இப்போது தங்காலையில் உள்ள அவரது கார்ள்ட்டன்  (Carlton residence in Tangalle)  இல்லத்துக்கு   தினசரி வருகைதரும் ஆயிரக் கணக்கான மக்களுடன் அவர் பேசுகிறார். தினசரி பேரூந்துகளை நிறைத்துக் கொண்டு அவரைக் காண மக்கள் வருகை தருகிறார்கள்.

ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கை மீண்டும் இணைத்த ஒரு தலைவர் அவர். நிச்சயமாக போரை வெற்றி கொண்டதுக்கான பெருமையை கோருவதற்கான ஒரு தலைவர் அவர்தான்.

ஆனால் 2015 ஜனாதிபதி தோதலில் அவர் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஒன்பது மணித்தியாலங்களுக்குள் மக்கள் மகிந்தவை ஒரு சாதாரண பிரஜையின் நிலைக்கு கொண்டுவந்து விட்டார்கள்.

ஸ்ரீலங்காவின் ஐந்தாவது ஜனாதிபதி பதவியிலிருந்து, பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே அவர் ஓய்வு பெறவேண்டியவரானார். இதுதான் அரசியல் இயல்பு. வழக்கம் போல தோல்வி எங்களுக்கு பல முக்கிய பாடங்களைப் போதிக்கிறது.

கடந்த ஒன்பது வருடங்களாக ஸ்ரீலங்காவின் பிரபலமாக அவர் திகழ்ந்துள்ளார். அலரி மாளிகையில் வசித்தபடி தன்னைச் சுற்றி மக்கள், அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் புடைசூழ உலகை வலம் வந்து கொண்டிருந்தார்.

தோல்வியடைந்து ஒரு மாதத்தின் பின்னர், அவர் தனது ஓய்வை எப்படிக் கழிக்கிறார் என்பதைக் காண்பதற்காக தங்காலையில் இருந்த அவரிடம் விஜயம் செய்தோம்.

வரவு செலவு திட்ட விவாதத்தின்போது தன்னை ஒரு சாதாரண கிராமவாசி என்று கூறிய அவருக்கு மக்களிடம் இருந்து கிடைக்கும் மரியாதைக்கு ஆதாரம் தேவையானால் நிச்சயமாக ஒருவர் வார இறுதி நாட்களில் தங்காலைக்கு வருகை தரவேண்டும்.

முன்னர் மக்கள் கதிர்காமக் கடவுளை தரிசிப்பதற்காக வடக்கிலிருந்து தெற்குக்குச் செல்வார்கள், ஆனால் இப்போது முன்னாள் ஸ்ரீலங்காத் தலைவரின் கடாட்சத்தை பெறுவதற்காக, அவர்கள் தங்கள் பயணத்தை தங்காலையில் உள்ள காள்ட்டன் பங்களாவுக்கு முன்னால் நிறுத்துகிறார்கள்.

Mahinda-Election-2015

கொழும்பிலிருந்து காள்ட்டனுக்கு திரும்பிவந்த முதல்நாள், மக்கள் அழுதுகொண்டு அவரது வீட்டுக்கு முன்னால் குவிந்தார்கள் அதனால் அவர் தனது வீட்டின் ஒரு யன்னலின் அடித்தட்டின் மேல் ஏறி நின்று அவர்களுடன் பேசவேண்டியதாயிற்று.

இன்றும் கூட வார இறுதி நாட்களில் சுமார் 50 பேரூந்துகள் நிறைந்த மக்கள் அவரைக் காண்பதற்காக தங்காலைக்கு வருகிறார்கள்.

நாட்டின் நான்கு மூலைகளிலும் இருந்து வருகை தருபவர்களுக்காக இப்போது அந்த வீட்டின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப் படுகிறது.

“நீங்கள் எங்கள் உயிரைக் காப்பாற்றினீர்கள் இல்லையென்றால் நாங்கள் உயிர் பிழைத்திருக்க மாட்டோம்” காள்ட்டனுக்கு வருகை தந்த வயதானவர்கள் சொல்கிறார்கள், அதேவேளை மற்றொருவர் “உங்கள் எதிரிகளைப்பற்றி  நாங்கள் உங்களுக்கு எச்சரிக்கை செய்தோம், ஆனால் நீங்கள் அவாகளைப் புரிந்து கொள்ளவில்லை” என்கிறார்.

