விருதுநகர்: கணவரால் கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட பெண், காவல்நிலையத்துக்கு உயிருடன் திரும்பி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மேற்கு ரதவீதி அண்ணாமலை தெருவை சேர்ந்தவர் ரங்கராஜன் (34).பிளக்ஸ் போர்டு கட்டும் தொழிலாளி. இவர் நிலக்கோட்டையைச் சேர்ந்த கோமதியை (23) காதலித்து, கடந்த 2011 மார்ச்சில் திருமணம் செய்து கொண்டார்.

கோமதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் ரங்கராஜன் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் கடந்த 2011ம் ஆண்டு கோமதி திடீரென மாயமானார். இது தொடர்பாக பஜார் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்நிலையில், பிப்.1ம் தேதி ரங்கராஜனின் வீட்டில் இருந்து ஒரு பெண்ணின் உடலை விருதுநகர் பஜார் போலீசார் கைப்பற்றினர். இதுபற்றி ரங்கராஜனிடம் விசாரித்தனர்.

அப்போது அவர், ‘‘மனைவி கோமதி, மூன்றரை ஆண்டுகளுக்கு பின் வீட்டுக்கு வந்தார். அவருடன் ஏற்பட்ட தகராறில் கோமதியை கொலை செய்து,உடலை வீட்டில் மறைத்து வைத்திருந்தேன்‘‘ என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அவரையும், அவருக்கு உதவியாக இருந்த நண்பர் ஆறுமுகம் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் திடீர் திருப்பமாக, கணவரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட கோமதி நேற்று பஜார் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்.

கோமதியை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவரை சூலக்கரை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அவர் கோமதி என்பது உறுதியானது. இதையடுத்து கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதை அறிய, விருதுநகர் பகுதியில் காணாமல் போன பெண்களின் விவரங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த கணேசன் மனைவி செல்வி (45) கடந்த 28ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை என 29ம் தேதி ரூரல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக செல்வியின் மகளை அழைத்து வந்த போலீசார், ரங்கராஜனின் வீட்டில் இருந்த உடலில் இருந்து மீட்கப்பட்ட கம்மல், தாலி ஆகியவற்றை காட்டி விசாரித்தனர். இதில் கொலை செய்யப்பட்டது செல்வி என்பது உறுதியானது.

செல்வியை, ரங்கராஜன் எதற்காக கொலை செய்தார் என்பது குறித்தும், தனது மனைவியை கொலை செய்ததாக ஏன் பொய் கூறினார் என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

ரங்கராஜனின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் விஏஓ கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்தோம். கோமதி உயிருடன் வந்துள்ளார்.

செல்வி கொலை செய்யப்பட்டது குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணையை தொடங்கியுள்ளோம் என போலீசார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply