தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பை தன்னிடம் தரும்படி பிரபாகரன் கேட்டார். தலைவரே முடிவினை எடுக்கவேண்டும். அதற்கு மறுபேச்சு இருக்கக்கூடாது. அப்படியானால் தான் சரியான இயக்கமாக வளரமுடியும் என்று சொன்னார் பிரபாகரன்.
பிரபாகரன் இந்த நிபந்தனையை விதித்தபோது புலிகளது செயற்குழுவில் ஏழுபேர் இருந்தனர். பிரபாகரன், கலாபதி, கடாபி, அன்ரன்,ராகவன், சாந்தன், சீலன் ஆகியோரே அந்த ஏழு பேர்.
ஒருவரிடம் தனித்தலைமை கொடுக்கப்படுவது சர்வாதிகாரப் போக்குக்கு வழிவகுக்கும் . எனவே பிரபாகரனிடம் தனிதலைமை கொடுக்கப்பட கூடாது என்று கலாபதி, கடாபி, ராகவன் ஆகியோர் எதிர்த்தனர்.
செயற்குழுவில் மூன்று பேர் பிரபாகரன் கருத்துக்கு ஆதரவாகவும், ஏனைய மூன்று பேர் எதிராகவும் நின்றனர். இந்த நிலையில் செயற்குழுவில் இருந்த சாந்தன் (இவர் கீயூபா இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டவர்) இயக்கத்தை விட்டு ஒதுங்கினார்.
கலாபதி ஒரு காதல் விவகாரத்தின் காரணமாக இயக்கத்தை விட்டு விலகினார். (யாழ் மேயர் துரையப்பா கொலை நடவடிக்கையில் பங்கு கொண்டவர் கலாபதி ) ராகவன் இயக்க அலுவல் காரணமாக இந்தியா சென்றிருந்தார்.
இந்நிலையில் கடாபி மாத்திரமே செயற்குழுவில் பிரபாகரனுக்கு எதிராக நின்றார். எனினும் பிரபாகரனிடமே தனித்தலைமை கொடுக்கப்பட்டிருந்தது.
ஒரே தலைவர். அவர் சொல்வதே கொள்கை. அவர் உத்தரவே இறுதியானது – உறுதியானது என்ற நிலை உருவானது.
செயற்குழு கூடி முடிவொடுப்பது என்ற நிலை முடிவுக்கு வந்தது. கடாபி பின்னர் படிப்படியாக இயக்கத்தை விட்டு ஒதுங்கினார்.
மாத்தையாவின் தலைமை.
பிரபாகரன் தமிழ்நாட்டில் தலைமறைவாக இருந்தபோது இங்கே இயக்கத்தை வழி நடத்தியவர்களில் மூவர் முக்கியமானவர்கள்.
மாத்தையா, சீலன், குண்டப்பா (ரகு) ஆகியோரே அந்த மூவர்.
மாத்தையாவே பிரபாகரன் நாட்டில் இல்லாத வேளைகளில் தலைமை வளங்கினார்.
மாத்தையா -சீலன் -குண்டப்பா (ரகு) ஆகியோர்களில் பொறுப்பாளராக இருக்கத்தகுந்தவர் யார் என்று இங்கே இருந்த புலிகளின் மத்தியில் ஓர் இரகசிய வாக்கெடுப்பு நடந்ததது.
அதில் மாத்தையாவே வெற்றி பெற்றார். பிரபாகரனுக்கு அடுத்த தலைவராகவும் மாத்தையாவே புலிகளால் மதிக்கப்பட்டார்.
இதேவேளையில் புலிகளிலிருந்து ஒதுங்கிய செல்லக்கிளி அம்மான் பம்பாய் சென்று கடத்தல் தொழிலில் ஈடுபட்டார்.
பம்பாயில் ஒரு ‘தாதா’ போல செல்லக்கிளி விலாசமாக இருந்தார் .
அது பிரபாவுக்கு பிடிக்கவில்லை. இயக்கத்துக்காக வியாபாரம் செய்வது தவறல்ல. இயக்கத்தை விட்டு விலகி தனிப்பட்ட இலாபத்துக்காக தவறான வழியில் செல்வது தவறு. என்பது பிரபாவின் கருத்து.
எனவே பம்பாயிலிருந்த செல்லக்கிளியுடன் பிரபாகரன் எந்தவித தொடர்பும் கொள்ளவில்லை.
இதேவேளை உமா மகேஸ்வரன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் வளரத்தொடங்கியது. “சுந்தரம் புலிப்படை” என்ற பெயரையும் உமா மகேஸ்வரன் அணியினர் பயன்படுத்தி வந்தனர்.
