அரசாங்கம் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவுத் தலைவர் குமரன் பத்மநாதனை (கேபி) பற்றிய தகவல்களைத் திரட்டுவதில், விசேடமாக அவர் வெளிநாட்டில் தனது கணக்கில் வரவு வைத்திருந்த பெருந்தொகையான பணத்தை பற்றிய விபரங்;களைத் திரட்டுவதில் ஈடுபட்டுள்ளது.
கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாவனெல்லயில் வைத்துக் கூறும்போது, எல்.ரீ.ரீ.ஈ யிடமிருந்த பெருந்தொகை நிதிக்கு என்ன நடந்தது என்பதை அறிய அரசாங்கம் விரும்புகிறது எனத் தெரிவித்தார்.
விக்கிரமசிங்க அங்கு கூறும்போது, முந்தைய அரசாங்கத்துக்கு நிதி வழங்கியது மற்றும் முந்தைய அரசாங்கத்துடன் எல்.ரீ.ரீ.ஈக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்புகள் உட்பட கடந்த சில வருடங்களாக இடம்பெற்ற எல்.ரீ.ரீ.ஈயின் செயல்பாடுகளை அரசாங்கம் விசாரணை செய்ய உள்ளது.
“இது ஊழல் சம்பந்தமான எங்கள் விசாரணைகளில் ஒரு பகுதி. முன்னைய அரசாங்கம் எப்பொழுதும் எங்களுக்கு எல்.ரீ.ரீ.ஈயுடன் தொடர்புகள் இருப்பதாக குற்றம் சுமத்தி வந்தது, ஆனால் உண்மையில் அவர்கள்தான் அதனுடன் தொடர்புகளை பேணி வந்துள்ளார்கள்” என பிரதமர் தெரிவித்தார்.
இந்த விசாரணை, எல்.ரீ.ரீ.ஈயின் கப்பல்கள், தங்கம் மற்றும் யுத்தம் முடிவடைந்த பிறகும்கூட கண்டுபிடிக்க வேண்டிய பணம் என்பனவற்றைப் பற்றிய தகவல்களை சேகரிப்பதையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
வடக்கில் உள்ள பொதுமக்கள், புலிகள் பற்றி பகிர்ந்து கொள்ள தங்களிடம் சாட்சியங்கள் இருப்பதாகச் சொல்லியுள்ளார்கள். அதனால் அந்தத் தகவல்களும் கூடப் பெறப்படும் என பிரதமர் தெரிவித்தார்.
“இது ஒரு பெரிய அளவிலான விசாரணையாக இருக்கும்” என மேலும் பிரதமர் சொன்னார். பிரதமர் தொடர்ந்து தெரிவிக்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கிலுள்ள தமிழர்களை வாக்களிக்காமல் தடுப்பதற்காக எல்.ரீ.ரீ.ஈயை பயன்படுத்தும் ஒரு முயற்சியும் மேற்கொள்ளப் பட்டது என்றார்,
அவர் மேலும் தெரிவிக்கையில் ஐரோப்பிய நீதிமன்றம் எல்.ரீ.ரீ.ஈக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியபோது, நீதிமன்ற தீர்ப்பை மாற்றுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உதவுவதற்கு வேண்டிய செயற்பாடுகளை மேற்கொள்ள முன்னைய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை.”
எல்.ரீ.ரீ.ஈக்கான தடை ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்வதற்கு நாங்கள் உதவி செய்வதாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் நாங்கள் தெரிவித்துள்ளோம்” என தெரிவித்தார்.
கேபி என நன்கு அறியப்பட்ட குமரன் பத்மநாதனை இந்தியாவிடம் கையளிக்க முன்னைய அரசாங்கம் தவறியது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக கேபி இந்தியாவால் தேடப்படுவர். கடந்த வாரம் மேன்முறையீட்டு நீதிமன்றம் கேபி நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதை தடுக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேபிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு முடிவடையும் வரை அவர் நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்யும்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்தார்கள்.
கேபிக்கு எதிராக எழுப்பப் பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் மற்றும் அந்த குற்றச்சாட்டுகள் மீது விசாரணைகள் நடத்தும்படியும் மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
ஜனதா விமுக்தி பெரமுண (ஜேவிபி) கேபி மீது வழக்கு தாக்கல் செய்து அவரைக் கைது செய்யும்படி கோரிக்கை விடுக்கப்பட்டதின் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ஜேவிபி, கேபி க்கு எதிரான குற்றங்களை, அவரது கப்பல்கள், வெளிநாட்டு வங்கிகளில் வைப்பில் இடப்பட்டுள்ள அவரது பணம் மற்றும் ஆயுதக் கடத்தல் உட்பட அவருக்கு எதிரான குற்றங்களை நீதிமன்றில் விளக்கியது.
ஜேவிபி சொல்லவேண்டியதை கேட்ட பிறகு மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்தக் குற்றச்சாட்டுகள் சம்பந்தாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளைப் பற்றி காவல்துறையினரிடமிருந்து ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.
பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம், கேபி பற்றிய காவல்துறையினரின் விசாரணை அறிக்கையினை சமர்ப்பிக்கும்படி சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த வழக்கை ஒரு அவசர விடயமாக எடுத்துக் கொண்டிருப்பதால், இந்த அறிக்கையை சட்டமா அதிபர் கடந்த வாரமே தாக்கல் செய்யவேண்டும் என விரும்பியது.
கடந்த டிசம்பரில் அறிவிக்கப்பட்டதின்படி, இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ), சர்வதேச காவல்துறையான இன்ரபோலினை அணுகி முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக பத்மநாதனை விசாரணை செய்யவேண்டும் என்கிற தங்களின் வேண்டுகோளை விரைவு படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளதாம்.
த டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை தெரிவித்திருப்பதின்படி, வருடக் கணக்காக நிலுவையிலுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உதவி செய்யும்படி ஸ்ரீலங்காவை இணங்கவைத்து நீதிமன்ற வேண்டுகோளுக்கு பதிலளிக்கும்படி செய்வதற்காக இன்ரபோலின் உதவியையும் கூடக் கோரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்த வழக்கு நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் மற்றும் ஸ்ரீலங்காவிடம் இருந்து அனைத்து தகவல்களும் பெறப்பட்டால் அதை விரைவாக முடித்து விடலாம் என சி.பி.ஐ எண்ணுகிறது.
ஆகஸ்ட் 2009ல் கேபி மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார், அதன்பின் 2012 கடைசிவரை அவர் கொழும்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
எனினும் அரச பாதுகாப்புடன் ஸ்ரீலங்காவின் வட பகுதியான கிளிநொச்சியில் உள்ள அவரது தொண்டு நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக அவர் விடுவிக்கப் பட்டார்.
“ ஒத்துழைக்கும்படி ஸ்ரீலங்காவுக்கு அநேக வேண்டுகோள்களை நாங்கள் விடுத்துள்ளோம். ஆனால் நாங்கள் இப்பொழுது எங்கள் வேண்டுதலை முன்தள்ளுமாறு இன்ரபோலிடம் கேட்டுள்ளோம்” என ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.
சி.பி.ஐ இன் கீழ் இயங்கும் பல் – ஒழுங்கு கண்காணிப்பு முகவர் நிறுவனம் (எம்.டி.எம்.ஏ) மற்றும் அதில் உள்ள அதிகாரிகள், புலனாய்வு பிரிவு, மற்றும் ரோ என்பன இந்த விசாரணையை நிறைவு செய்வதற்காக சமீபத்தில் இன்னும் ஒரு வருட கால நீட்டிப்பை பெற்றுள்ளன.
எம்.டி.எம்.ஏ முன்பு ஒரு தடவை ஸ்ரீலங்காவில் வைத்து கேபி இடம் உத்தியோக பூர்வமற்ற முறையில் விசாரணைகளை நடத்தியிருந்தது, இருந்த போதிலும் அது அவரைக் காவலில் எடுத்து அவரிடம் இன்னும் முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அவரிடம் நடத்தப்பட்ட உத்தியோகப் பற்றற்ற விசாரணைகளின்போது, 1991 மே 21ல், எல்.ரீ.ரீ.ஈ யின் தற்கொலைக் குண்டுதாரி, தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்பிரச்சார மேடைமேல் வைத்து தன்னை வெடிக்க வைத்து மேற்கொண்ட ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு பின்னணியில் உள்ள சதி பற்றி தனக்கு எந்த அறிவும் இல்லை என கேபி மறுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
தன்னிடம் ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவிக்கும் சி.பி.ஐ அதை உறுதிப்படுத்துவதற்கு கேபியை விசாரிக்க வேண்டிய தேவை உள்ளதாகச் சொல்கிறது.
இந்த நிறுவனம் தனது கண்டு பிடிப்புகளுடன் கிட்டத்தட்ட 23 நாடுகளைப் பத்மநதனைப் பற்றிய தகவல்களுக்காக அணுகியுள்ளது. ஸ்ரீலங்காவைத் தவிர பெரும்பாலும் அனைத்து நாடுகளிலிருந்தும் பதில் வந்து விட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜீவின் கொலைக்கான சதி பற்றிய விசாரணைகளை நடத்த எம்.டி.எம்.ஏ நிறுவப்பட்டு 16 வருடங்கள் கடந்து விட்டன. இந்த விசாரணைக் குழுவில் 40 அதிகாரிகள் ஒரு இணை இயக்குனர் மட்டத்தில் உள்ள அதிகாரியின் கீழ் பணியாற்றியபடி, லோதி வீதியில் உள்ள சி.பி.ஐ இன் தலைமை நிலையத்தில் உள்ளார்கள். இந்த எம்.டி.எம்.ஏ பலமுறை நீட்டிப்புக்களை பெற்றாலும் அதன் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்தச் சதி முயற்சியில் பங்கு உள்ளதாகச் சொல்லப்படும் ஏனைய இரண்டு அங்கத்தவர்களான எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வே. பிரபாகரன் மற்றும் அதன் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் 2008 – 09 ல் நடைபெற்ற ஸ்ரீலங்காவின் இராணுவ நடவடிக்கைகளில் கொல்லப்பட்டு விட்டார்கள்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்