நியூசிலாந்தின் நெல்சன் நகரில் நடந்த மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்து அணி, டாஸ் வென்றதோடு, முதலில் பந்துவீச்சை தைரியமாக தேர்வு செய்தது.

இதைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவு அணி இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அதிரடி மன்னன் கெயில்- ஸ்மித் களம் இறங்கினர். அந்த அணிக்கு முதல் விக்கெட் 30 ரன்னுக்கு விழுந்தது.

ஸ்மித் 18 ரன்னில் வெளியேற, பின்னர் வந்த ஃபிராவோ டக் அவுட் ஆனார். பின்னர் சாமுவேல்ஸ் களம் புகுந்தார். இவர் கெயிலுடன் இணைந்து விளையாடினார். கெயில் 65 பந்தில் 36 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். இவர் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.

இதையடுத்து, களம் கண்டார் ராம்டின். மறுமுனையில் விளையாடி வந்த சாமுவேல்ஸ் 21 ரன் எடுத்த திருப்தியோடு பெவிலியன் திரும்பினார்.

இவரைத் தொடர்ந்து ராம்டின் 1 ரன்னில் வெளியேற, பின்னர் சிம்மோன்ஸ்- சமி ஜோடி அசத்தியது. இந்த ஜோடி அயர்லாந்து வீரர்களின் பந்து வீச்சை நாலாபக்கமும் சிதறடித்தது.

சிம்மோன்ஸ் அபாரமாக விளையாடி தனது 3வது சதத்தை நிறைவு செய்தார். மறுமுனையில் கலக்கிய சமி, அரை சதம் விளாசினார்.

67 பந்தில் 89 ரன் குவித்திருந்த சமி, மோனி பந்தில் ஆட்டம் இழந்தார். இவர் 9 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசி தள்ளினார். 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 154 ரன்கள் குவித்தது.

இதையடுத்து ரசூல் களம் இறங்கினார். மறுமுனையில் அதிரடி காட்டி வந்த சிம்மோன்ஸ் 84 பந்தில் 102 ரன் குவித்திருந்தபோது சொரின்சின் பந்தில் ஆட்டம் இழந்தார். இவர் 9 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசினார்.

இதைத் தொடர்ந்து ரசூல் 27 ரன்னில் வெளியேற, ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 304 ரன்கள் குவித்தது.

அயர்லாந்து தரப்பில் டோக்ரில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 West 20Indies(2)

பின்னர் 305 ரன்கள் என்ற இமாலய ஸ்கோருடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது. அந்த அணி 71 ரன்னுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. தொடக்க வீரர் போர்டர்பீல்டு 23 ரன்னில் வெளியேறினார்.

பின்னர் பந்த ஜாய்ஸ், ஸ்டெர்லிங்குடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மேற்கிந்திய தீவு அணியின் பவுலர்களை துவம்சம் செய்தது. பவுண்டரி, சிக்சர்களை விளாசிய இந்த ஜோடியை சாமுவேல்ஸ் பிரித்தார்.

84 பந்தில் 92 ரன் குவித்திருந்த ஸ்டெர்லின், சாமுவேல்ஸ் பந்தில் ராம்டின்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவர் 9 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசினார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 106 குவித்தது.

பின்னர், பிரெய்ன் களம் கண்டார். இவர் ஜாய்சுடன் ஜோடி சேர்ந்த விளாசித் தள்ளினார். மறுமுனையில் 67 பந்தில் 84 ரன் எடுத்திருந்த ஜாய்ஸ், டெய்லர் பந்தில் ஆட்டம் இழந்தார். இவர் 10 பவுண்டரி, 2 சிக்சர்களை அடித்து விளாசினார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்தது.

 Ireland-20team

ஜாய்ஸ் ஆட்டம் இழந்தபோது அணி வெற்றி பெற 31 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது. ஆனால், பின்னர் வந்த வீரர்கள் 3 பேர் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர்.

ஆனால், பிரெய்ன் நங்கூரம் போல் நின்று அணியினை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அந்த அணி 45.5 ஓவரில் 307 ரன்கள் எடுத்து மேற்கிந்திய தீவு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 92 ரன் குவித்த ஸ்டெர்லிங் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

கத்துக்குட்டி அணியான அயர்லாந்திடம் மேற்கிந்திய தீவு அணி வீழ்ந்தது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதே நேரத்தில் அயர்லாந்து நாட்டு ரசிகர்கள் ஆடி, பாடி அசத்தினர்.

Ireland 20fans
மேற்கிந்திய தீவு அணி இப்படி கத்துக்குட்டி அணியிடம் தோற்பது ஒன்றும் புதுசல்ல. ஏற்கனவே 1996ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புனேவில் நடந்த கென்யாவுக்கு (166) எதிரான ஆட்டத்தில் 93 ரன்னில் மேற்கிந்திய தீவு அணி சுருண்டது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply