இந்த மேற்குலகம் இருக்கிறதே, அதன் இராஜதந்திரம் விசித்திரமானது. ஒரு நாட்டைப் பிடிக்கவில்லையா? அந்த நாட்டை இல்லாதொழிக்க முனையும். அதற்காக பல வழிகளை அனுசரிக்கும்.
அழிக்க விரும்பும் நாடு பலசாலியாக இருந்து விட்டால் போதும். அதற்கு எதிரியாகத் திகழும் நாடொன்றை வைத்து காரியத்தை நிறைவேற்ற முனையும். பலசாலி நாட்டின் ஆற்றல், சிறிய நாட்டின் பலவீனம் என்பதைப் பற்றியெல்லாம் மேற்குலகிற்கு கவலையில்லை.
சிறிய நாடு சிதைந்தாலென்ன, இல்லாதொழிந்தால் என்ன, பலசாலிக்கு சவால் விடுக்க முனைந்தால் போதும். இந்த நோக்கத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும்.
பலசாலிக்கு எதிராக சிறிய நாட்டைத் திருப்பி விடும் முயற்சியில் ஆயுதமோதல் ஏற்படலாம். அந்த சமயத்தில், சிறிய நாட்டின் மனித உரிமைகள் பற்றியும் பலசாலியின் மனித உரிமை மீறல்கள் பற்றியும் மேற்குலகம் பேசும்.
பிரச்சினை எல்லை மீறிச் செல்லும் சமயத்தில், சமாதான உடன்படிக்கைகளைத் திணிக்கும். தம்மை ஒட்டுமொத்த உலகின் பாதுகாவலனாக சித்தரித்துக் கொள்ள முனையும்.
நெருக்கடியைத் தீர்க்கின்ற ஆற்றல் இல்லாத சமாதான உடன்படிக்கை முறிந்து போகும் சந்தர்ப்பத்தில், பலசாலியை வில்லனாக சித்தரிப்பது மேற்குலகின் இராஜதந்திரம்.
ரஷ்யா என்ற ஜாம்பவானின் காலடியில் உள்ள உக்ரேனிய பிரச்சினையும் இதனைப் போன்றது தான். உக்ரேனைப் பயன்படுத்தி ரஷ்யாவை இல்லாதொழிப்பது மேற்குலகின் நோக்கம்.
இதற்காக முதலில் மொழி என்ற ஆயுதம் பிரயோகிக்கப்பட்டது. கிழக்கில் ரஷ்யாவையும், மேற்கில் ஐரோப்பாவையும் கொண்டுள்ள உக்ரேன்.
இங்கு உக்ரேனிய மொழி பேசுபவர்கள் மேற்கிலும், ரஷ்ய மொழி பேசுபவர்கள் கிழக்கிலும் செறிந்துள்ளனர். இந்த மக்கள் மத்தியில் மொழி என்பது உணர்வுபூர்வமான விடயம்.
இதன் காரணமாக, மொழியின் அடிப்படையில் உக்ரேனிய தேசியவாதத்தைத் தூண்டி விடுவதன் மூலம், மேற்கில் வாழும் உக்ரேனியர்களை கிழக்கில் செறிந்துள்ள ரஷ்ய வம்சாவளிகளுக்கு எதிராக திருப்பி விட்டமை மேற்குலகின் சாணக்கியம்.
மொழி என்ற உணர்வின் அடிப்படையில் மேற்கில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஜனநாயகத்திற்கான போராட்டம் என்ற அடைமொழியிட்டு, அதனை ரஷ்ய சார்புடைய உக்ரேனிய தலைவருக்கு எதிராக திருப்பி விட்டதையும் ஞாபகப்படுத்தலாம்.
தமது நலன்களை நிறைவேற்றக்கூடிய தலைவர்களை உக்ரேனின் ஆட்சிபீடத்தில் ஏற்றி, அவர்களின் ஊடாக ரஷ்யாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கச் செய்தமை உக்ரேனிய நெருக்கடிக்கு காரணம்.
மேற்குலகின் வெற்றிகரமான பிரித்தாளும் நெருக்கடி உக்ரேனிய தேசத்தை கிழக்கு – மேற்காக பிளவுபடுத்தியதுடன் நில்லாமல், உக்ரேனிய தேசியவாதிகளுக்கும் ரஷ்ய வம்சாவளி உக்ரேனியர்களுக்கும் இடையிலான பகைமையைத் தூண்டியது.
இந்தப் பகைமை ஆயுதமோதலாக பரிணமித்த வேளையில், மேற்குலகம் உக்ரேனிய தேசியவாத அரசாங்கத்தின் படைகளுக்கு ஆயுதம் வழங்கியது. கிழக்கில் வாழும் ரஷ்ய வம்சாவளி குழுக்களை ரஷ்ய ஜனாதிபதி ஆயுதங்கள் மூலம் வலுவூட்டினார்.
இரு தரப்பு பொது எல்லையில் படைகள் குவிக்கப்பட்டன. சண்டை தீவிரமானது. ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்குகிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மேற்குலகம் விளாடிமிர் புட்டினுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்தியது.
ரஷ்ய ஜனாதிபதி வேறு விதத்தில் காய்களை நகர்த்தி, உக்ரேனிய தேசியவாதத்தை விரும்பாத பிராந்தியங்களின் சுதந்திரக் கோரிக்கைகளை வலுவூட்டினார்.
இதன் காரணமாக, உக்ரேனிய பொருளாதாரத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தக்கூடிய கிரைமியா சுதந்திரப் பிரடகனம் செய்தது.
கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ள புட்டின் முனைந்த சமயத்தில், டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் போன்ற பிரதேசங்களில் வாழ்பவர்களும் தமக்கு சுதந்திரம் வேண்டும் என்றார்கள்.
உக்ரேனிய ஆட்சியாளர்கள் ‘ரஷ்ய சார்புடைய பிரிவினைவாதிகளுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கையை’ ஆரம்பித்தார்கள்.
பொது எல்லைகளுக்கு படைகளை அனுப்பிய ரஷ்யா, உக்ரேனிய படைகளுக்கு எதிராக போராடும் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி செய்தது.
இரு தரப்புகளுக்கும் இடையிலான சண்டை எல்லை மீறியது. கடந்த பத்து மாதங்களுக்குள் ஐயாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பலியானார்கள். பத்து இலட்சம் பேர் வரை இடம்பெயர்ந்தார்கள்.
உக்ரேனின் ஆயுதமோதல் புவியியல் எல்லைகளைத் தாண்டி, ஐரோப்பா முழுவதும் பெருந்தாக்கம் செலுத்த முனைந்த சமயத்தில் ஐரோப்பிய நாடுகள் விழித்துக் கொண்டன எனலாம்.
ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை வலுப்படுத்துவதற்காகவேனும் உக்ரேனிய நெருக்கடி தொடர வேண்டுமென அமெரிக்கா சிந்தித்தவேளையில், பிரச்சினை தீவிரம் பெறுமானால் ரஷ்யாவில் இருந்து கிடைக்கும் எரிபொருள் இல்லாமல் போகலாம் என ஐரோப்பிய நாடுகள் அச்சம் கொண்டன.
இம்முறை மேற்குலகம் பிளவுபட்டது. ரஷ்யாவை பலவீனப்படுத்துவதற்காக தாம் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம், தமக்கு எதிராகத் திரும்பியிருப்பதை மேற்குலகம் உணர்ந்து கொண்டது.
தமது பலவீனத்தை மறைப்பதற்காக ஐரோப்பிய நாடுகள் கையிலெடுத்த ஆயுதம் தான் சமாதான உடன்படிக்கை.
ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான ஸ்தாபனம் என்ற அமைப்பின் ஊடாக கடந்த செப்டெம்பர் மாதம் முதல் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
உக்ரேனிய அரசாங்கமும், தமது பிராந்தியங்களுக்கு சுதந்திரம் கோரும் ரஷ்ய சார்புக் குழுக்களும் 12 அம்ச சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.
இந்த சமாதான உடன்படிக்கை மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படக்கூடிய அளவிற்கு எளிதானதாக களநிலவரம் இருக்கவில்லை.
தமது பிராந்தியங்களுக்கு சுதந்திரம் கோரும் கிழக்கு உக்ரேனிய அமைப்புக்கள் ஐரோப்பிய அமைப்பையோ உக்ரேனிய அரசாங்கத்தையோ நம்பத் தயாராக இருக்கவில்லை.
இவை போர்க்களத்தில் தமக்கிருந்த வலுவான நிலையைப் பயன்படுத்தி சண்டையை ஆரம்பித்ததால், ஜனவரி மாதம் சமாதான உடன்படிக்கை தகர்ந்தது.
உக்ரேன் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை என்பதை அறிந்து கொண்ட ஐரோப்பியத் தலைவர்கள், ஆயுத மோதலின் தீவிரத்தை உணர்ந்து மீண்டுமொரு சமாதான உடன்படிக்கையை வரைந்தார்கள்.
இந்த முயற்சியில் ஜேர்மன் ஜனாதிபதி அஞ்சலா மேர்க்கலும், பிரான்ஸின் ஜனாதிபதி பிரன்சுவா ஹொல்லந்தேயும் அதீத அக்கறை காட்டினார்கள். அதன் விளைவாக, பெலரூஸ் தலைநகரில் கடந்த வாரம் மற்றொரு சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில், அஞ்சலா மேர்க்கல், பிரன்சுவா ஹொல்லந்தே ஆகியோர் மாத்திரமன்றி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், உக்ரேனின் ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோ ஆகியோரும் பங்கேற்றார்கள். இது மிகவும் முக்கியமான தருணமாக நோக்கப்பட்டது அல்லது சித்தரிக்கப்பட்டது.
