கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1987ஆம் ஆண்டு அளித்த பேட்டி மீள்பிரசுரமாகி உள்ள ப்ரண்ட்லைன் ஏட்டை விற்பனை செய்ய இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு போடப்பட்டது. ராஜிவ் காந்தியும் ஜெயவர்த்தனேவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அப்போது இந்த ஒப்பந்தம் குறித்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இந்து குழுமத்தைச் சேர்ந்த ப்ரண்ட்லைன் ஆங்கில ஏடு பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தது.
தற்போது இலங்கை பிரச்சனை தொடர்பாக சிறப்புக் கட்டுரைகளை ப்ரண்ட்லைன் ஏடு வெளியிட்டிருக்கிறது. அதில் ராஜபக்சே வீழ்ச்சி, மைத்ரிபால பொறுப்பேற்பு உள்ளிட்ட பல கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 1987ஆம் ஆண்டு பிரபாகரன் அளித்த பேட்டியும் மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பேட்டியுடனான ப்ரண்ட்லைன் ஏட்டை இலங்கையில் விற்பனை செய்ய அந்நாட்டு சுங்கத்துறை தடை விதித்தது.
இந்நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவின் பேரில் இந்த ப்ரண்ட்லைன் ஏடு விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.