ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடு எது என்று மொட்டை யாக யாராவது கேள்வி கேட்டால் தலையில் கையை வைத்து கொஞ்சம் நேரம் யோசி க்க வேண்டி வரும்.
உலக வரை படத்தை எடுத்து நீள அகலங்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு கையை உயர்த்தி, ரஷ்யா என்று பதில் சொன்னால் அந்த பதில் கூட முழுமை இல்லாமல்தான் இருக்கும்.
உண்மையில் ரஷ்யாவின் முழு நிலப்பகுதியும் ஐரோப்பாவில் இல்லை. அதன் பாதி நிலம் ஆசியாவில் நீட்டி நிற்கிறது. ரஷ்யாவுக்கு இந்த கௌரவத்தை முழு மையாகக் கொடுத்துவிட முடியாது.
எனவே ஐரோப்பாவிற்குள் தனது முழு நிலத்தையும் கொண்ட ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடாக உக்ரைனை குறிப்பிடலாம்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் 603,628 கிலோமீற்றர் பெரிதானது. உலக வரைபடத்தை பார்த்தால் கருங்கடலுக்கு மேலால் ரஷ்யா வோடு ஒட்டிக்கொண்டதுபோல் இருக்கும் நிலப்பகுதிதான் உக் ரைன்.
கிழக்கு மற்றும் வடக்கு எல்லைகள் முழுவதும் உக்ரைனுக்கு அயல் நாடாக ரஷ்யா இருக்கிறது. வட மேற்கில் பெலாரஸ், மேற்கில் போலாந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரி, தென்மேற்கில் ருமேனியா, மோல்டோவா உக்ரைனுக்கு எல்லைகளாக இருக்கின்றன. மற்றபடி தெற்கு மற்றும் தென் கிழக்கு பக்கம் பார்த்தால் கருங்கடலும், அசோவ் கடலும் காணப்படுகின்றன.
உக்ரைனின் அரசியல் கதைக்கு அதன் பூகோளக் கதை முக்கிய மானதாக இருக்கிறது. ஏனென்றால் உக்ரைன் நாட்டுக்கு நடுவால் கோடு கிழித்தால் அதன் கிழக்கு பக்கம் ரஷ்யா ஆதரவுடையது மேற்குப் பக்கம் மேற்குலக ஆதரவுடையது.
இதுதான் இப்போதிருக்கும் உக்ரைன் பிரச்சினைகளுக்கெல்லாம் அடிப்படையாகும். அதாவது சர்வதேச சக்திகள் கயிறிழுத்துக் கொள்ளும் ஆடுகள மாக உக்ரைன் மாறியிருக்கிறது என்பதுதான் இதன் உண்மையான கதையாகும்.
உக்ரைன் என்பது முன்னாள் சோவியத் ஒன்றிய நாடு. அந்த பழைய சொந்தத்தில் இன்று உற வாடப்பார்க்கிறது ரஷ்யா.
சோவியத் ஒன்றியம் வீழ்ந்து 1991 இல் பனிப்போரும் முடிந்த பின் மேற்குலகம் அதாவது மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் பழைய சோவியத் ஒன்றிய நாடுகளை தமது பக்கம் விழுங்கிக் கொள்ளும் வேலையை பார்த்து வருகிறது. இப்படி உக்ரைன் பக்கம் மோப்பமிட்டதால் ரஷ்யா வுக்கு மூக்கு வேர்த்தது.
உக்ரைனில் இப்போது தொடரும் பிரச்சினையின் ஆரம்பம் சோவியட் ஒன்றியம் வீழ்ந்ததோடு தொடங்கியது என்று மொட்டையாகச் சொன்னாலும் இந்த பிரச்சினை உக்கிரம் அடைந்தது 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலாகும்.
அந்த மாதத்தில்தான் உக்ரைன் ஜனாதிபதியாக இருந்த விக்டோர் யனுகோவிச் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சாதகமான ஒப்பந்தம் ஒன்றை ரஷ்யாவின் சொல்வார்த்தையைக் கேட்டு கைவிட்டது.
நீண்ட காலமாக உதைத்து விளையாட பந்து இல்லாமல் காத்திருந்த மேற்குலகுக்கும் ரஷ்யாவுக்கும் உக்ரைன் கால் பந்தாக மாறியது.
இந்த தருணத்தில்தான் உக்ரைன் எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் ரஷ்யாவையும் மேற்கு ஐரோப்பாவையும் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு சிறிய நாடு என்பது புரிந்தது. உக்ரைனின் எரிவாயுத் தேவையை ரஷ்யா முழுமையாக புர்த்திசெய்து வருகிறது.
ரஷ்யாவை பொறுத்தவரை உக்ரைன் என்பது தமது பாதுகாப்பு, பொருளாதார சந்தை வாய்ப்பு, கௌரவம் என்று அனை த்து பக்கமும் இலகுவாக விட்டுக் கொடுக்க முடியாத நிலப்பகுதி.
மேற்கு ஐரோப்பாவை பொறுத்த வரை உக்ரைனை தமது பக்கம் இழுத்துக் கொள்வது என்பது ரஷ்யாவை கொஞ்சம் குட்டிக் குனிய வைக்க முடியும் என்று அர்த்தப்படும்.
அத்தோடு உக்ரைன் தன் பக்கம் சாய்ந்தால் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதி யிலும் சாதகமாக இருக் கும் என்று பார்க்கிறது.
எனவே, விக்டோர்யனு கோவிச் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தை குப்பையில் போட்டதும் கதை முடிந்துவிடவில்லை.
கதை ஆரம்பமானதே அந்தப் புள்ளியில்தான். தலைநகர் கீவில் ரஷ்யா மற்றும் யனுகோவிச் அரசு க்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
ஆரம்பத் தில் சுமார் 100,000 பேர் வீதிகளில் இறங்கி ஆர்ப் பாட்டம் நடத்தினார்கள். 2013 டிசம்பர் ஆகும்போது ஆர்ப்பாட்டம் இன்னும் தீவிரமடைந்தது.
சுமார் 800,000 பேர் வீதிகளில் இறங்கவே யனுகோவிச் அரசினால் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
சுமார் 45.4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட உக்ரைனில் 77.8 வீதத்தினர் உக்ரைனியர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சோவிட் ஒன்றியம் வீழ்ந்தது தொடக்கம் மேற்குலகம் பக்கம் சேர்வதற்கு சாதகமான கருத்தை கொண்டிருக்கிறார்கள்.
நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் ரஷ்யர்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். அது 17 வீதமாகும். கிழக்கு உக்ரைனிலேயே இவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.
எனவே ரஷ்ய எதிர்ப்பை கிளறி விடுவதற்கு பெரிய பிரயத் தனை ஒன்று செய்யத் தேவையில்லை. 2013 கல வரம் வெடிப்பதற்கு இந்த சூழல் போதுமான காரணி யாக இருந்தது.
கலவரம் மோசமடைந்தாலும் யனுகோவிச் அரசு விட்டுக் கொடுப்பதாக தெரியவில்லை. 2014 ஜனவரி நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் ஆர்ப் பாட்டங்களை கட்டுப்படுத் துவதற்கு புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மேற்கு உக்ரைன் எங்கும் ஆர்ப்பாட்டம் பரவி யது.
2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதி நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. கீவ் நகரில் 48 மணிநேரத்திற்குள் குறைந்தது 88 பேர் கொல்லப்பட்டார்கள், ஆர்ப் பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாரு க்கும் இடையில் ஏற்பட்ட மோதல் களில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
Viktor-Yanukovych
இனி சரிப்பட்டுவராது என்று தெரிந்த யனுகோவிச் ரஷ்யாவுக்கு தப்பியோடினார். ஆர்ப்பாட்டக்காரர் கள் அரச கட்டடங்களை ஆக்கிர மித்தார்கள்.
பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி ஜனாதிபதி யனுகொவிச் அதிகாரத்தில் இருந்தே அகற்ற ப்பட்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்கு சம்பந்தம் என குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் பிரிவே முற்றாக கலைக்கப்பட்டு விட்டது.
இத்தோடு நிற்கவில்லை, மேலும் உசுப்பேற்றும் வேலையை செய்த உக்ரைன் பாராளுமன்றம் இரண்டாவது உத்தியோகபூர்வ மொழி அந்தஸ்தில் இருந்து ரஷ்ய மொழிக்கு தடை விதித்தது.
அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரஷ்யாவுக்கு கோபம் தலைக்கேறியது அப்போது தான். அதேபோல உக்ரைனின் ரஷ்ய மொழி பேசும் பிராந்தியங களும் கிளர்ந்தெழ ஆரம்பித்தன.
ரஷ்யா தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்தது. உக்ரைனின் கிரிமியன் பிராந்தியத்தில் நல்ல நேரம் பார்த்து பிரச்சினை ஆரம்ப மானது. கருங்கடல் மற்றும் அசோவ் கடலால் சூழ்ந்த இந்த கிரிமியன் பிராந்தியம் ஒரு தீபகற்பமாகும்.
அதன் தெற்காக உக்ரைனும் வடக்காக ரஷ்யாவும் இருக்கிறது. 2014 பெப்ரவரி 27-28ஆம் திகதிகளில் ரஷ்ய ஆதரவு ஆயுததாரிகள் கிரிமியன் தலை நகரான சின்பெரோபோலில் இருக்கும் அரச கட்டடங்களை ஆக்கிர மித்தனர்.
கிரியனில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் ரஷ்ய இனத்தினர். ரஷ்யாவுக்கு இந்த நிலத்தில் 200 வருட கடந்த கால வரலாறு கூட இருக்கிறது.
ஆயுததாரிகள் தலைநகரை கைப்பற்றிய ஒரு சில தினங்களுக் குள்ளேயே பிராந்தியத்தை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு கிரிமியன் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது அதற்கான சர்வஜன வாக்கெடுப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
கிரிமியன் ஆயுததாரிகளுக்கு உதவியதை ரஷ்யா பின்னர் ஒப்புக் கொண்டது. எப்படியோ ரஷ்யா கிரிமியனை கைப்பற்றியது.
அடுத்த கட்டமாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உக்ரைன் விவகாரத்தில் அம்பலத்திற்கு வந்தது. அதாவது கிரிமி யனை ரஷ்யா கைபற்றியதை கண்டித்து வழமைபோல் ஒருபக்க அறிக்கை வெளியிட்ட இந்த உத்தமர்கள் ரஷ்யா மீது முதல் கட்டமாக பொருளாதார தடை களை விதித்தது.
அதிலே உக்ரைன் விவகாரத்தில் பங்கேற்ற ரஷ்ய உயர்மட்ட இராணுவ அதிகாரிகளே இலக்கு வைக்கப்பட்டார்கள்.
கிரிமியன்னாருந்து பிரச்சினை அப்படியே கிழக்கு உக்ரைன் பக்கம் பரவியது. வாயில் நுழையாத பெயர்கள், அதாவது டொனட்ஸ்க், லுஹன்ஸ்க் மற்றும் கர்கிவ் ஆகிய கிழக்கு உக்ரைன் பிராந்தி யங்கிலிலேயே பிரச்சினை வெடித்தது.
கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி இந்த பிராந்தியங்களின் அரச கட்டடங்களை ஆர்ப்பாட்ட க்காரர்கள் முற்றுகை இட்டனர். இதே காலத்தில் உக் ரைனின் கிழக்கு எல்லையில் ரஷ்யா தனது துருப்புகளையும் குவித்து வைத்திருந்தது. கர்கிவ் பகுதி அரச படை யினால் மீட்கப்பட்டது.
ஆனால் டொனட்ஸ்க், லுஹன்ஸ்க் பிராந்தியங்களில் ஆக்கிரமிப்பு தீவிரம் கண்டது. ரஷ்யா ஆதரவான கிளர்ச்சித் தலைவர்கள் பிராந்தியத்தில் உச்ச சுயாட்சிக்காக சுயமாக சர்வஜன வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத் தார்கள்.
அதேபோல மே 11 இல் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தபபட்டு இந்த இரு பிராந்தியங்களும் தனி நாடாகவும் பிரகடனம் செய்யப்பட்டன.
இந்த பதற்றங்களுக்கு இடையிலதான் உக்கிரைனில் கடந்த மே 25 இல் ஜனாதிபதி தேர்தலும் நடநதது. எதிர்பார்த்ததுபோல மேற்குல ஆதரவான தொழிலதிபர் கோடீஸ்வரர் பெட்ரோ பொரோஷென்கோ (Petro Poroshenko) புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொரோஷென்கோ ஜனாதிபதியான விரைவில் அமைதி முயற்சி, தீவிர யுத்தம் என்று கொஞ்சம் விளை யாடிப்பார்த்தார்.
வழியில்போகும் வம்பில் மாட்டிக் கொள்வது என்று சொல்வார்களே அதற்கு பொருத்தமான உதாரண மாக மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை சொல்லலாம்.
ஏற்கனவே ஒரு மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போய் ஒரு துப்புக் கிடைக்காத நிலையில் கடந்த 2014 யூலை 17 ஆம் திகதி எம்.எச்-17 என்ற மற்றொரு மலேசிய விமானம் உக்ரைன் வான் பரப்பில் பறந்தது.
உக்ரைன்-ரஷ்ய எல்லையில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதியில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த 298 பெரும் கொல்லப்பட்டார்கள்.
இன்றுவரை இருக்கும் பெரிய கேள்வி, சுட்டது யார்? என்பது தான், ரஷ்யாவை கேட்டால், உக்ரைன் அரச படை சுட்டதாக படம்போட்டு விளக்கம் சொல்கிறது.
அமெரிக்காவும், உக்ரை னும், ரஷ்யா கொடுத்த விமான எதிர்ப்பு ஆயுதத்தைக் கொண்டு கிளர்ச்சியாளர்களே சுட்டதாக பதிலுக்கு ஆதாரங்களோடு குற்றம் சாட்டுகின்றன. இடையில் மாட்டிக் கொண்ட மலே’pயா இன்னும் அதிச்சியில் இருந்து மீண்டதாக தெரியவில்லை.
உண்மையில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவும் மேற்குலகமும் வித்தியாசமான முறையில் சண்டை போட்டுக் கொண்டிருககின்றன. அதாவது கிளர்ச்சியாளர்களுக்கு தெரியத் தெரிய பெரிய பெரிய ஆயுதங்களை வழங்கும் ரஷ்யா அதனை வாய் கூசாமல் மறுத்து வருகிறது.
பதிலு க்கு உக்ரைன் அரசுக்கு திரைக்குப் பின்னால் இருந்து ஆதரவளிக்கும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து அடிக்கடி ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.
ரஷ்யா ஆதரவளிக்காவிட்டால் உக்ரைன் படைகளிடம் கிளர்ச்சியாளர்களுக்கு ஒருசில நாட்களுக்குத் தான் தாக்குப்பிடிக்க முடியும் என்பது வெளிப்படையானது.
அதேபோல் மேற்குலக ஆதரவு இல்லாவிட்டால் உக்ரைனினால் ரஷ்யாவுக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது என்பது தெளிவானது.
ஒரு சந்தர்ப்பத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக உக்ரைன் படை நல்ல முன்னேற்றம் கண்டது. ஆனால் கடந்த ஓகஸ்ட் 27 ஆம் திகதி ரஷ்யாவின் கனரக ஆயுதங்கள் எல்லை தாண்டி கிளர்ச்சியாளர் பகுதிக்கு சென்றது. அதற்கு பின்னர் பிரிவினைவாதிகள் முன்னேற ஆரம்பித்தார்;கள்.
எப்படியோ சண்டை போட்டதற்கு கொஞ்சம் ஓய்வும் தேவை என்பது போல செப்டெம்பர் 5 ஆம் திகதி இரு தரப்புக்கும் இடையில் யுத்த நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டது. ஆனால் யுத்த நிறுத்தத்திற்கு நான்கு நாட்கள்தான் ஆயுள் இருந்தது. அதற்குள் மீறப்பட்டது.
இந்த சூழலில் ஒக்டோபர் 26 ஆம் திகதி நடந்த உக்ரைன் பாராளுமன்ற தேர்தலிலும் மேற்குலக ஆதரவு கட்சிகள்தான் வெற்றி பெற்றன.
இதற்கு பதிலடியாக கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் தனியாக தேர்தல் நடத்தப்பட்டு சொந்தமாக வெற்றிகளை அறிவித்தார்கள். ஆனால் வழமை போல மோதல் களும் தொடர்ந்தன.
2015 ஜனவரி கடைசியா கும்போது மோதல்கள் தீவிரம் கண்டன. குடியிருப்பு பகுதிகளிலும் கண் மண் தெரியாமல் தாக்குதல்கள் இடம்பெற்றன. பொதுமக்களின் பலி எண் ணிக்கையும் ரொக்கெட் வேகத்தில் அதிகரித்தது.
இப்படி மோதல் மும்முரமாக இருந்த நிலையில் பெப்ரவரி 11 அதாவது கடந்த புதன்கிழமை பெலாரஸில் கூடிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைன் ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ மற்றும் ஜெர்மன் அரச தலைவர் ஏன்ஜலா மேர்கல், பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலன்டே ஆகியோர் 17 மணி நேரம் விடிய விடியப் பேசி யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு உடன்பட்டார்கள்.
இந்த யுத்த நிறுத்தம் பெப்ரவரி 15 ஆம் திகதி, அதாவது இன்று ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் அமுலுக்கு வருகிறது.
யுத்தத்தினால் இதுவரையில் 5,486 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 12,972 பேர் காயமடைந் திருக்கிறார்கள். இதில் மலேசிய விமானம் சுடப்பட்டு கொல்லப்பட்ட 298 பேரும் உக்ரைன் யுத்த கணக் கில் தான் சேர்கிறது.
கடந்த ஜனவரி 31ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 5 ஆம் திகதி வரையான காலத்தில் பொதுமக்கள் பகுதிக ளில் இடம்பெற்ற தாக்குதல்களில் 263 சிவிலியன்கள் கொல்லப்பட்டு ள்ளனர்.
5.2 மில்லியன் பேர்வரை சண்டை நடக்கும் பகுதியில் வாழ்கின்றனர். 119,832 சிறுவர்கள் உட்பட 978,482 பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். 600,000 பேர்கள் அயல் நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள். அதில் 400,000க்கும் அதிகமான வர்கள் ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள்.
இந்த புள்ளிவிபரக் கணக்கெல்லாம் ரஷ்யாவுக்கும் அமெரிக்கா வுக்கும் எங்கே புரியப் போகிறது. அவர்களுக்கு அவர்களது கௌர வம் தான் பெரிதாக தெரிகிறது.
எஸ். பிர்தௌஸ்…