பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலகக்கிண்ண தொடரின் இன்றைய பத்தாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் கிரைஸ் சேர்ச் மைதானத்தில் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணியின் கெயில், ஸ்மித் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். கெயில் 4 ஓட்டங்களிலும், ஸ்மித் 23 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் பிராவோ, ராம்டின் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பிராவோ 49 ஓட்டங்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். மறுமுனையில் இருந்த ராம்டின் (51) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
கடந்த போட்டியில் சதம் அடித்த சிமோன்ஸ் அரைசதம் அடிக்க, ரசல் அதிரடியாக விளையாடி 13 பந்திற்கு 42 ஓட்டங்கள் சேர்க்க, மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 310 ஓட்டங்களை குவித்தது.
இதைத் தொடர்ந்து 311 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.
நசீர் (0), ஷீஹசட் (1), யூனிஸ் கான் (0), ஹரீஸ் சொஹாலி (0) என அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான்.
1 ஓட்டங்களை மட்டும் எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. பின்னர் வந்த அணித்தலைவர் மிஸ்பாவும் 7 ஓட்டங்களில் நடையை கட்ட, 25 ஓட்டங்கள் என்ற நிலையில் 5 முக்கிய விக்கெட்டுகளை பாகிஸ்தான் பறிகொடுத்தது.
அடுத்து ஜோடி சேர்ந்த சோகிப் மக்சூட், உமர் அக்மல் பாகிஸ்தானை சரிவில் இருந்து மீட்க போராடினர். சோகிப் 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து 59 ஓட்டங்களில் உமர் அக்மல் வெளியேறினார்.
அப்ரிடி 28 ஓட்டங்களில் அவுட்டானார். வஹாப் (3), சொஹாலி கான் (1), முகமது இப்ரான் (2) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 39 ஓவர்களிலே சகல விக்கெட்டையும் பறிகொடுத்து 160 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
13 பந்தில் 42 ஓட்டங்கள் (3 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்த ரசல் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.