சமாதான உடன்படிக்கை போர் நிறுத்தத்தை முன்மொழிகிறது. போர் நிறுத்தம் சனிக்கிழமை நள்ளிரவு அமுலாகியிருக்க வேண்டும்.
பொது எல்லையில் இருந்து ஆயுதங்களை அப்புறப்படுத்துவது அடுத்த அம்சம். இரு தரப்புக்களும் பிடித்து வைத்துள்ள கைதிகளை விடுதலை செய்வது, சண்டை பிடித்தவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதும் மற்றைய அம்சம்.
சுதந்திரம் கோரும் பிரதேசங்கள் மீது உக்ரேன் விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கி, அங்குள்ள மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது பற்றியும் சமாதான உடன்படிக்கையில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரம் கோரும் பிரதேசங்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் உக்ரேனில் அரசியல் யாப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் யோசனை கூறப்பட்டுள்ளது.
முன்னைய சமாதான உடன்படிக்கையில் இருந்த சில குறைபாடுகள் புதிய உடன்படிக்கையில் நீக்கப்பட்டுள்ளன. நிபந்தனைகளை நிறைவேற்ற கால வரையறைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
முதலில் போர் நிறுத்தத்தை அமுலாக்கக்கூடிய களநிலவரம் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் கிடையாது என்பது முக்கியமான விடயம்.
இரண்டாவதாக, போர் நிறுத்தத்தை அமுலாக்குவதற்குப் பொறுப்பான தரப்புக்களின் ஈடுபாடு என்ற விடயமும் இருக்கிறது.
மின்ஸ்க் உடன்படிக்கையில், ரஷ்ய ஜனாதிபதியோ, உக்ரேனிய தலைவரோ கைச்சாத்திடவில்லை. மாறாக, அவர்களின் பிரதிநிதிகள் கைச்சாத்திட்டார்கள். புட்டினும், பொரஷென்கோவும் கைகுலுக்கிக் கொண்டது உண்மை தான்.
வேறு பக்கம் பார்த்துக் கொண்டு தான் இருவரும் கைகுலுக்கினார்கள். போர் நிறுத்த உடன்படிக்கையின் சாதக பாதகங்கள் பற்றி பத்திரிகையாளர்களுக்கு விபரித்துக் கூறிய சமயத்திலும் வெவ்வேறு அறைகளில் தான் இருவரும் இருந்தார்கள்.
இது உக்ரேனிய தேசத்தில் வலிந்து திணிக்கப்பட்ட பிரச்சினையின் மூலம் இரு சமூகங்கள் எந்தளவு தூர விலகியிருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டியது.
பரஸ்பர நம்பிக்கையின்றி போர் நிறுத்த உடன்படிக்கையின் அம்சங்களை அமுலாக்குவதில் உள்ள சிரமங்களையும் பிரதிபலித்தது.
மறுபுறத்தில், இந்தப் போர் நிறுத்த உடன்படிக்கையின் முழுப்பொறுப்பும் ரஷ்யாவைச் சார்ந்ததென சித்தரிக்கும் முயற்சிகள் ஆரம்பம் தொட்டு மேற்கொள்ளப்பட்டன.
போர் நிறுத்தம் பொய்க்குமானால், உக்ரேனியப் படைகளுக்கு ஆயுதங்களை வழங்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்த கருத்துக்களைக் குறிப்பிடலாம்.
உடன்படிக்கையில் கிழக்கு உக்ரேனிய கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை கைச்சாத்திடச் செய்யும் பொறுப்பு ரஷ்ய ஜனாதிபதியைச் சார்ந்தது என்று மேர்க்கல் அம்மையார் கூறியதையும் சற்று ஆழமாக நோக்க வேண்டும்.
இதன்மூலம், உடன்படிக்கை முறியும் பட்சத்தில் அதற்குக் காரணம் ரஷ்யா எனக்கூறி, விளாடிமீர் புட்டின் மீது பழிபோடுவது மேற்குலகின் நோக்கமாக அமைந்துள்ளது.
ஒரு பலசாலி தேசத்தை பலவீனப்படுத்துவதற்காக இன்னொரு தேசத்தை பகடைக்காயாக பயன்படுத்திய மேற்குலகின் இராஜதந்திரம், இன்று 52 இலட்சம் மக்கள் வாழும் பிரதேசத்தை போர்க்களமாக மாற்றியிருக்கிறது.
இவர்களின் வாழ்க்கையில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளில் இதய சுத்தியுடன் செயற்படாமல், இன்னொரு தடவையும் மேற்குலகம் தவறான வழியில் செல்லுமானால் 52 இலட்சம் என்ற எண்ணிக்கை பல மடங்கு உயரலாம் என்பதில் சந்தேகம் கிடையாது.
-சதீஷ் கிருஷ்ணபிள்ளை-