மகிந்த மனமுடைந்து போயிருக்கலாம், ஆனால் காள்ட்டன் பங்களாவில் ஒரு சாய்மானக் கதிரையில் சாய்ந்தவாறே மக்களை வரவேற்பது, நேரத்துக்கு நேரம் அவரை வணங்கும் வயதான பெண்களின் தலையை தடவுவது மற்றும் குழந்தைகளை முத்தமிடுவது போன்ற செயல்களை அவர் செய்வதைக் காணமுடிகிறது.

“இப்போது உங்களுடன் பேசுவதற்கு எனக்கு நேரமுள்ளது. முன்னர் எனக்கு நேரமிருக்கவில்லை. இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. சுதந்திரமாக இருப்பது அற்புதமாக உள்ளது. எந்த நேரத்திலும் வாருங்கள் என்னுடன் பேசலாம்” என்று அவர் மக்களிடம் சொல்கிறார்.

“ஜனாதிபதி மகிந்தவை எப்போதும் மக்கள் சூழ்ந்து கொண்டே இருக்கிறார்கள், இப்போதும் அது அப்படித்தான் உள்ளது. அவர் தனிமையில் இருப்பதை விரும்புவதில்லை. அவர் தனது ஜீப் வண்டியில் தனது நண்பர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்கிறார்.

கடந்த காலத்தில் செய்ததைப் போல,அவர் கடலில் குளிக்கிறார், எந்த வித பாதுகாப்புமின்றி தங்காலை நகரில் நடந்து செல்கிறார்” இப்படித்தான் அவரது அயலவர்கள் அவரது ஓய்வைப் பற்றி வர்ணிக்கிறார்கள்.

தான் அரசியலில் இருந்து வெளியேறப் போவதில்லை மற்றும் எந்த நேரத்திலும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தான் தயாராக இருப்பதாகச் சொல்லி அவர் வாக்காளர்களைத் திருப்தி செய்கிறார். “இராணுவ சதி சம்பந்தமான குற்றச்சாட்டு ஒரு கட்டுக்கதை. அப்படிச் செய்ய நான் விரும்பியதில்லை.

சந்திரிகா ஜனாதிபதி பதவியை தங்கத்தட்டில் வைத்து என்னிடம் நீட்டவில்லை. பாத யாத்திரை போன்ற பிரச்சாரங்கள் மூலமாக நான் மக்களை வென்றெடுத்தேன். அவரால், வேட்பாளர் நியமனத்தை எனக்கே வழங்கும்படி ஆகிவிட்டது. எனக்காக பல கட்சிகள் ஆதரவு திரட்டினார்கள். அவர்களுக்கு அநீதி இழைக்கப் படுமானால் நான் மேடையில் தோன்றி அவர்களுக்காக வாதாடுவேன்”

மக்களின் முடிவில்லாத கேள்விகளுக்கு திறந்த மனதுடன் மகிந்த பதில் சொல்கிறார். “கடந்த காலங்களில் நான் உதவி செய்த பணக்கார வியாபாரிகள்தான் என்னைக் காண வருவார்கள். இப்போது சாதாரண மக்கள் என்னைக் காண வருகிறார்கள்.

அவர்கள் உண்மையிலேயே எனக்கு விசுவாசமானவர்கள். நான் மகிழ்ச்சியாக உள்ளேன். அரசியல் ரீதியாக என்னைப் படுகொலை செய்ய முடியாது. எனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுமானால் அவர்களின் முகத்துக்கு நேராக நான் பதில் சொல்வேன்”.

அவர் தனது வேதனைகளை மக்களின் முன்னால் விளக்கினார். “ அவர் என்னை தொலைபேசி மூலம் அழைத்தத போது நான் அவரை ஏசியதாக சந்திரிகா சொல்கிறார். அவர் பொய் சொல்கிறார். அவர் என்னுடன் பேசவேயில்லை. மூன்று தடவைகள் அவருக்கு நான் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினேன், ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாமற் போய்விட்டது”

அவர் மக்களுடன் கலந்து அவர்களுடன் சுதந்திரமாக பேசிக் கொண்டிருந்ததால், தங்காலையில் உள்ள அவரது காள்ட்டன் பங்களாவை விட்டு நாங்கள் அமைதியாக வெளியேறினோம்.

Share.
Leave A Reply