடல், நாரந்தனை, கரம்பொன், ஊர்காவற்றுறை, அனலைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, காரைநகர், ஆகிய பகுதிகளிலும் ஆயுதக்குழுவின் செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. இங்கும் மூடப்பட்ட கிணறுகள் காணப்படுகின்றன.
எனவே, இவை குறித்தும் உரிய விசாரணை நடத்தப்படவேண்டும். புதிய அரசாங்கத்தில் நான் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டதையடுத்து இந்தப் பகுதி மக்கள் தமது வாழ்வில் மாற்றங்கள் ஏற்படவேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர்.
ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல் இன்றி வாழவே இந்த மக்கள் விரும்புகின்றனர். எனவே, புதிய அரசாங்கத்தின் கீழ் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இடமளிக்க முடியாது. எனவே மக்களின் நலன்கருதி விசாரணைகளை துரிதப்படுத்தவேண்டும்.
மூடப்பட்ட கிணறுகள் தோண்டப்பட்டு விசாரணைகள் இடம்பெறுகின்ற போது காணாமல் போனோருக்கு நடந்த கதி தொடர்பில் பதில் ஏதும் கிடைக்கும் நிலை உருவாகலாம்.
எனவே, நீதிமன்ற உத்தரவைப் பெற்று இந்தக் கிணறுகளைத் தோண்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்