நாய்க்கு வழங்க வேண்டிய ஊசியொன்றை நோயாளர் ஒருவருக்கு ஏற்றிய செய்தியொன்று களுத்துறை பகுதியில் பதிவாகியுள்ளது.

களுத்துறை ஹினட்டியங்கல பகுதியைச் சேர்ந்த, நாய்க்கடிக்குள்ளான 84 வயதான ஒருவர் களுத்துரை தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியரின் பரிந்துரைகளுக்கு அமைவாக, வைத்தியசாலைக்கு அருகிலுள்ள மருந்தகமொன்றில் குறித்த தடுப்பூசியை அவர் கொள்வனவு செய்துள்ளார்.

இந்த தடுப்பூசியை வைத்தியசாலை ஊழியர்கள், நோயாளருக்கு ஏற்றியுள்ளனர்.

இதுபற்றி சம்பவத்தை எதிர்கொண்டவரின் மகன் கூறியதாவது;

இரண்டு தடுப்பூசிகள் எனது தந்தைக்கு ஏற்றப்பட்டன. அடுத்த நாளும் அந்த தடுப்பூசியை ஏற்ற வேண்டும் என்று கூறினார்கள்.

அதனை கொள்வனவு செய்து தருமாறும் கூறினார்கள். 7 நாட்களுக்குப் பின்னர் அந்த தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதற்காக அந்த பற்றுச்சீட்டை நான் மருந்தகத்திற்குக் கொண்டு சென்று வழங்கினேன்.

இது மிருகங்களுக்கு ஏற்றப்படும் தடுப்பூசி என அப்போதே மருந்தகத்திலுள்ள ஒரு நபர் எனக்கு கூறினார். பின்னர் வைத்தியசாலைக்கு சென்று இந்த விடயத்தை கூறினேன்.

அவர்கள் அந்த தடுப்பூசியை பார்த்து விட்டு, ஆம் தவறுதலாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என கூறினார்கள். இது மிருகங்களுக்கு ஏற்றப்படும் தடுப்பூசி என்றும் கூறினார்கள்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதிர்பார்க்க முடியாத இந்த சம்பவம் தொடர்பில், நோயாளரது புதல்வர் களுத்துரை தேசிய சுகாதார ஆய்வு நிறுவனத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்படி, இந்த தனியார் வைத்தியசாலையிலுள்ள குறித்த தடுப்பூசிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து சுகாதார அதிகாரி வைத்தியசாலைக்கு சமூகமளித்துள்ளார்.

சம்பவத்தை எதிர்கொண்டவரின் மகன் மேலும் கூறியதாவது;

தம்மால் பிழையொன்று நேர்ந்துள்ளதாக வைத்தியர் மற்றும் அங்கிருந்த தாதியர்கள் அனைவரும் தவறை ஏற்றுக்கொண்டனர். தற்போது வழமையான நிலையில் உள்ளார்.

இதற்கும் மேலான தவறொன்று இழைக்கப்பட்டிருக்குமானால், எம்மால் எடுக்கக்கூடிய நடவடிக்கை என்ன?.. இந்த சம்பவம் குறித்து முன்னெடுக்கக்கூடிய நியாயமான விசாரணைகளை நடாத்தி, நியாயத்தைப் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

Share.
Leave A Reply