Umamakeswaran
முதல் மோதல்
1982 ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி. தமிழ் நாட்டில் சென்னையில் “பாண்டி பஸார்” எனும் ஒரு பகுதி இருக்கிறது.
சன நெரிச்சல் மிகுந்த பகுதி அது.
அங்குள்ள உணவு விடுதி ஒன்றுக்கு மோட்டார் சைகிள் ஒன்றில் உமா மகேஸ்வரனும் ஜோதீஸ்வரன் எனும் கண்ணணும் வந்தனர்.
அதே சமயத்தில் அங்கு பிரபாகரனும் அவரோடு சிவகுமார் என்பவரும் அங்கு தற்செயலாக வந்தனர். பிரபாகரன் உமா மகேஸ்வரனை கண்டுவிட்டார்.
தன்னால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர் கண்ணெதிரில் நிற்கிறார் என்றால் என்ன செய்யலாம் ?
உடனே தனது கைதுப்பாக்கியை எடுத்த பிரபாகரன் உமா மகேஸ்வரனை நோக்கி சுடத்தொடங்கினார். அப்போது பாண்டி பஸார் பகுதியல் நின்ற பொலிசார் இருபகுதியினரையும் உடனடியாக கைதுசெய்தனர்.
அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆா.
பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் வெளியே விடவேண்டாம். உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று பொலிசாருக்கு தெரிவித்துவிட்டார் எம்.ஜி.ஆா.
தமிழ் நாட்டில் ஈழப்போராளிகளுக்குள் நடந்த முதல் மோதல் சம்பவம் அதுதான். பத்திரிகைகளில் அந்தச் செய்தி வந்தபோது தமிழ் நாட்டினை சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் மீது பற்றுக்கொண்ட பிரமுகர்கள் கவலை தெரிவித்தனர்.
“போராளிகள் தமது ஆயதங்களை தமது நாட்டில் வைத்துவிட்டு வரவேண்டும் இங்கு வந்து தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது. அதனை தமிழக அரசு அனுமதிக்காது”. என்று விளக்கியிரந்தார் எம்.ஜி.ஆர்.
பிரபாகரன் உமாவை சுட்டபோது.., பிரபாகரனையும், சிவகுமாரனையும் தமிழக பொலிசார் கைது செய்து கொண்டு சென்றபொது எடுக்கப்பட்ட படம்)
(இந்த சம்பவம் பற்றி உமாவிடம் கேட்டபோது….
பாண்டி பசாரில் உள்ள கீதா கபேயில் டீ அருந்திவிட்டு வெளியில் வரும்போது கண்ணன் “முழியன் வாறன் ” என்று சொல்லும்போது வெடி விழுந்தது .வெடி விழுந்தது கண்ணனின் காலில் ,என்ன ஏது என்று தெரியாமல் சுற்றி நின்ற சனம் பிரபா ராகவன் இருவரையும் பொத்தி பிடித்துவிட்டது .தன்னிடம் இருந்த கை துப்பாக்கியை குப்பைக்குள் எறிந்துவிட்டு தான் மாறிவிட்டதாக சொன்னார் .
இனி சென்னையில் சில நாட்கள் இருக்க கூடாது என்று முடிவெடுத்து லண்டனில் இருந்து வந்த டொலர்கள் அடங்கிய பாக்குடன் கும்மிடிப்பூண்டி ஸ்டேசனில் அடுத்தநாள் காலை ரெயின் வருமட்டும் படுத்திருக்க தற்செயலாக வந்த போலிஸ் தட்டி எழுப்ப ஓட வெளிக்கிட்டு போலிஸ் சுட்டதில் அவ்வளவு டொலர் நோட்டுகளும் காற்றில் பறந்து என்ன நாட்டு பணம் என்று தெரியாமலே அதிகாலை அந்த சேரி சனங்கள் அதை பொறுக்கியது கண் கொள்ளா காட்சி என்று சொன்ன நினைவு . மலரும் நினைவுகள்.)
ஓற்றுமை முயற்சிகள்
இதே சமயம் கைதுசெய்யப்பட்ட ஈழப்போராளிகளை இலங்கை அரசிடம் ஒப்படைக்க கூடும் என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால் எம்.ஜி. ஆர் அதனை மறுத்தது. கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இயக்கங்களுக்குள் ஒற்றுமை ஏற்படுத்தும் முயற்சிகளில் பலா ஈடுபட்டனர்.
ஈரோஸ் அமைப்பிலிருந்து விலகியிருந்த “அருளர்” சென்னையில் ஈ.பி.ஆர் எல் எஃப் அலுவலகத்தில் தங்கியிருந்தார். இயக்கங்கள் மத்தியில் ஒற்றுமை முயற்சியில் அவரும் ஈடுபட்டிருந்தார்.
புலிகள் என்ற பெயரை உமா மகேஸ்வரன் அணியினர் பயன்படுத்தக்கூடாது என்று பிரபாகரன் கூறினார்.
அதனை உமா மகேஸ்வரன் அணியினரும் ஏற்றுக்கொண்டனர்.
புலிகள் – இராணுவ விவகாரம்
புளொட்- அரசியல் விவகாரம்
ஈ.பி.ஆா. எல. எஃப் மாணவர் விவகாரம்
ஈரோஸ் -புனரமைப்பு, புனர் வாழ்வு விவகாரம் …என்று பொறுப்புக்களை பகிர்ந்து கொள்வது. இதுதான் அருளரின் திட்டம்.
அருளரின் திட்டத்தை கேட்ட இயக்கங்களுக்க கோபம் வந்துவிட்டது.
இத்திட்டத்தை முன்வைக்கும்போது அருளர் ஈ.பி.ஆா. எல. எஃப் அலுவலகத்திலிருந்து புளொட் அமைப்பினரோடு சென்று தங்கியிருந்தார். அவரது திட்டத்தால் ஏற்பட்ட கோபத்தால் புளொட் அமைப்பினரும் அருளரோடு முரண்பட்டுக்கொண்டனர்.
ஈ.பி.ஆா. எல. எஃப் அலுவலகம் சென்ற அருளர் தாக்கப்பட்டார்.
“தனக்கடா உத்தியோகம் தன் பிடரிக்குச் சேதம்” என்ற கதையாக அருளரின் திட்டம் முடிந்தது.
லங்கா ராணி
ஆனாலும் அருளர் எழுதிய “லங்கா ராணி” என்ற நாவல் ஈழப்போராட்டத்தில் முதன்முதலில் வெளிவந்த சிறந்த இலக்கிய படைப்பாகும் என்பதை மறக்கமுடியாது.
இனக்கலவரத்தால் தெற்கிலிருந்து வடக்குநோக்கி தமிழ் அகதிகளை சுமந்து சென்ற கப்பலில் கதை நடக்கிறது.
கதையின் ஊடே ‘ஈழம் ஏன் அவசியம் -அந்த ஈழம் எவ்வாறு அமைய வேண்டும்’ என்று எழிமையான விளக்கங்கள் உரையாடல்களாக அமைந்துள்ளன.
நெல்லியடி தாக்குதல்
1981ம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி யாழ்பாணத்தில் ஆரம்பித்த அரச பயங்கரவாதம் இலங்கையெங்கும் தமிழர்களை எரித்தது.
அதன் பின்னர் சரியாக ஒருவருடத்தின் பின்னர் – 1982ம் ஆண்டு யூலைமாதம் 2ம் திகதி புலிகள் ஒரு தாக்குதல் நடவடிக்கைக்கு தயாரானார்கள்.
யாழ்பாணத்திலிருந்து 16 மைல் தூரத்தில் இருக்கிறது நெல்லியடி. அங்கு ரோந்து ஈடுபடும் பொலிசார் மீது குறிவைத்தனர்.
திடீர் தாக்குதல். புலிகளது துப்பாக்கிகள் வேட்டுக்களைப் பொழிந்தன. நான்கு பொலிசார் கொல்லப்பட்டனர். மூன்று பொலிஸார் படுகாயமடைந்தனர்.
பொலிஸ் கொனஸ்டபிள் குணபால, பொலிஸ் கொனஸ்டபிள் மல்லவராட்சி, பொலிஸ் கொனஸ்டபிள் அருந்தவராஜா, ஜீப் சாரதி அரியரட்ண ஆகியோரே கொல்லப்பட்டவர்கள்.
ஆயதங்களை கைப்பற்றிக்கொண்டு புலிகள் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.
அந்த தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியவர் சங்கர் என்றழைக்கப்படும் எஸ். சத்தியநாதன்.
பிரபாகரனின் அணுகுமுறை
தனித் தலைமை என்றபோதிலும் கொரில்லா இயக்கத்துக்குரிய விதிகளை பிரபாகரன் நுட்பமாகக் கையாண்டார்.
எதிரி எங்கே பலவீனமாக இருக்கிறானோ அங்கே தாக்கு.
தாக்குவதற்கு கிடைக்கும் எந்தவொரு வாய்பையும் தவறவிடக்கூடாது.
அதற்கான திட்டங்களை வகுத்து நிலைமைக்கு ஏற்ப செயற்படும் சுதந்திரம்
கொரிலா அணிதலைவர்களுக்கு இருந்தால்தான் கொரிலாக்கள் போர்க்குணத்தோடு செயற்படமுடியும்.
எல்லாவற்றையும் தலைமையிடம் இருந்தே எதிர்பார்க்கதொடங்கினால் நடவடிக்கைகளின் வேகம் தடைப்படும்.
