கொழும்பில் கப்பம் கோரிக் கடத்திய 28 தமிழ் இளைஞர்களைப் படுகொலை செய்த, மூன்று உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 9 சிறிலங்கா கடற்படையினர் கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நேவி சம்பத் இந்த படுகொலைகளின் முக்கிய சந்தேக நபர் என்று கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட பல தமிழ் இளைஞர்களிடம் இருந்து கப்பம் பெறப்பட்ட பின்னர், அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கடத்தல்கள் 2008ம் ஆண்டுக்கும், 2011ம் ஆண்டுக்கும் இடையில் கொழும்பின் கொட்டாஞ்சேனை, புளூமென்டல் வீதி, கல்கிசை, வெள்ளவத்த, பம்பலப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.
இவர்களில், கல்கிசையில் கடத்தப்பட்ட ஐந்து இளைஞர்களும், கொட்டாஞ்சேனையில் கடத்தப்பட்ட தந்தையும் மகனும் உள்ளடங்கியுள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் திருகோணமலை மற்றும் கொழும்பில் உள்ள சைத்திய வீதி கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்தப் படுகொலைகளுடன் தொடர்புடைய கடற்படை அதிகாரி ஒருவரின். அறை சோதனைக்குள்ளாக்கப்பட்ட போது, அங்கிருந்து கடத்தப்பட்டு கொல்லப்பட்ட ஐந்து இளைஞர்களின் அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தப் படுகொலைகளுடன் சம்பந்தப்பட்ட ஒரு அதிகாரி, மேலதிக பயிற்சிக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் என்றும், அவரை கொழும்புக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 28 பேரில் 11 பேர் பற்றிய விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
அதேவேளை, சிறிலங்கா கடற்படையில் உள்ள உயர் அதிகாரிகளும், சட்டத்துறையில் உள்ளவர்களும் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
வெலிக்கடை கைதிகள் படுகொலைக்கு கோத்தாவே பொறுப்பு: பொன்சேகா
20-02-2014
வெலிக்கடை கைதிகள் படுகொலைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே பொறுப்பு என முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் திகதி இடம்பெற்ற மோதலில் 27 கைதிகள் உயிரிழந்திருந்ததுடன், 20க்கும் அதிகமான கைதிகளும், விசேட அதிரடிப் படையினரும் காயமடைந்தனர்.
சில கைதிகளை கொலை செய்யும் நோக்கில் கோத்தபாய ராஜபக்ஷ தனக்கு விசுவாசமான சில அதிரடிபடையினரை பயன்படுத்தி இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.