மானாமதுரை: காதல் என்பது மந்திர வார்த்தை. ‘ஆதலினால் காதல் செய்வீர்…‘ என்றான் முண்டாசு கவிஞன் பாரதி. ஏழை & பணக்காரர், உயர்ந்த ஜாதி & தாழ்ந்த ஜாதி என அத்தனை வேறுபாடுகளையும் உடைக்கும் சக்தி காதலுக்கு மட்டுமே உண்டு.
உலகின் அனைத்து மொழிகளிலும், ஆகச் சிறந்த படைப்புகளில் முதலிடம் காதல் காவியங்களுக்குத்தான். மன்னர்களின் காதல், தாஜ்மகாலாக வரலாற்றில் இடம் பிடித்தாலும் ஏழை காதலர்களின் காவியங்களும் வட்டார அளவில் இன்றளவும் பேசப்படுகின்றன.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் கல்லாகி போன காதலர்களின் கதை நூற்றாண்டுகளை கடந்து இன்றும் இப்பகுதி மக்களால் நினைவு கூறப்படுகிறது.
மானாமதுரை &சிவகங்கை சாலையில் வேலூர் விலக்கு ரோட்டில் ஒரு கி.மீ. தூரம் சென்றால், அதிகரை எனும் கிராமத்திற்கு கிளைச்சாலை பிரிகிறது.
அதன் அருகே உள்ள பொட்டல் வெளியில் ஐந்தரை அடி உயரத்தில் தூண் போல ஒரு கல்லும், நான்கடி உயரத்தில் சாய்ந்த நிலையில் ஒரு கல்லும் உள்ளன. இந்த கற்தூண்கள் காதல் தோல்வியால் கல்லாகி போன காதலர்கள் என இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
பழங்காலத்தில் மேய்ச்சலை குலத்தொழிலாக கொண்ட ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அவர்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால் இருவரும் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வந்து, கண்ணீர் சிந்தியபடி கடவுளை வேண்டி கல்லாக மாறி விட்டனர் என்று இந்த கற்கள் குறித்து இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த தூண்களை வழிபட்டால் தங்களின் காதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் இப்பகுதி காதலர்களின் மத்தியில் நிலவுகிறது.
இதனால் பல நூறாண்டுகள் கடந்தும் உறுதியாக கல்லாக நிற்கும் இந்த காதலர்களை வழிபட இன்றைய இமெயில், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் காதலர்கள் படையாக வந்து கொண்டிருக்கின்றனர்.
இங்கு வழிபட்டு, காதல் நிறைவேறி திருமணம் முடித்துக் கொண்ட ஜோடிகளும் மீண்டும் வருகின்றனர். இதையெல்லாம் மிஞ்சும் விதமாக நல்ல காதலன் அல்லது நல்ல காதலி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வருபவர்களும் உண்டு!
அருகே உள்ள உருளி கிராமத்தை சேர்ந்த முதியவர் பஞ்சையா (65) கூறுகையில், “விபரம் தெரிந்த நாள் முதல் இங்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி வருகிறேன்.
எனது தாத்தா, அப்பாவிடம் கேட்டபோது, இப்பகுதியில் உள்ள 2 கிராமங்களை சேர்ந்த இளைஞனும், இளம்பெண்ணும் காதலித்தனர்.
பெற்றோரும், உற்றாரும் அந்த காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மனம் வெறுத்த காதலர்கள் கல்லாக மாறி சாகாவரம் பெற்று நிற்கின்றனர் என்று கூறினர். கடந்த சில ஆண்டுகளாக இங்கு நிறைய காதல் ஜோடிகள் வருகின்றனர்.
இந்த கல்லின் கீழ் வளையல், மஞ்சள், பொட்டு, காசு வைத்து சாமி கும்பிட்டு விட்டு செல்கின்றனர்‘‘ என்றார். சிறிய கட்டிடம் கூட கிடையாது. வெட்ட வெளியில் இரண்டு தூண்கள்தான்.
ஆனாலும் காதலர்களுக்கு இது மாளிகை. இதை ஏழைகளின் தாஜ்மகால் என்கின்றனர் சிவகங்கை மற்றும் அருகே உள்ள மாவட்டங்களை சேர்ந்த காதலர்கள்!