சிறந்த பொறுப்பாளர்களை நியமித்து முன்முயற்சி எடுத்து செயற்படும் சதந்திரத்தை கொடுக்கவேண்டும்.
அதே சமயம் தலைமையின் உத்தரவுக்கு உடனடியாக கட்டுப்படும் வகையிலும் இருக்கவேண்டும்.
இதுதான் பிரபாகரன் தலைமையின் கீழ் புலிகள் நடத்திய தாக்குதல் வெற்றிகரமாக அமைந்தமைக்கு காரணம். சாதனைகளின் அறுவடைக்கும் அதுதான் காரணம்.
1977 இல் பதவிக்கு வந்த ஜே.ஆர் 1982ல் ஜனாதிபதித் தோ்தலை சந்திக்க தயாரானார்.
ஜனாதிபதித் தோ்தல்
ஜே.ஆா அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி தமிழர்களுக்கு பயங்கரவாதத்தையும், இனக்கலவரத்தையும் பரிசாக வழங்கியிருந்தது.
ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டார் ஜே.ஆர்.
யாழ்பாணத்திற்கு தேர்தல் பிரசாரத்துக்காக வரப்போவதாக திகதியும் குறித்தார்.
ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கப்போவதாக அறிவித்தது தமிழர் விடுதலைக் கூட்டணி. அதன் மூலம் ஜே.ஆர் அரசின் செல்லப்பிள்ளைகளாக கூட்டணி மாறிவிட்டது என்ற கருத்தை உடைத்துவிடலாம் என்பதுதான் கூட்டணியின் திட்டம்.
தேர்தலை பகிஷ்கரிக்கப்போவதாக அறிக்கை விட்டபோதும் எதிர்ப் பிசரச்சார நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்தது கூட்டணி.
ஜே.ஆாின் நட்பை இழக்கவும் விரும்பவில்லை. தமிழர்களினதும், இளைஞர்களினதும் கோபத்தையும் சம்பாதிக்கவும் விரும்பவில்லை என்பதுதான் கூட்டணியின் நிலையாக அமைந்தது.
ஜே.ஆரை எதிர்ப்பது போல ஒரு முகம்
ஜே.ஆரின் திருவடிக்கு விசுவாசமாக காவடி தூக்குவது இன்னொரு முகம்.
கூட்டணிக்கு இருப்பது இரண்டு முகம்
என்று கண்டனம் தெரிவித்து ஈழமாணவர் பொதுமன்றம் (G.U.E.S) ஜே.ஆரின் வருகையை இயக்கங்கள் எதிர்த்தன. புலிகள் தமது பாணியில் எதிர்ப்பு தெரிவித்து விட்டனா.
பாலத்தில் குண்டுகள்
1982ம் ஆண்டு செப்படம்பர் 26ம் திகதி ஜே.ஆர் யாழ்பாணம் சென்றார். அதே தினத்தில் யாழபாணத்தில் காரைநகரில் உள்ள பொன்னாலை பாலத்தில் வெடிகுண்டுகளை புதைத்துவிட்டு காததிருந்தனர் புலிகள்.
அந்த பாலத்தின் வழியாகத்தான் காரைநகர் கடற்படைமுகாமை சேர்ந்த கடற்படையினர் யாழ்.நகருக்கு வரவேண்டும.
ரோந்து நடவடிக்கைக்காகவும், குடிநீர் எடுத்துச் செல்லவும் கடற்படை வாகனங்கள் அந்த பாலம் வழியாக வந்து செல்வதுண்டு.
அன்றும் வரிசையாக கடற்படை வாகனங்கள் பாலம் வழியாக வந்துகொண்டிருந்தன.
நேரம் அதிகாலை 6.30 மணி. குண்டுகளை வெடிக்கவைத்ததில் சிறு தவறு.
கடற்படை வாகனங்கள் தப்பிக் கொண்டன. பாலம் பெரும் சேதமடைந்தது. குண்டுகள் வெடித்த சத்தம் மூன்று மணிநேரம் தொடர்ந்து கேட்டது.
குறி தவறியபோதும் ஜே.ஆருக்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பாக அந்த நடவடிக்கை அமைந்தது.
இலங்கை படையினருக்கு எதிராக முதலாவது நிலக்கண்ணி வெடித்தாக்குதல் முயற்சியாகவும் அது அமைந்தது.
அந்த தாக்குதல் தோல்வியில் முடிந்ததால் மற்றொரு பாரிய தாக்குதலுக்கு திட்டமிட்டனர் புலிகள்.
தாக்குதலுக்கு தலைமை தாங்கும் பொறுப்பு சார்ல்ஸ் அன்ரனி என்னும் சீலனிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து வரும்…