இலங்கையின் திருகோணமலை கடற்படை முகாமில் 700 பேர் இரகசியமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த முகாம் ‘கோத்தா முகாம்’ அழைக்கப்பட்டிருந்ததாகவும் கிடைத்த தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.
அந்தப் படைத்தளத்தில் 35க்கும் மேற்பட்ட குடும்பங்களும் இரகசியமாக ஒன்றுக்கொன்று தொடர்பின்றியும், வெளியுலகத்திற்குத் தெரியாத வகையிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நம்பகமான சிலரிடம் இருந்து கிடைத்த தகவல்களை அடுத்தே, இந்த விடயங்களை நாடாளுமன்றத்தில் தான் வெளிப்படுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
‘இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது விடுதலை செய்யப்படாமலும் இருக்கலாம்.
ஆனால், இத்தகைய முகாம் ஒன்று இருந்ததா, அங்கு அவ்வாறு ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்களா, அவ்வறாயின் அங்கு யார் யாரெல்லாம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதைக் கண்டறிந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்’ என்றும் அவர் கூறினார்.
இந்த 700 பேரும் ‘கோத்தா முகாம்’ என்ற பெயர் கொண்ட ஒரு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்தவர்களினால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது என்றும், அங்கிருந்தவர்களுக்கு ட்ரக் வண்டிகளில் நாளாந்தம் உணவு கொண்டு செல்லப்பட்டதாகவும் தனக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் கடத்தப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், அகதி முகாம்களில் இருந்து படையினரால் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக காணாமல் போயிருப்பவர்கள் பற்றி விசாரணை செய்யும் குழுவுக்கு மக்கள் சட்டப்படி முறையிட்டிருக்கின்றார்கள்.
‘அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அந்தக் குழு இன்னும் கண்டறியவில்லை. அதன் விசாரணைகள் தொடர்பான தகவல்களோ அல்லது இடைக்கால அறிக்கையோ வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் இவ்வாறு 700 பேர் இரகசியமான ஓரிடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்ற தகவலை உண்மையென்றே நான் நம்புகிறேன்’ என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டம்-ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருப்பதாகவும் பிரேமச்சந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
வியாழனன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, அதில் அரச தரப்பில் கலந்து கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோரின் கவனத்திற்கும் இந்த விடயத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும், பிரதமரும் இது குறித்து விசாரணைகள் நடத்துவதாக தமக்கு உறுதியளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தப் பிரச்சனை தொடர்பில் அரசாங்கத் தரப்பின் கருத்துக்கள் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை.
திருகோணமலையில் உள்ள “கோத்தா’ முகாமில் வெளியுலகத் தொடர்புகள் அற்ற நிலையில் 700 க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்த கோத்தா முகாம் தொடர்பில் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற குற்றச்செயலுக்குப் பலியாக்கப்பட்டோர், சாட்சிகளுக்கான உதவி மற்றும் பாதுகாப்பு தொடர்பான சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலே இதனைத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேலும் கூறுகையில் ;
தமிழர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ள நிலையில் அவர்களில் பலர் நாட்டின் பல்வ÷று பகுதிகளிலுள்ள இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவே எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
திருகோணமலையிலுள்ள கோத்தா தடுப்பு முகாமில் வெளியுலகத் தொடர்புகள் அற்ற வகையில் 700 க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த கோத்தா தடுப்பு முகாம் மிகவும் இரகசியமான முறையில் பாதுகாக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.
எனவே இந்த கோத்தா முகாம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான ஜோன் அமரதுங்க உடனடிக் கவனம் எடுத்து அந்த முகாம் தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும். அங்கு அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 700 க்கும் மேற்பட்டோர் யார் என்பது தொடர்பில் பகிரங்கப்படுத்த வேண்டும்.
இதேபோல் திருகோணமலையிலுள்ள கடற்படைத் தளத்திலும் வெளியுலகத் தொடர்புகள் இல்லாத வகையில் 35 குடும்பங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் ஒரு சில குடும்பங்கள் பின்னர் விடுக்கப்பட்டுள்ளன. எனவே இக் குடும்பங்கள் தொடர்பான விபரங்களும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். இந்தப் புதிய அரசு உருவாக தமிழ் மக்களும் பாரிய பங்களிப்பு செய்துள்ளனரென்ற வகையிலும் இலங்கையில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களுடன் நாம் இணைந்து செயற்படுகின்றோமென நீங்கள் கூறுவது உண்மையானால் மேற்குறிப்பிட்டவற்றுக்கான விசாரணையை உடனடியாக ஆரம்பித்து தமிழ் மக்களுக்கு பதில் வழங்குமாறு கோருகின்றேன் என்றார்.
– See more at: http://www.thinakkural.lk/article.php?local/ehyfljonrd3334331316d4ef14604xekevb44682092a006307b9ae3ayeu2q#sthash.yaGW7Kyg.dpuf