நியூசிலாந்து அணியுடனான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நியூசிலாந்தில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 98 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.
சி.ஜே. எண்டர்சன் 75 ஓட்டங்களையும் (46 பந்துகள்), பி.மெக்கலம் 65 ஓட்டங்களையும் (49 பந்துகள்), எஸ்.வில்லியம்சன் 57 ஓட்டங்களையும் (65 பந்துகள்) பெற்றுக்கொடுத்தனர்.
இறுதியில் 50 பந்துவீச்சு ஓவர்கள் நிறைவின்போது நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 331 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில் நுவன் சுரங்க லக்மால், அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் நுவன் குலசேகர, ரங்கன ஹேரத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்ககை அணி 46.1 பந்துவீச்சு ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னே ஆகக்கூடுதலாக 65 ஓட்டங்களை (60 பந்துகள்) பெற்றுக்கொண்டார்.
பந்துவீச்சில் சௌத்தி, போல்ட், மில்ன், விட்டோரி, எண்டர்சன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் சி.ஜே.எண்டர்சன் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
சொந்த மண்ணில் விளையாடி வெற்றி பெற்ற நியூசிலாந்து அணிக்கு முதல் வெற்றியுடன் 2 புள்ளிகள் கிடைக்கப்பெறுகின்றன.
உலக கோப்பை 2015: ஆஸ்திரேலியாவிடம் 111 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வி
மெல்போர்ன்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2–வது ஆட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கியது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் மோதின.
இங்கிலாந்து கேப்டன் மார்கன் ‘டாஸ்’ வென்று ஆஸ்திரேலியாவை முதலில் விளையாட அழைத்தார். வார்னர், ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
வார்னர் 22 ரன்னில் பிராட் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 57 ஆக இருந்தது. அதைத்தொடர்ந்து வாட்சன் (0), சுமித் (5) ஆகியோர் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.
இதனால் ஆஸ்திரேலியா 70 ரன்னில் 3 விக்கெட்டை இழந்து (10.3 ஓவரில்) திணறியது.
4–வது விக்கெட்டான ஆரோன் பிஞ்ச்– கேப்டன் பெய்லி ஜோடி பொறுப்புடன் விளையாடியது. குறிப்பாக தொடக்க வீரர் பிஞ்ச் இங்கிலாந்து பந்து வீச்சை விளாசி தள்ளி ரன்களை குவித்தார். 102 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அவர் சதம் அடித்தார்.
42–வது ஒருநாள் போட்டியில் விளையாடும் ஆரோன் பிஞ்சுக்கு இது 6–வது சதமாகும். அதிரடியாக விளையாடி வந்த அவர் 135 ரன்னில் ‘ரன்அவுட்’ ஆனார். 128 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.
அதை தொடர்ந்து கேப்டன் பெய்லியும் வெளியேறினார். அவர் 69 பந்தில் 55 ரன் (3 பவுண்டரி) எடுத்தார். அப்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்னாக (38.1 ஓவர்) இருந்தது. மிச்செல் மார்ஷ் 23 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
மறுமுனையில் இருந்த மேக்ஸ்வெல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 40 பந்தில் 11 பவுண்டரியுடன் 66 ரன் எடுத்தார். 46.1–வது ஓவரில் ஆஸ்திரேலியா 300 ரன்னை தொட்டது. இதேபோல ஹாடினும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 14 பந்தில் 31 ரன் எடுத்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 342 ரன் குவித்தது. ஸ்டீவன் பின் கடைசி 3 பந்தில் 3 விக்கெட் கைப்பற்றி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். அவர் 5 விக்கெட் கைப்பற்றினார்.
343 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் மொயீன் அலி 10 ரன்னில் ஸ்டார்க் பந்தில் வெளியேறினார்.
அடுத்து வந்த பேலன்ஸ் 10, ரூட் 5, கேப்டன் மார்கன் 0 ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். தொடக்க வீரர் பெல் 36 ரன்னில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி 18 ஓவர் முடிவில் 73 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அடுத்து டெய்லருன் பட்லர் ஜோடி சேர்ந்தார். பட்லர் 10 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின், பந்து வீச்சாளர் வோக்ஸ் டெய்லருடன் ஜோடி சேர்ந்தார்.
ஒருபுறம் வேகமாக விக்கெட் வீழ்வதை உணர்ந்த டெய்லர் அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் டெய்லருக்கு துணையாக விளையாடிய வோக்ஸ் 37 ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
இதற்கிடையே டெய்லர் 98 ரன்களை எட்டினார். ஆனால் மறுமுனையில் விளையாடிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் டெய்லர் மெல்போர்ன் மைதானத்தில் சதம் அடிக்க வழியில்லாமல் போனது.
அத்துடன் இங்கிலாந்தும் 41.5 ஓவரில் 231 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 111 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் மார்ஷ் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். சதம் அடித்த பிஞ்ச் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.